விழுப்புரம் : விழுப்புரத்தில் ஆர் எஸ் எஸ் இயக்கத்தினர் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் படி சீருடை அணிந்து அமைதியான முறையில் போலீஸ் பாதுகாப்புடன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர்.
 

தமிழகத்தில் ஆர் எஸ் எஸ் இயக்கத்தினரின் ஊர்வலம் இன்று 45 இடங்களில் நடைபெற உச்ச நீதிமன்றம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து அனுமதி வழங்கியது. அதனை தொடர்ந்து ஆர் எஸ் எஸ் இயக்கத்தினரின் ஊர்வலம் நடைபெறும் இடங்களில் பலத்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டிருந்தனர். இந்நிலையில் விழுப்புரத்தில் ஆர் எஸ் எஸ் இயக்கதின் மாவட்ட தலைவர் நந்தகுமார் தலைமையில் 500க்கும் மேற்பட்ட ஆர் எஸ் எஸ் அமைப்பினர் கலந்து கொண்டு உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் படி அமைதியான முறையில் ஊர்வலம் நடைபெற்று முடிந்தது.

 

ஆர் எஸ் எஸ் ஊர்வலமானது பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி நகரின் முக்கிய வீதியான நான்கு முனை சந்திப்பு காமராஜர் வீதி காந்தி வீதி வழியாக பழையபேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. ஊர்வலத்தின் போது பாஜகவை சார்ந்தவர்கள் ஆர் எஸ் எஸ் ஊர்வலத்தில் பங்கேற்ற காவி வண்ண கொடிக்கு மலர் தூவி வழி நெடுகிலும் வரவேற்பு அளித்தனர். ஆர் எஸ் எஸ் ஊர்வலம் காரணமாக 500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 

ஆர் எஸ் எஸ் பேரணியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு இல்லாமல், மொழி, கலாச்சாரம் மற்றும் பிற குழுக்களின் உணர்வுகளை எந்த வகையிலும் புண்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது என உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு படி சீருடை அணிந்து ஆர் எஸ் எஸ் அமைப்பினர் ஊர்வலத்தை தொடங்கி முடித்தனர். இந்த ஊர்வலத்தில் 500 க்கும் மேற்பட்டோர் ஆர் எஸ் எஸ் அமைப்பினர் சீருடை அணிந்து பங்கேற்றனர்.