நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த காக்கி சட்டை படம் வெளியாகி இன்றோடு 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். 


சின்னத்திரையில் மிமிக்ரி கலைஞராக, நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றிய சிவகார்த்திகேயன், 2012 ஆம் ஆண்டு வெளியான மெரினா படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இந்த படத்துக்கு முன்னதாக அவர் தனுஷ் நடித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய “3” படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருப்பார். இந்த படத்தின் ஷூட்டிங்கின்போது சிவகார்த்திகேயனின் திறமையை அறிந்த தனுஷ், அவரின் ஆரம்பகால சினிமா கேரியரில் முக்கிய பங்கு வகித்துள்ளார். 


2013 ஆம் ஆண்டு துரை செந்தில்குமார் இயக்கத்தில் எதிர்நீச்சல் படம் வெளியானது. இதில் சிவகார்த்திகேயன், பிரியா ஆனந்த், நந்திதா ஸ்வேதா, சதீஷ் உள்ளிட்ட பலரும் நடித்தனர். அனிருத் இசையமைத்த எதிர்நீச்சல் படத்தை நடிகர் தனுஷ் தான் வுண்டர்பார் பிலிம்ஸ் கீழ் தயாரித்திருந்தார். அந்த நிறுவனத்தின் முதல் படமே எதிர்நீச்சல் தான். இப்படம் சிறப்பான வெற்றியைக் கொடுத்தது. இதில் ஒரு பாடலுக்கும் தனுஷ் நடனமாடியிருந்தார்.


இதனைத் தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு இந்த கூட்டணி மீண்டும் இணைந்தது. தனுஷ் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடிப்பில், துரை செந்தில்குமார் இயக்கத்தில் வெளியான படம் “காக்கி சட்டை”. இப்படத்தில் ஸ்ரீதிவ்யா, விஜய் ராஸ், பிரபு, கல்பனா, மனோபாலா, இமான் அண்ணாச்சி, சுஜாதா சிவகுமார், வித்யுலேகா ராமன், ஜீவா ரவி, யோகி பாபு உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்தனர். அனிருத் இசையமைத்த காக்கிச்சட்டை படம் மனித உறுப்புகளை திருடும் கும்பலை பற்றிய கதையாகும். இதில் சிவகார்த்திகேயன் போலீஸ் வேடத்தில் நடித்திருந்தார். 






ஆனால் வெற்றிகரமாக கூட்டணி என சொல்லப்பட்ட தனுஷ் - சிவகார்த்திகேயன் இருவரும் இதன்பின்னர் ஒன்று சேரவே இல்லை. சிவகார்த்திகேயனுக்கும், தனுஷூக்கும் இடையே ஈகோ மோதல் என்றெல்லாம் தகவல் பரவ தொடங்கியது. ஒரு நிகழ்ச்சியில் இருவரையும் ஒன்று சேர்த்து பார்க்க முடியாத அளவுக்கு சந்தித்துக் கொள்ளாமலே இருக்கிறார்கள். இந்த விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு தனுஷ், சிவகார்த்திகேயன் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் மோதிக் கொண்டனர். 


ஆண்டுகள் ஓடியதே தவிர இருவரும் ஒன்று சேரவில்லை. நடப்பாண்டு பொங்கலுக்கு தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் படமும், சிவகார்த்திகேயன் நடித்த அயலான் படமும் நேருக்கு நேர் மோதியது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அனைத்து ரசிகர்களின் எண்ணமும் மீண்டும் தனுஷ் - சிவகார்த்திகேயன் இணைய வேண்டும் என்று தான் உள்ளது.