பொன்னியின் செல்வன் ஆந்தம் வெளியீட்டு விழா நேற்று சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தின் விளையாட்டு திடலில் நடைபெற்றது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட படக்குழுவினர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
காலேஜூக்கு போனதில்ல...
ஏ.ஆர்.ரஹ்மான், நபைலா இணைந்து பாடிய இந்தப் பாடலில், வாளை சுழற்றி அரியணையில் அமர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் நடித்த காட்சிகள் வரவேற்பைப் பெற்றன. இந்நிலையில் விழாவில் கலந்து கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான் பேசியதாவது:
"என் வாழ்க்கையில் நான் கல்லூரிக்கு செல்லவே இல்லை. எனவே எந்த காலேஜூக்கு கூப்பிட்டாலும் நான் உற்சாகமடைந்து விடுவேன். நீங்கள் தான் இந்தியாவின் எதிர்காலம்.
மீம் மெட்டீரியல் கொடுக்க நினைச்சேன்
விக்ரம் உங்களுக்கு இருக்கும் தைரியம் எனக்கு வேண்டும். உங்கள் கதாபாத்திரத்தைப் பார்த்து இன்ஸ்பயர் ஆகி நான் கத்தி எல்லாம் எடுத்து தமாஸ் செய்துள்ளேன். நீங்க பாட்டு பாடறீங்க, நான் கத்தி எடுத்துட்டேன்” என்றார்.
அப்போது மேடையின் கீழ் இருந்து “நீங்கள் கத்தி பிடிப்பது அழகாக இருக்கிறது” என விக்ரம் பேச, சிரித்தபடி தொடர்ந்து பேசினார் ஏ.ஆர்.ரஹ்மான். “நான் மீம் மெட்டீரியல் கொடுக்க நினைத்தேன். அதனால் தான் அதை செய்தேன்” என நகைச்சுவையுடன் ரஹ்மான் பேசினார்.
பின்னணி இசை
தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்தின் இசை பற்றிப் பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், ”பொன்னியின் செல்வன் பின்னணி இசையை 3, 4 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டோம். கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கினோம்.
எனக்கு பிடிக்காது அல்லது மணி சாருக்கு பிடிக்காது. பின் வேறு வேறு இசை கம்போஸ் செய்து கொஞ்சம் லண்டன், பாலி, துபாய், சென்னை, மும்பை என வெவ்வேறு இடங்களில் பணியாற்றினோம்.
பொன்னியின் செல்வன் ஆந்தம் செய்ய வேண்டும் என நினைத்து பண்ணவில்லை. படத்தில் மெய்னாக காதல் பாடல்களும், மெலடி பாடல்களுமே இருப்பதால், இது போன்ற பாடல் ஒன்று வேண்டுமென மணி சார் கேட்டார்.
இந்தியில் தான் முதலில் இந்தப் பாடலை கம்போஸ் செய்தோம். இந்தியில் குல்சார் பாட்டெழுத, அர்ஜித் சிங் பாடினார். ’தமிழில் நீ பாடு’ என மணிரத்னம் கூறினார். அதனால் பாடினேன்” எனப் பேசினார்.
முழுவீச்சில் ப்ரொமோஷன் பணிகள்
ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா இந்தப் பாடலை படம் பிடித்துள்ள நிலையில், ஷாத் அலி இயக்கியுள்ளார். பிருந்தா நடனம் அமைத்துள்ளார்.
முன்னதாக பொன்னியின் செல்வன் 2 படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா, சென்ற மார்ச் 29 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது.
வரும் ஏப்ரல்.28ஆம் தேதி பொன்னியின் செல்வன் 2 வெளியாக உள்ள நிலையில் படக்குழுவினர் முழு வீச்சில் ப்ரொமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.