முறையான திரைப்படக்கலையை பயின்ற ஒரு சில இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் பாலு மகேந்திரா. அவரின் 9ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று. தனது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் சினிமாவுக்காக அர்ப்பணித்த ஒரு உன்னதமான கலைஞன். 


 



இன்றைய தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களாக ஜொலிக்கும் வெற்றிமாறன், பாலா, சீனு ராமசாமி உள்ளிட்டோர் பாலுமகேந்திராவின் பட்டறையில் இருந்து வந்த வைரங்கள். தனது குருவை போலவே சினிமாவிற்கு வேறு ஒரு முகம் இருக்கிறது என்பதை வெளிகொண்டுவந்த  குருபக்தி நிறைந்த சிஷ்யர்கள். ஏனென்றால் அவரின் செதுக்கல் அப்படி பட்டது. பாடலாசிரியர் நா. முத்துக்குமார் சிறிது காலம் இந்த மகா கலைஞனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


 






ஒரு திரைப்படத்தை காவியமாக கொண்டு சேர்க்கும் திறமை ஒளிப்பதிவாளரையே சேரும். அதில் வித்தகராக ஜாம்பவானாக விளங்கியவர் பாலுமகேந்திரா. கிட்டத்தட்ட 20 திரைப்படங்களுக்கு மேல் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பாலுமகேந்திராவின் இயக்கத்தில் 1977ம் ஆண்டு வெளியான 'கோகிலா' என்ற முதல் திரைப்படமே தேசிய விருது பெற்றது.


'அழியாத கோலங்கள்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்து தமிழ் சினிமா இதுவரையில் பார்த்திராத ஒரு திரைக்கதை மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க செய்தவர். இப்படத்தை பார்த்த ஒவ்வொருத்தருக்கும் அவர்களின் விடலை பருவ கால நினைவுகள் வந்து போய் இருக்கும். மூன்றாம் பிறை, வீடு, மூடுபனி, ரெட்டை வால் குருவி, சந்தியா ராகம், சதி லீலாவதி என அவரின் அற்புதமான படைப்புகள் ஒன்றா இரண்டா. 


சினிமாவிற்கு அர்ச்சனா, சில்க் ஸ்மிதா, ஷோபா, பிரியா மணி, மௌனிகா என கருப்பழகிகளை   கதாநாயகிகளாக கொண்டுவந்து புரட்சி செய்தவர். நாம சாதிக்கிறோம், ஜெயிக்கிறோம் என்பதை காட்டிலும் நமக்கு பிடித்த வேலையே செய்வது பெரிய பாக்கியம் என தனது பணியை நேசித்த பாக்கியவான் பாலுமகேந்திரா. 


 






 


சாதனையாளராக வாழ்ந்து இருந்தாலும் அவருக்கும் நிறைவேறாத ஆசைகளும் இருந்தன. அந்த பல ஆசைகளில் ஒன்று ஒன்றரை மணி நேரம் ஓடக்கூடிய வகைகளில் படங்களை இயக்க வேண்டும் என்பது தான். அவருடைய ஆசையாக மட்டும் இல்லாமல் தனது சிஷ்யர்களான வெற்றிமாறன், பாலா போன்றவர்களும் அது போல படங்களை இயக்க வேண்டும் எனவும் ஆசைப்பட்டவர். அவருடைய காலகட்டங்களில் ஓடிடி தளங்கள் இருந்து இருந்தால் அதிலும் அவரின் தனித்துவத்தை கோடி நாட்டி இருப்பார். கலையையும், கலைஞர்களையும் மனதார நேசித்த இந்த கலைஞன் வாழ்ந்த காலகட்டத்தில் நாமும் வாழ்ந்துள்ளோம் என நினைத்து பெருமை கொள்ள வேண்டும். அப்படி இருக்கையில் அவரிடம் சினிமாவை பயின்ற கலைஞர்கள் எப்பேர்ப்பட்ட பாக்கியசாலிகளாக இருக்க கூடும்.