லியோ திரைப்படத்தில் நடிகர் விஜய் சண்டைக் காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்துள்ளதாக படத்தில் நடித்த நடிகர் ஆத்மா பேட்ரிக் தெரிவித்துள்ளார்.


லியோ


லோகேஷ் கனகராஜ் இயக்கி விஜய் நடித்திருக்கும் லியோ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இணையதளத்தில் படுவைரலாகி வருகிறது. விஜய், த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், கெளதம் மேனன், மிஸ்கின், மன்சூர் அலிகான் உள்ளிட்டவர்கள் இந்த ட்ரெய்லரில் இடம்பெற்றிருந்தார்கள்.


வருகின்ற அக்டோபர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது லியோ திரைப்படம். லியோ படத்தின் கதை என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் பலவிதமான யூகங்களை முன் வைத்து வருகிறார்கள். இந்நிலையில் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் ஆத்மா பேட்ரிக், நடிகர் விஜய் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.


குளிரில் என்னைக் கட்டிப்பிடித்தார்


லியோ திரைப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றது. இதன் காரணத்தினால் கடும் குளிரால் படக்குழுவினர் பல சிரமங்களை எதிர்கொண்டு இருக்கிறார்கள். இந்தக் குளிரிலும் நடிகர் விஜய் முழு ஈடுபாட்டுடன் நடித்தார் என்று படக்குழு அவரை பாராட்டியது. இந்த குளிர்தான் ஆத்மா பேட்ரிக் மற்றும் விஜய்க்கு இடையில் அழகான ஒரு தருணத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.


“ லியோ படத்தில்  நடிக்க என்னை ஸ்டண்ட் மாஸ்டர் அன்பறிவு பரிந்துரைத்தார். படத்தில் நான் அந்தோணி தாஸாக  நடித்திருக்கும் சஞ்சய் தத் கும்பலைச் சேர்ந்தவன் என்பதால் நல்ல பெரிய உடலமைப்புக் கொண்ட ஒருவர் இந்தக் கதாபாத்திரத்திற்கு தேவைபட்டதால் என்னை இந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்தார்கள்.


நானும் விஜய்யும் நடிக்கும் ஒரு காட்சியின் படப்பிடிப்பின் போது குளிர் அதிகமாக இருந்தது. அப்போது என் உடல் கதகதப்பாக இருந்ததால் விஜய் என்னிடம் வந்து என்னை அவரை கட்டிப்பிடிக்கச் சொன்னார். அந்தத் தருணம் மிக அழகாக இருந்தது. எனக்கு இந்த வாய்பைக் கொடுத்த லோகேஷ் கனகராஜூக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் “ என்று நடிகர் ஆத்மா பேட்ரிக் கூறியுள்ளார்


பொதுவாகவே தன்னுடன் நடிக்கும் சக நடிகர்கள் எல்லார் மீதும் அக்கறை எடுத்துக் கொள்பவர் நடிகர் விஜய் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் ஒவ்வொரு முறையும் விஜய்யைப் பற்றி அவருடன் நடித்த நடிகர்கள் தெரிவிக்கும் போது அது பலரது மனதை கவர்கிறது. ஆத்மா பேட்ரிக் விஜயைப் பற்றி இப்படி கூறியிருக்கிறார் “ஒரு சின்ன காட்சியில் விஜய் சார் உங்களை ஒரு கம்பால் அடிக்கப் போகிறார் என்றால் முதலில் அதை அவர் தன் கையில் அடித்து சோதித்து பார்த்தபின் தான் அந்த காட்சியில் நடிப்பார்”.


அந்த கழுதைப்புலி யார் ?


லியோ திரைப்படத்தில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் ஒர் காட்சி என்றால் விஜய் கழுதைப்புலியுடன் சண்டைப் போடும் காட்சி. இந்த காட்சி குறித்து ஆத்மா பார்ட்ரிக் தெரிவிக்கையில் “லியோ படத்தின் போஸ்டர் வெளியான போது எல்லாரும் அந்த கழுதைப் புலி யார் என்று கேட்டார்கள். விஜய் அந்த  போஸ்டரில் அடிப்பது என்னைதான் என்று நான் எல்லா சமூக வலைதளங்களிலும் பதிவிட்டு வந்தேன். ஆனால் அந்த கழுதைப் புலி ஒருவேளை ஹெரோல்டு தாஸாக  நடித்திருக்கும் அர்ஜூனாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.