கொரிய நெட்ஃப்ளிக்ஸ் தொடரான ‘ஸ்குவிட் கேம் ’ மூலம் உலக அளவில் புகழ்பெற்று பல விருதுகளைக் குவித்த நடிகர் ஓ யோங் சூ மீது பாலியல் புகார் எழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கரோனா ஊரடங்கு காலத்தில் நெட்ஃப்ளிக்ஸில் சென்ற ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் ஹிட் அடித்தது ஸ்குவிட் கேம் தொடர். இதில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளைக் குவித்தவர் 78 வயது நடிகரான ஓ யோங் சூ.


கடந்த 50 ஆண்டுகளாக தென்கொரிய  திரைத்துறையில் நடித்து வரும் ஓ யோங் சூவுக்கு ’ஸ்குவிட் கேம்’ தொடரின் மூலம் கோல்டன் க்ளோப் தொடர் தொடங்கி பல விருதுகளையும் கோடிக்கணக்கான ரசிகர்களையும் ஈர்த்தார்.


பாலியல் குற்றச்சாட்டு


இந்நிலையில் தென் கொரியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தன்னிடம் ஓ யோங் சூ தகாத முறையில் நடந்துகொண்டதாக கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தார். கடந்த 2017ஆம் ஆண்டு ஓ யோங் சூ தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக அப்பெண் புகார் தெரிவித்த நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இவ்வழக்கு  முடித்து வைக்கப்பட்டது.


இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் வேண்டுகோளின் பெயரில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது.


ஓ யோங் சூவிடம் தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தான் அப்பெண்ணை ஏரி ஒன்றின் அருகே சந்தித்ததாகவும், ஏரியை சுற்றிக் காண்பிப்பதற்காக அப்பெண்ணின் கையைப் பிடித்ததாகவும் ஓ யோங் சூ  தெரிவித்து தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.


இந்நிலையில் ஓ யோங் சூ மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை அடுத்து அவர் நடித்த அரசு விளம்பரத்தை ஒளிபரப்புவதை நிறுத்த சியோல் (தென் கொரியத் தலைநகர்) கலாச்சார அமைச்சகம் முடிவு செய்துள்ளது.


ஸ்குவிட் கேம் தொடர்


நம் ஊரின் பரமபதம், பாண்டி விளையாட்டுகளைப் போன்ற, கொரியாவின் பாரம்பரிய விளையாட்டுக்களை ஆடி, கடுமையான பண நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் 456 பேர், 45.6 பில்லியன் பரிசுத் தொகையை வெல்ல போட்டிபோடும் வகையில் ஸ்குவிட் கேமின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். பல ஓடிடி தளங்களாலும் நிராகரிக்கப்பட்ட பிறகு, இறுதியாக நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகி ஸ்குவிட் கேம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.


அதீத வன்முறைக் காட்சிகள் இத்தொடரில் இடம்பெற்றிருந்தாலும், அட்டகாசமான கதையாலும், தேர்ந்த நடிகர்கள், அவர்களுக்கான கதாபாத்திரங்கள், திரைக்கதை எனப் பல சிறப்பம்சங்களால் பார்வையாளர்களைக் கட்டிப் போட்டது `ஸ்குவிட் கேம்’ தொடர். 


முன்னதாக இத்தொடரின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளதை டீசர் மூலம் நெட்ஃப்ளிக்ஸ் தொடர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.