2019 ஆம் ஆண்டு உலக அளவில் நடைபெற்ற  “வேர்ல்டு பெஸ்ட்” டேலன்ட் ஷோவில் பங்கேற்று தனது அசாத்திய திறமையால் அதன் டைட்டில் வின்னராக மாறியவர் லிடியன் நாதஸ்வரம். அதன் பிறகு ஏராளமான புகழ் வெளிச்சத்தை பார்த்த லிடியனுக்கு அண்மையில் கிடைத்த பரிசுதான் இளையராஜா மாணவன் என்ற அந்ததஸ்து. 


இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு இருந்த லிடியன் நாதஸ்வரம், “ இளையராஜா அவர்கள் நான் அவரின் முதல் மற்றும் ஒரே மாணவன் என்று கூறினார். தினமும் எனக்கு அவர் அன்புடனும் அரவணைப்புடனும் இசையை பயிற்றுவிக்கிறார். இதனை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி” என்று குறிப்பிட்டு இருந்தார். இந்தப்பதிவு சமூக வலைதளங்களில் வைரலானது.






இசை உலகில் மிகவும் கண்டிப்பானவராக பார்க்கப்படும் இளையராஜாவின் மாணவனாக சேர எப்படி வாய்ப்புக்கிடைத்தது குறித்து லிடியன் நாதஸ்வரத்தையே தொடர்பு கொண்டு பேசினேன். மிக்ஸிங் வொர்க்கில் பிஸியாக இருந்த லிடியன் அதை அப்படியே வைத்து விட்டு பேச ஆரம்பித்தார்.




ஜெயிக்கிற வரைக்கும் வேகமா ஓடணும் ஜெயிச்சதுக்கு அப்புறமா இன்னும் வேகமா ஓடணும்ணு சொல்லுவாங்க.. இப்ப எப்படி போகுது உங்கள் டே ஷெடுல்? 


டே ஸ்டார்ட் ஆனதுல இருந்து எண்ட் வரைக்கும் மியூசிக்லதான் இருக்கன். காலையில் இளையராஜா அங்கிளிடம் மியூசிக் கத்துக்க போவேன். அப்புறமா வீட்டுக்கு வந்து மியூசிக் கம்போஸ் பண்ற வேலைகளை பார்ப்பேன். இது தவிர எப்போதும் போல மியூசிக் ப்ராக்டிஸ் நடந்துக்கிட்டே இருக்கும். 


இளையாராஜா ரொம்ப கண்டிப்பானவர்.. அவர்கிட்ட மாணவனாக சேருவதற்கான வாய்ப்பை எப்படி உருவாக்கினீர்கள்? 


நாங்கதான் அவர்கிட்ட முதல்ல கேட்டோம். இதுக்காக கிட்டத்தட்ட ஒரு வருஷமா வெயிட் பண்ணோம். இளையராஜா சார் கூட இருக்குற ஸ்ரீராம் சார்கிட்ட அப்பா இது பத்தி தொடர்ந்து பேசிக்கிட்டே இருப்பாங்க. நானும் அப்பாவும் அங்க போகுதும்போதெல்லாம் இந்தக் கோரிக்கைய வைச்சிக்கிட்டே இருந்தோம்.




அப்படி ஒருதடவை அவர்கிட்ட இது பத்தி கேக்குறப்ப, அவர் , “ நீ என் கூட இருந்து என்ன பண்ணப்போற, யாரும் இங்க வரமாட்டாங்கணு சொன்னாரு.. ஆனா ஒரு கட்டத்துல அவர் என்ன மாணவனா ஏத்துக்கிட்டாரு.. இப்ப 2 வாரமா காலையில கிளாஸ் போயிட்டு இருக்கேன். இது எனக்கு கிடைச்ச மிகப் பெரிய ஆசீர்வாதமா நினைக்கிறேன். 


 “நீதான் என் முதல் மற்றும் ஒரே மாணவன்” அப்படிணு இளையராஜா சொன்னப்ப உங்களுக்கு எப்படி இருந்துச்சு?  


கிளாஸ் போன 10 வது நாள்ல, இளையராஜா சார் என்கிட்ட, “நீதான் என்னுடைய ஒரே ஸ்டூடண்ட். இதுக்கு முன்னாடி இளையராஜாவுக்கு எந்த ஸ்டூடண்டும் இல்ல.. இனியும் இருக்க மாட்டாங்க.. இத நீ எந்த பேட்டியில வேணும்னாலும் சொல்லிக்கோன்ணு” சொன்னாரு. அவர் அப்படி சொன்னப்ப, எங்கப்பா சந்தோஷத்துல பறந்துட்டு இருந்தாரு..


என்ன கத்துக்கிட்டு இருக்கீங்க? 


வேர்ல்டு மியூசிக் கத்துக்கிட்டு இருக்கேன். நான் என்ன சந்தேகம் கேட்டாலும், அதுக்கு இளையராஜா அங்கிள் பதில் சொல்லுவாரு. கிளாஸூக்கு போகும் போது கித்தார் எடுத்துட்டு போவேன். அவர்  அதுல சில டெக்னிக்ஸ் சொல்லி தருவாரு. சில சமயம் கீ போர்டு எடுத்துட்டு போவேன்.. அதுல சில டெக்னிக்ஸ சொல்லித் தருவாரு.. இப்படி ஹெல்தியான மியூசிக் டிஸ்கஷனாத்தான் இருக்கும். 


2 வாரத்துல இளையராஜாக்கிட்ட இன்னும் நெருக்கமாகி இருப்பீங்க? என்ன விஷங்களெல்லாம் கத்துக்கிட்டீங்க? 


மியூசிக்கல அவர்கிட்ட இருக்குற டிசிப்ளின கத்துக்கிட்டேன். அதுல அவருக்கு இருக்குற ஞானத்த பார்த்து பிரம்மிச்சு போயிட்டேன். குறிப்பா இப்ப வெஸ்டன் மியூசிக்ல. இன்னைக்கு என்ன இருக்கோ அது வரைக்கும் அவர் அப்டேட்டடா இருக்காரு. ஹங்கேரில ஒரு தியரி எக்ஸாம் இருந்துச்சு. அந்த எக்ஸாம முடிக்க ஒருத்தருக்கு 2 மணி நேரமாவது ஆகும். ஆனால் இளையராஜா அங்கிள் அதை 45 மணி நேரத்திலேயே முடித்து விட்டார். 


அவர் உருவாக்கிய திருவாசகம் ஆல்பத்தில் கூட, சிம்பனி ஆர்க்கெஸ்ட்ராவோடு அதை ரெக்கார்டு செய்திருப்பார்.   ‘நீதானே என் பொன் வசந்தம்’ படத்திலும் அவர் ஒரு சிம்பனிக் சவுண்டை கொடுத்தார். ஆனால் அதை யாரும் ஃபாலோ பண்ணல.


மோகன்லாலின் ‘பரோஸ்’ படத்திற்கு இசையமைச்சிட்டு இருக்கீங்க.. எப்படி வந்துருக்கு? 


இந்தப் படம் வரலாறு சம்பந்தப்பட்ட படம். சில்ரன் சப்ஜெக்ட்.  3டி ஃபிலிம்மும் கூட. அதுக்கேத்த மாதிரி மியூசிக் பண்ணிட்டு இருக்கேன்.




மோகன்லால் என்ன அவர் பையன் மாதிரி பாத்துக்குறாரு. என்னோட மியூசிக் அவருக்கு பிடிச்சுருக்கு. 


ஜூ 5 இல் வெளியான அத்கன் சத்கன் படத்தில் நடிச்சீங்க?.. இப்ப ஏதாவது படத்துல நடிக்க கமிட் ஆகிருக்கீங்களா?


இல்ல.. அந்தப்படம் மியூசிக் சப்ஜெக்ட் அப்படிங்கிறதனால நான் போய் நடிச்சேன். என்னோட கவனமெல்லாம் இப்போ மியூசிக்ல மட்டும்தான் இருக்கு.. என்று வேலையை பார்க்க துவங்கி விட்டார்..


இளையாராஜாவிடம்  மகனுக்கு கிடைத்த வாய்ப்பு பற்றி அவரது அப்பா சதீஷிடம் பேசிய போது, “ எங்களுக்கு பெரிய ஆசையெல்லாம் ஒண்ணுமில்ல.. நாங்க எது மேல பக்தியா இருந்தமோ அதுக்கான பலன் எங்களுக்கு கிடைச்சது.




இதுக்கு மேல அவனுக்கு என்ன நடக்கணும்ணு  எனக்குத் தெரியல.. ஆனா அவனுக்கு நிறைய கனவுகள் இருக்கு.. அதனால அவனோட காலத்துக்கு என்னத் தேவையோ அதை அந்த மகான் பிச்சையா போட்டுருவாரு. அத வைச்சுக்கிட்டு நாங்க அடுத்த ஜெனரேஷனுக்கு ரெஸ்பான்ஸிபுளா  அவர மாதிரி இல்லனாலும், அவரோட சிஷ்யன் அப்படிங்கிற பெயரை காப்பாத்திக்கிற அளவுக்கு அவன் மியூசிக்குக்கு பங்களிப்பு செய்வான்” என்றார்.