பாலிவுட்டில் பிரபலமான ’கான்’ நடிகர்களுள் ஒருவர் ஆமிர்கான் . இவருக்கு இந்தியா முழுவது ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ரீனா தத்தா என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட ஆமிர்கான் கடந்த 2002 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார். இந்நிலையில் தன்னுடன் லகான் திரைப்படத்தில் பணியாற்றிய , உதவி இயக்குநரான கிரண் ராவை கடந்த 2005 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இருவரும் 15 ஆண்டுகால மண வாழ்க்கையில் இருந்து பிரிய இருப்பதாக கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில் “நாங்கள் ஒன்றாக இருந்த காலக்கட்டத்தில், ஒருவருக்கு ஒரு அன்பாகவும், மரியாதையுடனும் இருந்தோம், கணவன் மனைவி உறவில் இருந்து பிரிந்தாலும் நல்ல நண்பர்களாக இருந்து எங்கள் மகனை வளர்போம், அவனுக்கு சிறந்த பெற்றோராகவும் எங்கள் கடமைகளை நிறைவேற்றுவோம், எங்கள் முடிவை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறோம் “ என குறிப்பிட்டிருந்தனர்.
இந்த செய்தி வெளியாகிய அடுத்த நாள் முதலே பாலிவுட்டின் பிரபல நடிகை பாத்திமா சனா ஷேக்தான் விவாகரத்திற்கு காரணம் என ட்விட்டரில் நெட்டிசன்கள் பேசத்தொடங்கிவிட்டனர். பாத்திமா சனா ஷேக்குடன் ஆமிர்கான் நெருங்கி பழகியது பிடிக்காமல்தான் கிரண் ராவ் விவாகரத்து பெற்றதாகவும் பாலிவுட் வட்டாரத்தில் கிசு கிசுக்கத்தொடங்கினர்.
தங்கல் திரைப்படத்தில் அமீர்கானுக்கு மகளாக நடித்தவர் பாத்திமா சனா ஷேக்.இந்த படத்திற்கு பிறகு கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘ தக்ஸ் ஆஃப் இந்துஸ்தான்’ திரைப்படத்திலும் ஆமிர்கானுடன் நடித்திருந்தார். நெட்ஃபிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியான ‘லூடோ’ என்ற வெப் சீரிஸில் ஒரு குழந்தைக்கு தாயாக , வெகுளியான கதாபாத்திரத்தில் நடித்து பலரின் பாராட்டை பெற்றார் பாத்திமா சனா ஷேக் என்பது குறிப்பிடத்தக்கது.
'தக்ஸ் ஆஃப் இந்துஸ்தான்’ படத்தின் போதுதான் ஆமிர்கானுக்கும் இவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. பாத்திமா சனா ஷேக்கிற்கு தற்போது 29 வயதாகும் நிலையில் 59 வயதாகும் ஆமிர்கானை விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இருதரப்பும் செய்து வருகிறார்களாம் . விரைவில் இது குறித்த அறிவிப்பை பொதுவெளியில் கூறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆமிர்கான் விவாகரத்திற்கு பிறகு உடனடியாக மூன்றாவது திருமணத்தில் முனைப்பு காட்டுவது அவரது ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை உண்டாக்கியுள்ளது. பாத்திமா சனா ஷேக் மற்றும் ஆமிர்கான் ஆகியோர் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. எது எப்படியோ இருவரில் யாராவது ஒருவர் மௌனம் கலைத்தால் மட்டுமே , உண்மை என்ன என்பது ரசிகர்களுக்கு உறுதிபட தெரியவரும்.