ஃபகத் ஃபாசில்


 நடிகர் ஃபகத் ஃபாசில் நடித்துள்ள ‘ஆவேஷம்’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி வெளியான இப்படம் ஐந்து நாட்களில் ரூ.50 கோடி வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளது. ஆக்‌ஷன், காமெடி கலந்த ரங்கா என்கிற கதாபாத்திரத்தில் ஃபகத் ஃபாசில் ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ளார். இப்படியான நிலையில் பொதுவாக மலையாளப் படங்களுக்கு எழும் விமர்சனம் இந்தப் படத்திற்கு எழுந்துள்ளது


போதைப் பழக்கத்தை ஊக்குவிக்கும் சினிமா?


சமீபகாலத்தில் வெளியாகும் மலையாளப் படங்களில் மேல் விமர்சனம் ஒன்று தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகிறது. போதைப்பழக்கத்தையும் மது அருந்துவதையும் மலையாளப் படங்கள் ஊக்குவித்து வருவதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. சமீபத்தில் வெளியாகி ரூ.200 கோடி வசூல் செய்த மஞ்ஞுமெல் பாய்ஸ் படத்தை எழுத்தாளர் ஜெயமோகன் விமர்சித்தத்தைத் தொடர்ந்து இந்த விவாதம் வலுபெற்றுள்ளது.


தற்போது வெளியாகி இருக்கும் ஆவேஷம் படத்திலும் அதீதமாக மது அருந்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இப்படியான நிலையில் நடிகர் ஃபகத் ஃபாசில் போதைப் பழக்கத்தை ஊக்குவிக்கும் படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருவதாக நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள். ஃபகத் ஃபாசில் நடித்து முன்பு வெளியான டிரான்ஸ் மற்றும் தூமம் ஆகிய இரு படங்களும் போதைப் பொருட்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டவை என்பது குறிப்பிடத் தக்கது.


‘நானே புகைப்பிடிப்பேன்’


கடந்த ஆண்டு ஃபகத் ஃபாசில் நடித்து வெளியான படம் தூமம். கன்னட இயக்குநர் பவன் குமார் இயக்கிய இப்படம் எதிர்பார்த்த வெற்றியடையவில்லை. புகைப்பழக்கத்தை மையமாக வைத்து இப்படம் உருவானது. இப்படியான நிலையில் இப்படம் குறித்த கேள்வி ஒன்றுக்கு ஃபகத் ஃபாசில் பதிலளித்துள்ளார். “நான் புகைப்பிடிக்கும் பழக்கமுடையவன். அப்படி இருக்கும்போது புகைப்பிடிக்க வேண்டாம் என்று இன்னொருவரை நான் எப்படி சொல்ல முடியும்? சில கதைகள் திரைப்படமாக்க ஏற்றவை அல்ல. அப்படியான ஒரு கதை தான் தூமம். இந்த மாதிரியான கதைகள் மக்களின் புரிதலுக்கு அப்பாற்பட்டவை” என்று அவர் கூறியுள்ளார்.


வேட்டையன் 


ஜெய் பீம் படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் வேட்டையன் படத்தில் தற்போது ஃபஹத் நடித்து வருகிறார். ரஜினிகாந்தின் 170ஆவது படமாக உருவாகும் இதில் அமிதாப் பச்சன், ராணா, துஷாரா விஜயன் , மஞ்சுவாரியர் , ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் வேட்டையன் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். வேட்டையன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்தில் தான் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக ஃபகத் ஃபாசில் முன்னதாகத் தெரிவித்துள்ளார்.