திருவண்ணாமலை மாவட்டத்தில் நான்கு ஏடிஎம் மையங்களை கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வடக்கு மண்டல காவல்துறை தலைவர் கண்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:
திருவண்ணாமலை மாவட்டத்தில் முதன் முறையாக நேற்று நள்ளிரவு தொடர்ந்து நான்கு ஏடிஎம் மையங்களில் கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ள. இதுதொடர்பாக டிஐஜி, எஸ்பிக்கள் தலைமையிலான குழுவினர் தொடர்ந்து விசாரணை மற்றும் ஆய்வு செய்து வருகின்றனர். கைதேர்ந்த செயல்முறை குற்றவாளிகள் மட்டும் தான் இந்த ஏடிஎம்மில் கொள்ளை அடித்திருக்கிறார்கள். ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளையடிக்கும் வெளி மாநில கும்பல் இச்செயலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதுபோன்ற கொள்ளை சம்பவங்கள் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஒடிசா, அசாம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்று உள்ளது. அந்தந்த மாநிலங்களில் செய்த செயல்முறைகளை வைத்து தமிழகத்தில் அதே செயல்முறையை செய்து இந்த கும்பல் தப்பித்துள்ளது. இதுதான் தமிழகத்தில் முதல் முறை .
கடந்த 2021 ஆம் ஆண்டு ஏடிஎம் கொள்ளையர்கள் வேறு விதத்தில் திருவண்ணாமலை, வேலூர், சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டுள்ளது. தமிழ்நாடு மட்டும்தான் இந்த வழக்கில் முழுமையாக குற்றவாளிகளை கண்டுபிடித்து வழக்கை முடித்துள்ளது. அதில் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்துள்ளோம். இதே போல் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பவர்களும் ஒரே இடத்தில் இருந்து வந்தவர்கள் தான் என்று தங்களது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. நான்கு இடங்களில் இச்சம்பவம் நடைபெற்று இருந்தாலும் தமிழ்நாடு அரசு முழு கவனத்துடன் இந்த வழக்கில் செயல்பட்டு வருகிறது. ஐஜி, டிஐஜி, எஸ்பிக்கள் என திருவண்ணாமலையை முகாமிட்டு, 9 தனிப்படைகள் இயங்குகிறது. தமிழ் நாட்டிற்கு வெளியே ஐந்து தனிப்படைகள் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
முழுமையான விவரங்கள் விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இந்த வழக்கின் முக்கியத்துவம் அறிந்து டிஎஸ்பி தலைமையிலான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் விஞ்ஞான ரீதியாக தடயங்கள் கிடைத்துள்ளது. இதன் மூலம் விரைவில் நல்ல முடிவுகள் கிடைக்கும். கொள்ளையர்கள் எந்த வாகனத்தில் வந்துள்ளார்கள் எவ்வளவு பேர் வந்துள்ளார்கள் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும். ஒரே கும்பல்தான் இந்த நான்கு ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து காவலர்களும் முழுமையாக உள்ளனர் என்று கூறினார்.
கர்நாடக மாநிலம் கேஜிஎப் பகுதியில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்திற்கும் திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற கொலை சம்பவத்திற்கும் தொடர்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு பிறகு தெரிவிக்கப்படும் என்று கூறினார். இந்தக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகள் மிகவும் தொழில்நுட்பம் அறிந்த குற்றவாளிகள் என்றும் ஏடிஎம் மிஷின்கள் குறித்து அறிந்தவர்கள் இதை செய்துள்ளார்கள் என்றும், இந்த வழக்கு குறித்து அனைத்து சம்பவங்களும் விரைவில் பிறகு தெரிவிக்கப்படும் என்றும் கொள்ளை சம்பவம் குறித்து ரோந்து பணியில் ஈடுபடாத காவல்துறையினர் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், வடமாநிலத்தில் இருந்து வருபவர்கள் அனைவரும் இதுபோன்ற செயலில் ஈடுபடுவதில்லை என்றும் இவர்கள் கொள்ளையர்கள் இவர்கள் முழுமையாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறியவர். அனைத்து கேள்விகளுக்கும் இரண்டு மூன்று நாட்களில் முடிவு தெரியும் என்றும் கூறியவர்.
இந்த கொள்ளை கும்பலில் ஈடுபட்டுள்ள கொள்ளையர்கள் குறிப்பிட்ட ஏடிஎம் இயந்திரங்களை மட்டும் குறி வைத்து கொள்ளையடிப்பவர்கள் என்றும் அவர் தெரிவித்தார். கொள்ளை நடைபெற்று இருக்கும் ஏடிஎம் இயந்திரம் உள்ள அறையில் உள்ள காட்சிகளை கொள்ளையர்களே எரித்தார்களா அல்லது கேஸ் வெல்டிங் மூலம் செய்யும் பொழுது தீப்பற்றியதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாகவும், ஒருவேளை கேஸ் வெல்டிங் செய்யும் பொழுது தீப்பற்றி இருக்கலாம் என்று கருதுவதாகவும், இந்த வழக்கிற்கு தேவையான தகவல்கள் தங்களுக்கு கிடைத்துள்ளதாகவும், சென்னை பெரம்பூரில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்திற்கும் இந்த சம்பவத்திற்கும் இதுவரை எந்த தொடர்பும் இருப்பதாக தெரியவில்லை என்றும் திருவண்ணாமலையில் நடைபெற்ற இந்த நான்கு atm கொள்ளைகளிலும் 2 மணி நேரத்திற்குள்ளாக நடைபெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.