கேட்பவருக்கு புது உலகத்தை திறக்க வேண்டும். இல்லையெனில் பழைய உலகத்தை நினைவுப்படுத்தவேண்டும் அப்படியும் இல்லையென்றால் வெற்றிடத்தை நிரப்ப வேண்டும் அதைத்தான் இசை செய்ய வேண்டும்.
சிலரின் இசை காலம் சென்றாலும் புதிதாக பிறக்கும். 1991 ரோஜா திரைப்படத்தில் ரஹ்மான் புது வெள்ளை மழை பொழிகிறது பாடலை இசையமைத்தபோது அவர் பக்கா இளைஞர். எல்லோரும் டீன் ஏஜ் வயதில் போர்வையை தேடி ஓடிக்கொண்டிருக்க ரஹ்மான் மட்டும் குளிர் கொடுத்தார். அந்தக் குளிர் நம் மன பிரதேசத்தின் ஒட்டுமொத்த ஜீவனையும் இசையாய் பரிணமிக்க வைத்தது.
இளையராஜா இசை வானத்தில் நிகழ்ந்த தமிழின் பேரண்ட வெடிப்பு. ஏ.ஆர். ரஹ்மான் தமிழின் பேரண்ட வெடிப்பை பார் முழுவதும் கொண்டு போய் சேர்த்தவர். இளையராஜாவும் ரஹ்மானும் செய்ததும்தான் இசையின் அடையாளம்.
90S காலக்கட்டத்தில் அனைத்தும் அனைவருக்கும் புதிதாக தெரிந்தது. வழக்கத்தில் இல்லாத சொல்லாடல்களும், வாழ்க்கை முறையும் நிரப்ப ஆரம்பித்த காலக்கட்டது. அந்த காலக்கட்டத்தில் புதிதாக இருந்த அனைத்தும் மக்களுக்கு அந்நியமாக தெரிந்தது. ஆனால் ரஹ்மானின் இசை அன்யோன்யமாக இருந்தது. ஏனெனில் அவரின் இசை நவீனத்தால் மட்டும் நிரம்பியவை அல்ல.
ரஹ்மானின் கம்போஸிசன் எப்போதும் அமைதியில் ஒரு ஆர்ப்பாட்டத்தை நிகழ்த்தும், ஆர்ப்பாட்டத்தில் வெற்றிடத்தை உணர்த்தும், வெற்றிடத்தில் ஒரு உலகத்தை நிறுவும்.
உதாரணமாக ஒரு பாடல், என் சுவாச காற்றே என்ற திரைப்படத்தில், சில் அல்லவா சில் அல்லவா காதல் நயகரா பாடலில், தத்தி ஆடுதே தாவி ஆடுதே தத்தையோட நெஞ்சு என்று ஆரம்பிக்கும் அந்தப் பாடல் இசைக்கு ஒரு நவீன இலக்கணத்தை கொடுத்தது. ஏனென்றால் அந்தப் பாடலை ரஹ்மான் ஒரு கொண்டாட்ட மனநிலையோடு இசையமைத்திருக்க வேண்டும் (அந்த சிச்சுவேஷன் அப்படி).... ஆனால் ரஹ்மான் தான் பயன்படுத்தும் பாடகர்களின் குரலை சற்று சன்னமாக அறிமுகப்படுத்தியிருப்பார்.
தன் உயிரான இசைக்கு குரல் பால் கொடுக்கக்கூடியவர்களில் பாடகர்கள் எப்போதும் முக்கியம் என்பது ஏ.ஆர். ரஹ்மானுக்கு தெரியும். ஆனாலும் அவர் தத்தி ஆடுதே பாடலின் ஆரம்ப குரலை எந்தவித ஆர்ப்பாட்டமுமின்றி அறிமுகப்படுத்தியிருப்பார். அதற்கு காரணம் ஒன்றே ஒன்றுதான் ரஹ்மானுக்கு தன் உயிர் மேல் அவ்வளவு நம்பிக்கை இருக்கிறது.
ரஹ்மானின் எந்தப் பாடலை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள் நிச்சயம் புதியவற்றை விதைத்து செல்லும். எம்ஸ்வியிடமிருந்து இளையராஜா மாறுபட்டார் இளையராஜாவிடமிருந்து ரஹ்மான் புறப்பட்டார். அந்த புறப்பாடு புதிய முயற்சிகளின் தொடக்கம்.. மேடைக்குள் இருந்த இசையை எம்.எஸ்.வியும், ராமமூர்த்தியும் பொதுப்படுத்தினார்கள், இளையராஜா பெரிதுப்படுத்தினார், ரஹ்மான் புதிதுப்படுத்தினார்.
ரஹ்மான் புதிய விதைகளை தூவியர். பாலசந்தருக்கு கர்நாட்டிக் இசை கொடுத்தவர், பாரதிராஜாவுக்கு காட்டு இசையை கொடுத்தவர். 2k கிட்ஸின் மீட்டரை 90ஸ் கிட்ஸ் பிடிக்க முடியாமல் திணறுவதுபோல் இல்லை ரஹ்மான். 80ஸ் கிட்ஸின் பல்ஸையும் அசைத்து பார்த்தவர் அவர். ரஹ்மான் எப்போதும் புதிய வானத்துக்கான தொடக்கம்.
ஓ மரியா என்ற பாடல். அதில் வாலி இப்படி ஒரு வரி எழுதியிருப்பார், “கம்ப்யூட்டரில் காதல் செய்யும் காலம் இனி”. அந்த வரி வெளியானபோது வாலியின் கூற்று பொய்யாகப்போகும் என சிலர் சொன்னதாக கேள்விப்பட்டதுண்டு. ஆனால் வாலி அன்று சொன்னதுதான் இன்று நடந்துகொண்டிருக்கிறது. வாலி அப்படி எழுதி கொடுக்க இசை வாய்க்கால் போட்டுக்கொடுத்தது ரஹ்மான். ரஹ்மான் இசை புயல் இல்லை. அவர் ஒரு இசை தென்றல். அவரது பாடல்கள் அத்தனையும் புயலை தென்றலாய் கொண்டு வருபவை.
உழவன் என்றொரு படத்தில் ராக்கோழி ரெண்டு முழிச்சிருக்கு என்று யேசுதாஸ் பாடிய பாடலை கேட்டு பாருங்கள். யேசுதாஸின் குரல் எப்போதும் கோபுரத்தின் கலசம் போல ஒரு கவசம் போட்டுக்கொண்டு இருக்கும். காட்டுக்குயிலு, தண்ணி தொட்டி போன்ற சில பாடல்களில் மட்டும்தான் யேசுதாசின் குரல் கவசம் உடைத்து காட்டாறாய் மடைமாறியிருக்கும். அதன் பிறகு ராக்கோழி ரெண்டு முழிச்சிருக்கு பாடலில் அவரின் குரல் நள்ளிரவின் காட்டு மயிலாய் தோகை விரித்து ஆடும். அப்படி ஆட வைத்தவர் கானகன் ரஹ்மான்.
ரிதம் படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் ரஹ்மானின் செய்த மேஜிக்கின் உச்சம். பாடல்களைவிட அந்தப் படத்தில் ரஹ்மான் செய்த பின்னணி இசை. ரிதம் படத்தை இன்றுவரை உயிர்ப்போடு ரசிகர்கள் வைத்திருக்க காரணங்களில் ரஹ்மானின் பின்னணி இசையும் ஒன்று. காட்சிக்கு தகுந்தவாறு இசையமைக்காமல் மன சூழலுக்கு தகுந்த இசையை ரஹ்மான் கொடுத்த வரலாறு ரிதம்.
ரஹ்மான் தன்னுடைய ட்யூனில் எந்தவித சமரசமும் செய்துகொண்டதில்லை. நிறைய பாடலாசிரியர்கள் சொல்வதுண்டு ராஜா சாருக்கு அப்புறம் ரஹ்மானுக்கு எழுதுறதுதான் பெரிய கஷ்டம் என்று. ரஹ்மான் வாழ்க்கையை படித்தவர், வலிகளை உணர்ந்தவர், இசையை புதிய எளிமையாக்கியவர்.
எப்போதும் ரஹ்மானை விட்டு நாங்கள் விலகியதில்லை ரஹ்மான் விலகிவிட்டார் என்று அவரது ரசிகர்கள் சமீபமாக கூற கேட்டதுண்டு. ஆனால் ரஹ்மான் அப்படி நினைக்கவில்லை. அவர் யாரிடமிருந்து எங்கு சென்றாலும் தன் விதைகளை மறந்துவிட்டு சென்றதில்லை. மாறாக விருட்சமாக்க முயல்பவர். அதனால் அவர் தற்போது சற்று அந்நியப்பட்டிருக்கலாம். ஆனால் எப்போதும் விலகமாட்டார். கட்டுப்பாடு இல்லாத கடல் ரஹ்மானுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்...
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்