காலம் கடந்து பயணிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தால் நம் வாழ்க்கையின் எந்த காலத்திற்கு செல்ல விரும்புவோம். கடந்த காலத்திற்கு சென்று நடந்த ஒன்றை மாற்றுவோமா? அல்லது எதிர்காலத்திற்கு சென்று நம் வாழ்க்கை எப்படியானதாக இருக்கிறதென்று தெரிந்துகொள்வோமா? அப்படி எல்லாம் நடக்கப் போவதில்லை என்று உள்ளூர ஒரு குரல் கேட்கிறதுதான். ஆனால் இப்படி ஒரு கேள்வி கேட்கப்படும் போது ஒரு கனம் மனம் எண்ணற்ற சாத்தியங்களின் மேல் தாவி கற்பனை செய்யத் தூண்டப்படுகிறது இல்லையா? அந்த ஒரு கிளர்ச்சியினால்தான் இன்று வரை அதிகம் விரும்பப்படும் வகைமையாக டைம் டிராவல் (காலம் கடந்து செல்வது) குறித்த படங்கள் இருந்து வருகின்றன.


கிட்டத்தட்ட உள்ளூர் சினிமாவில் இருந்து உலக சினிமாக்கள் வரை டைம் டிராவல் பற்றிய படங்கள் வெளியாகின்றன. இவற்றில் பெரும்பாலானப் படங்களில் ஒரே மாதிரியான கதைகளை நாம் பார்க்கலாம். ஏதோ ஒரு தொழில்நுட்பத்தால் காலத்தைக் கடந்து செல்லும் வாய்ப்புகள் மனிதர்களுக்கு கிடைக்கிறது. அதைகொண்டு அவர்கள் தங்களது ஆசையினால் ஏதோ ஒரு மாற்றத்தை செய்துவிடுகிறார்கள். பின்பு அதன் விளைவுகளை எதிர்கொள்கிறார்கள். பின் ஒரு பாடத்தைக் கற்றுக்கொண்டு மீண்டு தங்களது தவறுகளை சரிசெய்துகொள்கிறார்கள்.


இந்தக் கதையை தமிழில் வந்த டைம் டிராவல் குறித்தான எல்லாப் படங்களிலும் பார்க்கலாம். தமிழ்ப் படங்களில் டைம் டிராவல் குறித்து ரவிக்குமார் இயக்கிய இன்று நேற்று நாளை திரைப்படமும் விக்ரம் குமார் இயக்கிய 24 திரைப்படமும் போன்ற குறிப்பிடத்தக்க நல்ல முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டிருக்கின்றன. இந்தப் படங்கள் ஏதோ ஒரு வகையில் ஹாலிவுட் அல்லது வேறு ஒரு படத்தின் சாயலில் இருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் ஹாலிவுட்டோ கோலிவுட்டோ எந்த டைம் டிராவல் படமாக இருந்தாலும் சரி அவை எல்லாவற்றிலும் ஒரு படத்தின் சாயல் நிச்சயமாக இருக்கும்.


அந்த ஒரு படத்தைப் பற்றிதான் இந்த கட்டுரையும் ஒவ்வொரு வாரமும் டைம் டிராவல் பற்றிய படங்கள் டைம் டிராவல் என்கிற திரைப்படம் வகைமை எப்போது தொடங்கியது. டைம் டிராவல் பற்றி முதன்முதலாக வந்தப் படம் எது. இத்தனை ஆண்டுகளில் டைம் டிராவல் படங்கள் எந்த மாதிரியான கதைக்களங்களுக்கு மாறியிருக்கின்றன. அவை எந்த மாதிரியான தாக்கங்களை சினிமாவில் ஏற்படுத்தியிருக்கின்றன. இனி வரக்கூடிய காலங்களில் இந்த வகைமை படங்களுக்கு எந்த மாதிரியான சவால்கள் காத்திருக்கின்றன என்பதைப் பற்றிய ஒரு அலசலாக இந்தத் தொடர் அமையும் என எதிர்பார்க்கலாம். ஒவ்வொரு வாரமும் ஒரு படமும் வாசகர்களுக்கு பரிந்துரைக்கப்படும்.