Cheyyaru Balu Controversy : 96 படத்தில் இளையராஜாவின் இசையை அனுமதியின்றி பயன்படுத்தியதாக அவதூறு பரப்பியதாக செய்யாறு பாலுவை 96 பட இயக்குநர் பிரேம்குமார் விமர்சித்துள்ளார்.


மஞ்சும்மெல் பாய்ஸ்


சமீபத்தில் மலையாளத்தில் வெளியான மஞ்சும்மெல் பாய்ஸ் (Manjummel Boys) படம் தமிழில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுவரை இப்படம் 160 கோடிவரை வசூல் செய்துள்ளது. கமல்ஹாசன் நடித்து சந்தான பாரதி இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு வெளியான குணா படத்தை இன்ஸ்பிரேஷனாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. குணா படத்தின் கண்மணி அன்போடு காதலன் பாடல் இந்தப் படத்தில் பயன்படுத்திய விதம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இளையராஜாவின் பாடல்கள் இன்றைய சூழலில் வெளியாகும் படங்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. 


தனது பாடல்களை அனுமதி பெறாமல் படங்களில் பயன்படுத்துவதை இளையராஜா ஒருமுறை விமர்சித்திருந்தார். இதுதொடர்பாக மூத்த ஊடகவியலாளரான செய்யாறு பாலு சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த வீடியோவில் தனது பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியவர்களை ஆண்மை இல்லையா என்று இளையராஜா குறிப்பிட்டதாக அவர் கூறினார். மேலும் விஜய்சேதுபதி  த்ரிஷா நடித்து வெளியான 96 படத்தில் தளபதி படத்தின் யமுனை ஆற்றிலே பாடல் பயன்படுத்தியதை இந்த விமர்சனத்துடன் தொடர்புபடுத்தும் வகையில் அவர் பேசியுள்ளார். தற்போது 96 படத்தின் இயக்குநர் பிரேம்குமார் இந்த வீடியோவில் செய்யாறு பாலு பேசியதற்கு மறுப்பு தெரிவித்து அவரை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.


தெரிந்தே உண்மையை ஏன் மறைக்க வேண்டும்


96 படத்தில் பயன்படுத்தப் பட்ட இளையராஜாவின் பாடலுக்கு படம் வெளியாவதற்கு முன்பே முறையாக அனுமதி வழங்கப்பட்டு அதற்கான தொகையையும் கொடுத்துவிட்டதாக பிரேம் குமார் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை கீழ்வருமாறு.


"அன்புக்குரிய ஊடகத்துறை நண்பர்களுக்கு வணக்கம், நான் ச. பிரேம்குமார், '96 படத்தின் எழுத்தாளர் மற்றும் இயக்குனர். கடந்த மார்ச் – 7'ஆம் தேதி 'Cheyyaru Balu official' என்ற Youtube Channel'ல், 'உங்களுக்கு ஆண்மை இல்லீயா, என் பாட்டை யூஸ் பண்ணி இருக்கீங்க.. நாக்க புடுங்கற மாதிரி கேட்ட
இளையராஜா' என்ற தலைப்பில் காணொளி வெளியானது. அதில் திரு. செய்யாறு பாலு சமீபத்தில் வெளியான மஞ்சும்மெல் பாய்ஸ் மற்றும் நான் எழுதி இயக்கி 2018-ல் வெளியான 96 திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட இசைஞானி இளையராஜாவின் பாடல்களுக்கு நாங்கள் முறையான அனுமதி பெறாதவாறு பேசியுள்ளார். குறிப்பாக, '96 பற்றி பேசும்போது, இசைஞானி இளையராஜா அவர்கள் சொன்னதை மேற்கோள் காட்டியதோடு நிறுத்தாமல், இன்னொரு வார்த்தை, 'பொ' என்கிற வார்த்தையை வேற யாராவது இருந்தா யூஸ் பண்ணி இருப்பாங்க' என்றும் பேசியுள்ளார்.


மேலும் அதற்கு '96 படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா மன்னிப்பு கேட்டதாகவும் சொல்கிறார். வன்மம் நிறைந்த இந்த கருத்துகளுக்கு பதில் சொல்லாமல் என்னால் கடந்து செல்ல இயலவில்லை. திரு. செய்யாறு பாலு குறிப்பிட்டுள்ள மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலுக்கும், '96 திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஐந்து பாடல்களுக்கும் Think Music வாயிலாகவும், அந்தந்த தயாரிப்பு நிறுவனங்கள் மூலமாகவும், இரண்டு திரைப்படங்களும் வெளியாவதற்கு முன்னரே அதற்கான அனுமதியை பணம் செலுத்தி பெற்றுவிட்டோம். ஒரு மூத்த பத்திரிகையாளராக இருந்துகொண்டு இந்த முக்கியமான தகவலை கூட விசாரிக்காமல், அல்லது அந்த உண்மையை உள்நோக்கத்துடன் மறைத்து பொய் கூறியதேன்? ஒரு காணொளியின் சுவாரஸ்யத்தை கூட்டுவதற்கு ஒரு செய்தியாளரின் அடிப்படை அறத்தை விட்டுக்கொடுப்பதா?" என்று அவர் இந்த அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார்