இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா,  மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் நடந்து முடிந்துள்ளது. கிட்டத்தட்ட 45 நாட்கள் கழித்து  வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. 45 நாட்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை எப்படி பாதுகாப்பார்கள் ? வாக்குபெட்டிகள், எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது?  என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.


ஸ்ட்ராங் ரூம்   ( Strong Room - வாக்குப்பெட்டிகள் வைத்துள்ள காப்பறை )


சுதந்திரமாகவும் , நியாயமாகவும்  அனைவருக்கும் சம வாய்ப்பாகவும் தேர்தல் நடத்த வேண்டும் என்பதே தேர்தல் ஆணையத்தின் முக்கிய  அம்சமாக உள்ளது. அவ்வகையில்   வாக்குப்பதிவுக்குப் பிறகு,   வாக்கு இயந்திரங்களை பாதுகாப்பது முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. அவ்வாறு வாக்கு இயந்திரங்களை பாதுகாக்கும் இடத்திற்கு பெயர்தான், பொதுவாக ஸ்ட்ராங் ரூம் என அழைக்கப்படும் வன் காப்பறை.  இந்த இடத்தில்தான் வாக்கு இயந்திரங்கள் பாதுகாக்கப்படுகிறது.




ஸ்ட்ராங் ரூம் எப்படி இருக்கும் ?


3 வகையான ஸ்ட்ராங்   ரூம்கள் இருக்கும் . வாக்கு இயந்திரங்களை பாதுகாக்கும் காப்பறை ( Polled EVM Strong Room ) இதில் வாக்குகள் பதிவான   மின்னணு இந்திரங்கள்,  வாக்குப்பதிவின்பொழுது பயன்படுத்தப்பட்ட  ஆவணங்கள், பாதுகாத்து வைக்கப்படும் , மற்றொன்று ( Repair Strong Room ) வாக்குப்பதிவு  நடைபெறாத  வேலை செய்யாத  வாக்கு இயந்திரங்கள் பாதுகாக்கப்படும் ,  மற்றொன்று ( Reserve Strong Room ) இதில்    பயன்படுத்தப்படாத  வாக்கு இயந்திரங்கள்   வைக்கப்பட்டிருக்கும் . இவை அனைத்தும் ஒரே இடத்திலே அமைந்திருக்கும்.


ஒற்றைக் கதவு முறை


பதிவான வாக்கு இயந்திரங்கள் வைக்கும் அறையில் ஒரே ஒரு கதவுகள் மட்டுமே இருக்க வேண்டும். அப்படி அந்த அறையில் கூடுதலாக மற்றொரு கதவு இருந்தால் ,  அந்தக் கதவுகள்  சுவர் எழுப்பப்பட்டு அடைக்கப்பட வேண்டும் அல்லது இரும்பு தகரங்கள் மூலம் அடைக்கப்பட்டு இருக்க வேண்டும். அதேபோன்று அறையில் இருக்கும் அனைத்து ஜன்னல்களும் உள்பக்கமாக முழுமையாக அடைத்திருத்தல் வேண்டும் .



ஸ்ட்ராங் ரூம் இரண்டு பூட்டுகள் கொண்டு பூட்டப்படும்,  ஒரு பூட்டு சாவி  தேர்தல் நடத்தும் (RO ) அலுவலரிடம், மற்றொரு சாவி சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல்  நடத்த அலுவலரிடம் ( ARO ) இருத்தல் வேண்டும்.  இரண்டு பூட்டுக்களும் சீல் வைக்கப்பட வேண்டும்,  சீல் வைக்கும் பொழுது அரசியல் கட்சி பிரதிநிதிகள் அங்கு  இருக்கலாம். அவர்கள் விருப்பப்பட்டால் ,பூட்டிற்கு வைக்கப்படும் சீல் மீது  தங்கள் முத்திரைகளை பதிவு செய்து கொள்ளலாம் (    எடுத்துக்காட்டு :  அடையாளக் குறியாக  அவர்கள் போட்டிருக்கும் மோதிரத்தை பதிய வைத்துக்கொள்ளலாம்,  இதன் மூலம்   சீல் உடைக்கப்படாத உறுதி செய்ய முடியும் ) .


மூன்று அடுக்கு பாதுகாப்பு என்றால் என்ன ?


வாக்கு இயந்திரங்கள் பாதுகாக்கப்படும் இடத்தில்  மூன்று அடுக்கு பாதுகாப்பு  தேர்தல் ஆணையத்தின் தீவிர கண்காணிப்புக்கு செயல்படும்.    முதல் அடுக்கு பாதுகாப்பு வளையத்தில் (   அதாவது வாக்கு இயந்திரங்கள்  வைக்கப்பட்டுள்ள அறையின் அருகே )   துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.   இரண்டாவது அடுக்கில் தமிழ்நாடு ( அந்தந்த மாநில ) சிறப்பு காவல் படை அல்லது ஆயுதப்படை போலீசார்  பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். மூன்றாம் அடுக்கில் உள்ளூர் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்,  அதே போன்று மூன்றாவது அடுக்கில் தேவை ஏற்பட்டால் போக்குவரத்து காவலர்களும் பணியில் இருப்பார்கள். பாதுகாப்பு நெறிமுறைகளை கண்காணிக்கும் பணிகள்    சம்பந்தப்பட்ட தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஆகியோர்  கண்காணிக்க வேண்டும்.


24 மணி நேர கண்காணிப்பு


 காவல் கட்டுப்பாட்டு அறை மற்றும் கண்காணிப்பு அறை ஆகியவை ஸ்ட்ராங் ரூம் அருகே 24 மணி நேரமும் இயங்க வேண்டும். பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்க அரசு அதிகாரியும் 24 மணி நேரமும் பணியாமத்தப்பட வேண்டும்,வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேமிக்கப்பட்டுள்ள இடத்தை  ஆய்வு   செய்ய அதிகாரிகள் அல்லது  அரசியல் பிரமுகர்கள்  வந்தால் அவர்களுடைய வாகனங்கள் வாகனம் நிறுத்தும் இடத்தில் நிறுத்திவிட்டு,  ஸ்டாங் ரூம் வரை நடந்துதான் வர வேண்டும். அவ்வாறு யார் ஆய்வுக்கு வந்தாலும், அவர்களுடைய பெயர்,முகவரி உள்ளிட்ட அனைத்து தகவல்களை பதிவு செய்ய வேண்டும். ஆய்வு மேற்கொள்வதையும் வீடியோ பதிவு மேற்கொள்ளப்பட வேண்டும்.




 சிசிடிவி  கண்காணிப்பு


 போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும்  ஸ்ட்ராங் ரூம்  பாதுகாப்பை கண்காணிக்க  பிரதிநிதிகளை நியமிக்கலாம்.  அனைத்து பிரதிநிதிகளும் ஒரு   தங்க அனுமதிக்கப்படுவார்கள்,  அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் ஏற்பாடு செய்து தர வேண்டும்.  அதேபோன்று அவர்கள்  தங்கும் இடத்தில் 24 மணி நேரமும் சிசிடிவி காட்சிகள்  பார்க்கும் வகையில் ஏற்பாடு   தரப்படும். 


பாதுகாப்பு அம்சங்கள் ?


 இதுதவிர்த்து  தீ மற்றும் வெள்ளம் அபாயம் இல்லாத பகுதியில் , ஸ்டாங் ரூம் அமைக்கப்பட வேண்டும்.  எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை   பயன்படுத்துவது தடைவிதிக்கப்பட்டுள்ளது,  அதேபோன்று கட்டுமான அமைப்பு  பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.  24 மணி நேரம் மின்சாரம்  உள்ளிட்டவற்றையும் உறுதி செய்யப்பட வேண்டும்  .




வாக்கு எண்ணிக்கை


அதேபோன்று வாக்கு  இயந்திரங்கள் பாதுகாக்க வைக்கப்பட்டுள்ள அறை அருகே  வாக்கு எண்ணிக்கை இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அப்படி வாக்கு என்னும் மையம் சற்று தொலைவில் இருந்தால், வாக்கு இயந்திரங்கள் கொண்டு செல்வதற்கு தனி பிரத்யேக வழியை ஏற்படுத்த வேண்டும். அதேபோன்று வாக்குப் பெட்டிகளை வாக்கு என்னும் மையத்திற்கு கொண்டு செல்லும்பொழுது ஆயுதம் ஏந்திய போலீசார்   உடன் பாதுகாப்பிற்கு வரவேண்டும். அதேபோன்று   வழி முழுவதும் சிசிடிவி காட்சிகள் பொருத்தப்பட்டு இருக்க வேண்டும்.  


தடுப்புகள் அமைத்து வழிகள் உருவாக்க வேண்டும்,அவ்வாறு உருவாக்கப்படும் வழிகள் நேரடியாக  ஸ்ட்ராங் ரூமில் இருந்து வாக்கு என்னும் மையத்திற்கு செல்ல வேண்டும் இடையில் எந்தவித,  இடர்ப்பாடுகளும் இருக்கக் கூடாது.  இது போன்ற பாதுகாப்பு அம்சங்கள் தொடர்ந்து 45 நாட்களும் கடைபிடிக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.