நடந்துவரும் மகளிர் ஐபிஎல் ஏலத்தில் இந்திய அணியின் தொடக்க வீராங்கனை மற்றும் துணை கேப்டனுமான ஸ்மிருதி மந்தனா அடிப்படை விலையான 50 லட்ச தொகைக்கு களமிறங்கினார். இவரை வாங்க ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரு அணிகள் கடுமையாக போட்டியிட்டது.
இறுதியாக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஸ்மிருதி மந்தனாவை ரூ.3.4 கோடிக்கு ஏலம் எடுத்தது. இதையடுத்து இவரே இனி பெங்களூரு அணியின் கேப்டனாக நியமிக்கப்படலாம்.
இந்திய ஆடவர் அணியில் 18 ம் எண் கொண்ட ஜெர்சி அணியும் விராட் மற்றும் மகளிர் அணியில் 18 ம் எண் கொண்ட ஜெர்சி அணியும் ஸ்மிருதி மந்தனா ஆர்சிபி அணிக்காக விளையாடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மகளிர் ஐபிஎல் ஏலத்தின் விலையுயர்ந்த கிரிக்கெட் வீராங்கனை என்ற பெருமையை ஸ்மிருதி மந்தனா இந்த ஆண்டு படைத்தார்.
ஸ்மிருதி மந்தனா கடந்து வந்த பாதை:
1996 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்த ஸ்மிருதி மந்தனா, தனது மூத்த சகோதரர் ஷ்ரவனிடமிருந்து கிரிக்கெட் விளையாடுவதற்கான உத்வேகத்தைப் பெற்றார். ஷ்ரவன் மகாராஷ்டிராவுக்காக வயது பிரிவு கிரிக்கெட்டிலும் விளையாடியுள்ளார். ஷ்ரவனைப் பார்த்த ஸ்மிருதியும் கிரிக்கெட் வீராங்கனையாக மாற முடிவு செய்தார். ஸ்மிருதியின் கடின உழைப்புக்கு பலன் கிடைத்தது, கடின உழைப்பால் தனது கனவை நிறைவேற்றினார். 2013 அக்டோபரில் ஸ்மிருதி, ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார். பின்னர் மகாராஷ்டிரா அணிக்காக விளையாடிய அவர், மேற்கு மண்டல 19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக 150 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 224 ரன்கள் எடுத்தார்.
ஸ்மிருதி மந்தனா கடந்த 2013 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வங்காளதேசத்திற்கு எதிரான டி20 போட்டியில் சர்வதேச அரங்கில் அறிமுகமானார். அப்போது ஸ்மிருதிக்கு 16 வயதுதான். அதே மாதத்தில், வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஸ்மிருதியும் அறிமுகமானார். இதற்குப் பிறகு, 2014 ஆம் ஆண்டில், ஸ்மிருதி மந்தனா இங்கிலாந்துக்கு எதிராக விளையாடி தனது டெஸ்ட் வாழ்க்கையைத் தொடங்கினார்.
ஸ்மிருதி மந்தனா இதுவரை இந்தியாவுக்காக 77 ஒருநாள், 112 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஒருநாள் போட்டிகளில், அவர் ஐந்து சதங்கள் 25 அரை சதங்கள் உட்பட 43.28 சராசரியில் 3073 ரன்கள் எடுத்துள்ளார். சர்வதேச டி20 போட்டியில் ஸ்மிருதி 27.32 சராசரியில் 2651 ரன்கள் எடுத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் பற்றி பேசுகையில், ஸ்மிருதி 46.42 சராசரியில் 325 ரன்கள் எடுத்துள்ளார். ஸ்மிருதி டெஸ்ட் போட்டிகளில் ஒரு சதம் மற்றும் இரண்டு அரை சதங்கள் அடித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்துள்ளார் ஸ்மிருதி மந்தனா. ஒருநாள் கிரிக்கெட்டில் ரன் சேஸின் போது தொடர்ந்து பத்து முறை 50+ ரன்கள் எடுத்த முதல் பெண் கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி ஆவார். ஸ்மிருதி மந்தனா 2018 மற்றும் 2021 ஆம் ஆண்டுக்கான ஐசிசி மகளிர் கிரிக்கெட் வீராங்கனையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2018 ஆம் ஆண்டில், அவர் ஆண்டின் சிறந்த மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வீரராகவும் இருந்தார். ஸ்மிருதியைத் தவிர, அலிசா பெர்ரி மட்டுமே இந்த விருதை இரண்டு முறை வென்றுள்ளார். டி20 கிரிக்கெட்டில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு பிறகு அதிக ரன் குவித்த இந்திய வீராங்கனை ஸ்மிருதி.