35 ஆண்டுகளுக்கு முன்பே பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியதேவனாக கமல்ஹாசனை நடிக்க வைக்க மணிரத்னம் நினைத்ததாக நடிகையும், இயக்குனருமான சுஹாசினி(Suhasini) பகிர்ந்துள்ளார். 


தென்னிந்தியாவை மையப்படுத்தி தெற்கின் எழுச்சி என்ற பெயரில் “ABP Southern Rising Submit 2023” என்ற பெயரில் பிரம்மாண்ட கருத்தரங்கு தற்போது சென்னையில் உள்ள பிரபல தாஜ் ஹோட்டலில் நடைபெற்று வருகிறது. இந்த கருத்தரங்கில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், தமிழக அமைச்சர்களான உதயநிதி ஸ்டாலின், பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், நடிகர் ராணா டகுபதி, நடிகை ரேவதி, நடிகை குஷ்பு உள்பட பலரும் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற சுஹாசினி தனது சினிமா அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். 


அதில், “ 40 ஆண்டுகளாக பொன்னியின் செல்வன் படத்தை இயக்க மணிரத்னம் நினைத்து இருந்தார். அதற்காக நான் பொன்னியின் செல்வன் 5 பாகத்தின் புத்தகங்களில் இருந்தும் குறிப்புகள் எடுத்து எடுத்து வைத்து மினி புத்தகம் போடும் அளவுக்கு சேர்த்து வந்தேன். 35 ஆண்டுகளுக்கு முன்பு மணி ரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை எடுத்து இருந்தால் அதில், கமல்ஹாசன் வந்திய தேவனாக நடிக்க வைக்கலாம் என்று நினைத்து இருந்தார். அதேபோல் படத்திற்கு இளையராஜா இசை அமைக்க வேண்டும் என நினைத்திருந்தோம். ஆனால், இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு பொன்னியின் செல்வன் படம் எடுக்கப்பட்டுள்ளது. 


பொன்னியின் செல்வன் 90 சதவீதம் கல்கி எழுதிய புத்தகத்தை அடிப்படையாக கொண்டே எடுக்கப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வன் படத்திற்கு கிடைக்கும் வரவேற்புகள் கல்கியையே சேரும். ஆரம்பத்தில் பொன்னியின் செல்வன் படத்தை எடுக்க வேண்டாம் என நான் மணிரத்னத்திடம் சொல்லி வந்தேன். அதற்கு இருவர் படத்தின் மீதான அரசியல் மீதான விமர்சனத்தால் நான் மிகவும் வருத்தத்தில் இருந்தேன். அந்த படத்திற்கு நான் ஸ்கிரிப்ட் ரைட்டராக இருந்ததால், படத்தின் மீதான எதிர்மறை விமர்சனங்கள் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியது. படத்தில் இருந்த வசனங்கள் பேச்சு வழக்குக்கு எதிராக இருந்ததாக கூறி எதிர்மறை கருத்துகள் வைக்கப்பட்டது. அப்படி இருந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் நான் என்னை நிரூபித்துள்ளேன்” என பேசியுள்ளார்.