மனிதனின் உணர்வுகளான அன்பு, பாசம், ஏக்கம், தவிப்பு, காதல், குற்ற உணர்வு, இழப்பு என பலவித உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் பல படங்கள் தமிழ் சினிமாவில் வெளிவந்துள்ளது. இதுபோன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக ஆயிரக்கணக்கான பாடல்களும் தமிழ் சினிமாவில் வந்துள்ளது.
இளையராஜா காலத்தை கடந்த இசை மேதையாகவும், தலைமுறைகளை கடந்து அவரது இசையை மக்கள் ரசிப்பதற்கும் காரணம் மனிதனின் உணர்வுகளை அவரது இசையால் கடத்தியதே ஆகும். அந்த இசைக்கு உயிர் சேர்க்கும் வகையில் வரிகளும் அமைந்தது காலத்தை கடந்து அந்த பாடல்களை நம் மனதில் நிலைநிறுத்தியது.
ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு
அந்த வகையில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான வைதேகி காத்திருந்தாள் படத்தில் இடம்பெற்றிருந்த ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு பாடல் காலம் கடந்து மனதில் நிற்கும் பாடல். ஆண் எப்போதுமே பெண்ணைச் சார்ந்தே வாழ்பவன். ஒரு ஆண் தனது வாழ்வில் சார்ந்து வாழ்வது இரண்டு பெண்களைத்தான். ஒன்று தாய், மற்றொன்று தாரம். தங்கை, மகள் என வேறு, வேறு உறவில் பெண்கள் ஆண் வாழ்வில் அன்புக்குரியவராக இருந்தாலும், எந்த ஒரு வறட்டு கௌரவமும் இல்லாமல் ஒரு ஆண் சார்ந்து வாழும் இரண்டு பெண்கள் அவனது தாயும், தாரமும் மட்டுமே.
இதனால்தான் ஒரு ஆண் தாயையோ அல்லது மனைவியையோ இழந்த பிறகு அவன் வாழ்க்கையையே இழந்துவிட்டதாக உணர்கிறான். குறிப்பாக, இள வயதில் தாயையும், இள வயதில் மனைவியையும் இழக்கும் ஆணின் வலி மிக, மிக கொடுமையானது. குறிப்பாக, தாயை இழந்த பிறகு தவித்து நிற்கும் ஆண், தனக்கு பின் மனைவி என்ற பெண் வருவாள் என்ற நம்பிக்கையுடன் வாழ்க்கையில் இருப்பான்.
யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு:
ஆனால், மனைவியையோ அல்லது தன் வாழ்நாள் முழுவதும் இவளுடன்தான் வாழப்போகிறோம் என்ற கனவுடன் நினைத்திருக்கும் பெண்ணையோ இழக்கும் ஆணின் பரிதவிப்பு மிக மிக மோசமானது. இளவயதில் மனைவி அல்லது திருமணம் செய்து கொள்ள ஆசைப்படும் பெண்ணை இழக்கும் ஆணின் வலியை வெளிப்படுத்தும் விதமாக “ராசாத்தி உன்னை காணாத” என்ற பாடல் அமைந்திருக்கும்.
குறிப்பாக, அந்த பாடலில் இடம்பெற்ற
“ யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு..
நீதானே கண்ணே நான் வாங்கும் மூச்சு..
வாழ்ந்தாக வேண்டும் வா வா கண்ணே”
என்ற வரிகள் துணையை இழந்தவனின் வலிகளை ரத்தின சுருக்கமாக மிக மிக அழகாக வெளிப்படுத்தியிருக்கும். பொதுவாக, ஒரு ஆண் தனது மனைவியை இழந்துவிட்டால் அவன் முற்றிலும் முடங்கி போனவனாக மாறிவிடுவான். அது இள வயதாக இருந்தாலும் சரி, முதுமையை எட்டிய பிறகாக இருந்தாலும் சரி. அந்த இழப்பு அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியாததாக இருக்கும். அதனால், அவன் மற்றவர்களுடன் இயல்பாக பேசுவதை நிறுத்திவிடுவான். அவன் எண்ணம் முழுவதும் அந்த பெண் மட்டுமே ஆட்கொண்டிருப்பாள். அவளுடன் இருந்த நாட்களையே அவனது மனம் அசைபோட்டுக் கொண்டிருக்கும். குறிப்பாக, தனிமையில் இரவுகளில் அவனை தூங்கவே விடாத அளவிற்கு அந்த நினைவுகள் மிக ஆழமாக இருக்கும். அதையே மாமேதை வாலி “யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு” என்று அழகாக எழுதியிருப்பார்.
தாங்காத ஏக்கம் போதும்.. போதும்:
வாலி இந்த பாடலில் எழுதிய ஒவ்வொரு வரிகளும் இழப்புகளை சுமக்கும் இதயத்திற்கு ஆறுதலாக அமைந்திருக்கும். குறிப்பாக, பாடலின் இறுதிகட்டத்தில்
“அம்மாடி நீதான் இல்லாத நானும்..
வெண்மேகம் வந்து நீந்தாத வானம்..
தாங்காத ஏக்கம்.. போதும்.. போதும்..”
வரிகள் மீண்டும் ஒரு முறை அவள் வந்துவிட மாட்டாளா? அவளுடன் வாழ ஆசைப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்துவிட மாட்டோமா? அத்தனையும் மாறிவிடாதா? என்ற ஆணின் ஏக்கத்தை மிக அழகாக வெளிப்படுத்தியிருக்கும்.
வாலியின் வரிகளில் காயம்பட்ட இதயத்திற்கு ஆறுதலாக அமைந்திருக்கும் இந்த பாடலை பிரபல பாடகர் ஜெயச்சந்திரன் பாடியிருப்பார். அடுத்த தொடரில் வேறு ஒரு பாடலுடன் சந்திக்கலாம்.
மேலும் படிக்க: ஆஹா என்ன வரிகள் 1: நாயகியின் காதலில், தமிழை பெருமைப்படுத்திய யுகபாரதி!
மேலும் படிக்க: ஆஹா என்ன வரிகள் 2: "மெத்த வாங்குனேன் தூக்கத்தை வாங்கல..." ஆறுதலாக வருடும் பூங்காற்று திரும்புமா!