சென்னை பனையூரில் நேற்று இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் 'மறக்குமா நெஞ்சம்' என்ற பெயரில் இசை கச்சேரி ஒன்று நடைபெற்றது. இந்த கச்சேரிக்கு டிக்கெட் வாங்கிய பலரும் உள்ளே அனுமதிக்கப்படாமல் கூட நெரிசலில் வெளியே தத்தளித்தனர். கிழக்கு கடற்கரை சாலை எங்கும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பெரிய குளறுபடியே நடந்தது. இந்த விவகாரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 


 



ரசிகர்கள் கண்டனம் :


கோல்ட், பிளாட்டினம், சில்வர் என விலையுயர்ந்த டிக்கெட்டுகளை வாங்கிய ரசிகர்கள் கூட உள்ளே அனுமதிக்கப்படாமல் நிகழ்ச்சியை பார்க்காமல் வீடு திரும்பியது அவர்களுக்கு மிகுந்த மன உளைச்சலை கொடுத்துள்ளது. கூட்ட நெரிசலில் சிக்கி தவித்த பலருக்கும் மூச்சு திணறல், அடிபட்டு பல குழந்தைகள் காணாமல் போகும் நிலையும் ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது.  நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பண ஆசையில் எக்கச்சக்கமாக டிக்கெட்டுகளை விற்றது குறித்து அவர்கள் மீது கண்டனங்களையும் கடுமையான விமர்சனங்களையும் சோசியல் மீடியா  மூலம் முன்வைத்து வருகிறார்கள் ரசிகர்கள். இதனை அடுத்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான ஏசிடிசி நிறுவனம் அவர்களின் சமூக வலைதள பக்கம் மூலம் மன்னிப்பு கோரியுள்ளனர்.  


 



ஏ.ஆர். ரஹ்மான் - அஜித் மீது திரும்பிய கோபம் :


மேலும் வெளியில் நடக்கும் எந்த ஒரு போராட்டம் பிரச்சினை பற்றியும் அறியாமல் மிகவும் சந்தோஷமாக உள்ளே பாடிய ஏ.ஆர். ரஹ்மான் மீதும் ரசிகர்களின் கோபம் திரும்பியது. பல ஆயிரம் ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கி, குழந்தைகள், முதியவர்கள் என அனைவரையும் அழைத்து வந்து அவஸ்தை பட்டு கண்ணீருடன் திரும்பியது தான் மிச்சம் என ரசிகர்கள் கொந்தளித்தனர். ஆனால் நடிகர் அஜித் குடும்பத்தார் மட்டும் விவிஐபி வரிசையில் ஹாயாக உட்கார்ந்து நிகழ்ச்சியை கண்டு ரசித்துள்ளனர். ஆனால் பிளாட்டினம் டிக்கெட் வாங்கிய எங்களால் மட்டும் நிகழ்ச்சியை பார்க்கவே முடியவில்லை என அவர்களின் ஆதங்கத்தை சோசியல் மீடியாவில் கொட்டி தீர்த்து வருகிறார்கள்.


ஏ.ஆர். ரஹ்மான் வேண்டுகோள் :


இந்த சர்ச்சை தொடர்பாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது சோசியல் மீடியா பக்கம் மூலம் தகவல் ஒன்றை போஸ்ட் செய்துள்ளார். டிக்கெட் வாங்கியும் சில எதிர்பாராத துரதிர்ஷ்டவசமான சூழலால் உள்ளே நுழைய முடியாமல் திரும்பியவர்கள் அவர்களின் டிக்கெட் காபி மற்றும் அவர்களின் குறைகளை குறிப்பிட்டு arr4chennai@btos.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அவரின் குறைதீர்க்கும் குழுவினர் முடிந்தவரையில் இந்த பிரச்சினைக்கு தீர்வளிப்பர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். 


ஏற்கனவே இந்த நிகழ்ச்சி கடந்த மாதம் நடைபெற இருந்த நிலையில் கனமழை காரணமாக ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு மாற்றாக தான் நேற்று அந்த இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இரண்டாவது முறையும் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது என்பது தான் வருத்தமான ஒரு செய்தி.