இசைப்புயல் எனக் கொண்டாடப்படும் ஏ.ஆர். ரஹ்மான் (A.R. Rahman) தன்னுடைய தனித்துவமான இசையால் சர்வதேச அளவில் பிரபலமானவர். உலகெங்கிலும் அவருக்கு கோடான கோடி ரசிகர் பெருமக்கள் உள்ளனர். விளம்பர படங்களுக்கு இசையமைத்து வந்தவருக்கு சினிமாவில் அறிமுகம் கொடுத்தது 'ரோஜா' திரைப்படம். முதல் படத்திலேயே வித்தியாசமான இசை மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தவர். 


 



தமிழ் மட்டுமின்றி அனைத்து தென்னிந்திய மொழிகள் மற்றும் பிற மொழிகளுக்கும் இசையமைத்துள்ளார். "ஸ்லம்டாக் மில்லியனர்” படத்திற்காக ஆஸ்கர் விருது பெற்று இந்தியாவை பெருமைப்படுத்தினார். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஏ.ஆர். ரஹ்மான் இசைத்துறையில் கோலோச்சி வரும் நிலையில், அவரது மகள்  இசையைத் தாண்டி வேறு ஒரு துறையில் சாதனை செய்துள்ளார். 


 



ஏ.ஆர். ரஹ்மான் - ஷெரினா பானு திருமணம் 1995ஆம் நடைபெற்றது. இந்தத் தம்பதியினருக்கு கதீஜா, ரஹீமா மற்றும் அமீன் என இரு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். ஏற்கெனவே ஏ.ஆர். ரஹ்மானின் மூத்த மகள் கதீஜா மற்றும் அமீன் ஆகிய இருவரும் தந்தையின் வழியே இசைத்துறையில் இசையமைப்பாளராகவும் பாடகராகவும் கலக்கி வருகிறார்கள். மகள் கதீஜா எந்திரன், இரவின் நிழல், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட திரைப்படங்களில் பாடியுள்ளார். மேலும் சர்வதேச படமான 'லயன்ஸ்' படத்திற்கு இசையமைத்துள்ளார். மகன் அமீன் 'ஓ காதல் கண்மணி', 'தில் பேச்சாரா' உள்ளிட்ட படங்களில் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


 


 






 


இந்த இசைக் குடும்பத்தில் மற்றொரு வாரிசான ஏ.ஆர். ரஹ்மானின் இரண்டாவது மகள் ரஹீமா இசையில் இருந்து விலகி சமையல் துறையில் சாதித்து செஃப் பட்டத்தை பெற்றுள்ளார். துபாயில் கேட்டரிங் படிப்பு மேற்கொண்டு வந்த ரஹீமா தன்னுடைய படிப்பை முடித்துள்ளார். மகளின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட ஏ.ஆர். ரஹ்மான் மிகவும் பெருமிதத்துடன் "நான் என் மகளை நினைத்து பெருமை அடைகிறேன்" என தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தி உள்ளார். ஏ.ஆர். ரஹ்மானின் இந்த பதிவுக்கு லைக்ஸ்களை சரமாரியாக குவித்து வருகிறார்கள் அவரின் ரசிகர்கள்.