ஒரு மாதத்தில் தன்னை படத்திற்கு ஏற்ற வகையில் நடிகர் விஜயகாந்த் தயார்படுத்தியதாக சோனு சூட் தெரிவித்துள்ளார்.


விஜயகாந்த்


தேமுதிக தலைவர் மற்றும் நடிகர் விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உடல்நலக் குறைவால் காலமானார். ஒரு நடிகராக, தென் இந்திய நடிகர் சங்கத் தலைவராகவும் பல்வேறு முன்னோடியான முயற்சிகளை முன்னெடுத்தவர் விஜயகாந்த். விஜயகாந்தின் முயற்சியால் பல்வேறு நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் உருவாகி இருக்கிறார்கள். தமிழ் சினிமா துறையைச் சேர்ந்த ஒவ்வொருவரும் விஜயகாந்தின் மூலமாக ஏதோ ஒரு வகையில் பயனடைந்திருக்கிறார்கள். பிற மொழி பின்னணியாக கொண்ட நடிகர் சோனு சூட், விஜயகாந்த் தனது சினிமா கரியரில் முக்கியமான ஒரு அங்கமாக இருந்ததை சமீபத்தில் கல்லூரி நிகழ்வு ஒன்றில் நினைவுகூர்ந்துள்ளார்.


சோனு சூட்


விஜயகாந்த் நடித்து 1999ஆம் ஆண்டு வெளியான கல்லழகர் படத்தின் மூலமாக வில்லனாக அறிமுகமானவர் சோனு சூட். தமிழில் வெளியான சந்திரமுகி, சந்தித்த வேளை, மஜ்னு, ராஜா, கோவில்பட்டி வீரலக்‌ஷ்மி , ஒஸ்தி, தேவி உள்ளிட்டப் படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமில்லாமல்  இந்தி, தெலுங்கு  உள்ளிட்ட மொழிகளிலும் பரவலாக நடித்து வருகிறார். சமீபத்தில் கல்லூரி நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட சோனு சூட் தனது முதல் படத்தின் அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.


விஜயகாந்த் செய்த உதவி


“விஜயகாந்த் நடித்த கல்லழகர் தான் என்னுடைய முதல் படம். மதுரையில் இருக்கும் அழகர் கோயிலில் தான் படப்பிடிப்பு நடந்தது. நான் அப்போது பயிற்சி பெற்ற ஒரு ஃபைட்டர். என்னுடைய உடம்பையும் நான் ஃபிட்டாக வைத்திருந்தேன். ஆனால் எனக்கு சினிமா ஃபைட் நடிக்கத் தெரியாது. சினிமாவில் வெறும் சண்டை போட்டால் மட்டும் போதாது. அதற்கென்று ஒரு ரியாக்‌ஷன் கொடுக்க வேண்டும். எனக்கு அது எல்லாம் தெரியாது . நான் முதல் நாள் படப்பிடிப்பிற்கு சென்றபோது எனக்கு தெரிந்த ஸ்டண்ட் காட்சிகளை நான் செய்து காட்டினேன்.


விஜயகாந்த் என்னிடம் சினிமாவுக்கு ஏற்றமாதிரி நான் சண்டை போட வேண்டும் என்று சொன்னார். எனக்கு எது எல்லாம் தெரியாது என்று நான் சொன்னேன். நான் நடிக்க வந்த முதல் படம் என் கையைவிட்டு போகப் போகிறது என்கிற பதட்டம் எனக்கு ஏற்பட்டது. விஜயகாந்த் படத்தின் இயக்குநரிடம் சென்று கொஞ்ச நேரம் பேசினார். பின் என்னிடம் திரும்பி வந்து நான் இந்தப் படத்திற்காக சண்டை கற்றுக் கொள்ளும் வரை படப்பிடிப்பை தள்ளி வைக்க முடிவு செய்துள்ளதாக அவர் என்னிடம் சொன்னார். அந்த செட்டில் 200க்கும் மேற்பட்ட ஃபைட்டர்ஸ் இருந்தார்கள். ஆனால் அவர் எனக்காக இப்படி ஒரு முடிவு எடுத்தார்.


உதவி இயக்குநர் ஒருவரை அழைத்து அடுத்த ஒரு மாத காலத்திற்கு சாப்பிடுவதற்கு எனக்கு அரிசி சாப்பாடு மட்டும் கொடுக்கச் சொன்னார். நான் சென்னையில் ஒரு ஹோட்டலில் அறை எடுத்து  தங்கினேன். தினமும் காலையின் அந்த உதவி இயக்குநர் வந்து எனக்கு சாப்பாடு கொடுப்பார். நான் சாப்பிட்டேன் என்று சொன்னாலும், தன் வேலை போய்விடும் என்று சொல்லி என்னை வற்புறுத்தி சாப்பிட வைப்பார். ஒரு மாதத்தில் நான் 7 கிலோ எடை அதிகரித்திருந்தேன். ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்றபோது விஜயகாந்த் என்னைப் பார்த்து இப்போதான் சரியாக இருக்கீங்க இப்போ வாங்க சண்ட போடலாம் என்றார்.


என்னுடை சினிமா வாழ்க்கையைத் தொடங்கி வைத்தது அந்த படம் தான். அதற்கு விஜயகாந்த் முக்கியக் காரணம்” என்று அவர் கூறியுள்ளார்