மகாராஜா


விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமாக உருவான மகாராஜா படம் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி வெளியானது. நிதிலன் ஸ்வாமிநாதன் இப்படத்தை இயக்கியுள்ளார். அனுராக் கஷ்யப் , அபிராமி , நட்டி , சிங்கம் புலி , முனிஷ்காந்த் , மம்தா மோகந்தாஸ்  உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். 


தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்தவர்களை கண்டுபிடித்து பழிவாங்கும் கதையே மகாராஜா. கதை வழக்கமானதாக இருந்தாலும் இப்படத்திற்கு நிதிலன் ஸ்வாமிநாதன் திரைக்கதை எழுதியிருந்த விதமே படத்தை ப்ளாக்பஸ்டர் வெற்றியாக மாற்றியது. நான் லீனியர் முறை கதைசொல்லல் , எதிர்பார்க்காத திருப்பங்கள் , உணர்ச்சிவசமான காட்சிகள் என மகாராஜா படம் தமிழ் , தெலுங்கு ரசிகர்களிடையே பெரும் பாராடுக்களை வாரி குவித்தது. திரையரங்கைத் தொடர்ந்து ஓடிடியில் வெளியான மகாராஜா ஆச்சரியப்படும் விதமாக இந்தி ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது. ஓடிடியில் வெளியான நாள் முதல் மகாராஜா படத்தின் காட்சிகளை இந்தி மீம் கிரியேட்டர்ஸ் புகழ்ந்து வருகிறார்கள். இந்தி ரசிகர்களிடையே இப்படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு காரணமாக இப்படத்தை  இந்தி ரீமேக் செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.


மகாராஜா இந்தி ரீமேக்கில் ஆமிர் கான்






மகாராஜா படத்தின் இந்தி ரீமேக் உரிமத்தை பாலிவுட் நடிகர் ஆமிர் கான் வாங்கியுள்ளதாகவும் விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தில் அவரே நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக சூர்யா நடித்த கஜினி படத்தின் இந்தி ரீமேக்கில் ஆமிர் கான் நடித்திருந்தார். இப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. பாலிவுட்டின் மிகச் சிறந்த நடிகர் மற்றும் வசூல் மன்னனான ஆமிர் கான் மகாராஜா படத்தின் ரீமேக்கில் நடிக்க இருப்பது தமிழ், இந்தி என இருதரப்பு ரசிகர்களையும் உற்சாகப் படுத்தியுள்ளது. இப்படம் குறித்த அதிகாரப் பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.