இந்திய சமயலறையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக தக்காளி இருக்கிறது. அனைத்து வகையான சமையலுக்கும் பயன்படுத்தப்படுவது தக்காளி தான். ஆனால் கடந்த 2 மாதங்களாக தக்களின் விலை காரணமாக மக்கள் கடும் அவதியில் உள்ளனர். தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் நாடு முழுவதும் பல மாநிலங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தக்காளியின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தக்காளி வரத்து குறைந்துள்ளதால் விலையும் 150 முதல் 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.


இந்த தக்காளி பிரச்சனையில் இருந்து விடிவு பெற தக்காளி இல்லாத சில டிஷ்களை எப்படி சுலபமாக சமைப்பது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.


தக்காளி இல்லாத சாம்பார்: முதலில் பாசிப்பருப்பு மற்றும் துவரம் பருப்பு சேர்த்து கழுவிய பின், அதில் சின்ன வெங்காயம், பூண்டு, பெருங்காயம், கேரட், பீன்ஸ், கத்திரிக்காய், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து 2 முதல் 3 விசில் வரை குக்கரில் வேகவைக்க வேண்டும். பின் பிரஷர் அடங்கியதும், பருப்பு கலவையில் சிறிது அளவு சாம்பார் பொடி சேர்த்து தேவையான உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும். பின் சிறிதளவு நெய் எடுத்து அதில் கடுகு, சீரகம், கருவேப்பிள்ளை, காய்ந்த சிவப்பு மிளகாய் போட்டு தாளித்து சாம்பாரில் கொத்தமல்லியுடன் சேர்த்தால் சுவையான சாம்பார் தயார்.


விதவிதமான தேங்காய் சட்னிக்கள்: தேங்காய் சட்னியை சாதாரன முறையில் செய்யாமல், தேங்காய் உடன் ஒரு கை கொத்தமல்லி, பச்சை மிளகாய், உப்பு, பொட்டுக்கடலை ஆகியவற்றை சேர்த்து அரைத்தால் சுவையான மல்லி தேங்காய் சட்னி தயார். அதேபோல், தேங்காய், காய்ந்த மிளகாய், பூண்டு, உப்பு சேர்த்து அரைத்து தேவையான தண்ணீர் சேர்த்தால் ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் கார சட்னி ரெடி. தேங்காய், வெங்காயம், பொட்டுக்கடலை, உப்பு சேர்த்து நன்கு வதக்கிய பின் மிக்ஸியில் அரைத்து எடுத்தால் ரோட்டுக்கடை தேங்காய் சட்னி ரெடி. தேங்காய், பச்சை மிளகாய், பொட்டுக்கடலை, பெருங்காயம் உப்பு சேர்த்து தண்ணீர் இல்லாமல் அரைத்து எடுத்தால் கெட்டிச் சட்னி ரெடி.


கத்திரிக்காய் சாதம்: வழக்கமான போரிங் ரைஸ் வெரைட்டீஸ் செய்யாமல் வித்தியாசமாக குக்கரில் ரொம்பவும் சிம்பிலான சுவையான கத்திரிக்காய் சாதம் செய்து கொடுக்கலாம். எண்ணேய் அல்லது நெய், பட்டை, கிராம்பு, சோம்பு, ஏலக்காய், வெங்காயம் சேர்த்து நன்கு வதங்கிய பின் பிஞ்சு கத்திரிக்காய் சேர்த்து உடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, சீரக தூள், உப்பு சேர்த்து வதக்க வேண்டும். பின் அரிசிக்கு ஏற்றவாறு தண்ணீரை சேர்த்து கொதி வந்தவுடன் அரிசியை சேர்த்து விசில் விட்டு இறக்கினால் சுவையான கத்திரிக்காய் சாதம் ரெடி.


மோர் ரசம்: தயிர், இஞ்சி, சீரகம், உப்பு நன்றாக அரைத்து தேவைக்கேற்ப நீர் சேர்த்து, 5 நிமிடம் அடுப்பில் வைத்து கொதி வந்த உடன், சீரகம், கடுகு, மிளகாய் சேர்த்து தாளித்தால் மோர் ரசம் தயார்.


இதேபோல் தக்காளி இல்லாமல் பல ரெசிபிக்கள் சமைக்கலாம். உதாரணமாக லெமன் சாதம், புளி சாதம், தேங்காய் சாதம், அவியல், காய்கறி பொரியல் வகைகள், மட்டன் சுக்கா, சிக்கன் சுக்கா, தேங்காய் பால் சாதம், சொதி குழம்பு, தக்காளி இல்லாத சாம்பார், உளுத்தம் பருப்பு சாதம், தயிர் உருளை, பாலக் பன்னீர், சிக்கன் மோலி, மீன் மோலி, மோர் குழம்பு, காய்கறி கூட்டு வகைகள், தக்காளி இல்லாமல் தேங்காய் பால் பயன்படுத்தி செய்யப்படும் மீன் குழம்பு, புளிசேரி என பல ரெசிப்பிகள் உள்ளது. அடுத்த சில தினங்களுக்கு தக்காளியின் விலை அதிகமாக இருக்கும் என்பதால் அனைவரும் மேற்கண்ட டிப்ஸ் பயன்படுத்திக்கொள்ளலாம்.