இந்திய சினிமாவே உலக நாயகன் என கொண்டாடும் நடிகர் கமல்ஹாசன் இந்த திரையுலகினுள் அடியெடுத்து வைத்த 'களத்தூர் கண்ணம்மா' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 63 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. தெலுங்கு திரைப்படங்களில் பிரபலமான குழந்தை நட்சத்திரமாக இருந்த டெய்சி ராணிக்கு கிடைக்கவேண்டிய வாய்ப்பை தனது திறமையை நிரூபித்து ஏ.வி மெய்யப்ப செட்டியாரை இம்ப்ரெஸ் செய்து பெற்றார் கமல்ஹாசன்.


முதல் படத்திலே தேசிய விருது:


களம் இறங்கிய முதல் படத்திலேயே தேசிய விருதை தட்டி சென்றார். களத்தூர் கண்ணம்மா படத்தின் மிகப்பெரிய அடையாளம் கமல்ஹாசன் என்றால் அப்படம் விட்டு சென்ற சுவடுகளும் தாக்கமும் இன்றும் தமிழ் சினிமாவில் தொடர்கிறது. 


 



களத்தூர் கண்ணம்மா:


ஜமீன்தாரின் மகன் ராஜாவும் சாதாரண விவசாயின் மகள் கண்ணம்மாவும் ரயில் பயணத்தின் போது அறிமுகமாகி பின்னர் காதலித்து வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்கிறார்கள். ராஜா மேற்படிப்புக்காக வெளிநாடு செல்ல கர்ப்பமான கண்ணம்மாவுக்கு குழந்தை பிறக்கிறது. அந்த குழந்தையை கண்ணம்மாவின் தந்தை அனாதை ஆசிரமத்தில் விட்டு விடுகிறார். ஆனால் கண்ணம்மாவிடம் குழந்தை இறந்து விட்டதாக பொய் சொல்கிறார். ராஜா தான் தன்னுடைய கணவர் என யாரிடமும் சொல்ல கூடாது என மக்களிடம் சத்தியம் வாங்கி கொண்டு வேறு ஊருக்கு குடி பெயர்கிறார்கள். 



லண்டனில் இருந்து திரும்பும் ராஜா, கண்ணம்மாவை தேடி அலைந்து அவள் மீது சந்தேகம் கொண்டு குடிக்கு அடிமையாகிறான். கண்ணம்மாவின் குழந்தை செல்வம் ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்கிறான். ஆசிரியையாக வரும் கண்ணம்மாவுக்கு குழந்தை செல்வம் மீது ஒரு ஈர்ப்பு. அதே போல பள்ளி விழா ஒன்றுக்கு தலைமை தாங்க வந்த ராஜாவும் செல்வம் மீது ஈர்க்கப்படுகிறான். பல சிக்கல்களுக்கு பின்னர் செல்வம் தனது தாய் தந்தையருடன் இணைகிறான். இதில் குழந்தை நட்சத்திரமாக கமல்ஹாசன் நடிக்க அவரின் தாய் தந்தையாக ஜெமினி கணேசனும் சாவித்திரியும் நடித்து இருந்தனர். 


அம்மாவும் நீயே.. அப்பாவும் நீயே..


பாலையா சுப்பையா, குலதெய்வம் ராஜகோபால், மனோரமா, ஜவகர் சீதாராமன் என அனைவரின் நடிப்பும் படத்தின் வெற்றிக்கு பக்கபலமாய் அமைந்தது. சுதர்சனம் இசையில் அம்மாவும் நீயே அப்பாவும் நீயே, ஆடாத மனமும் ஆடுதே, அருகில் வந்தாள், கண்களின் வார்த்தைகள் புரியாதா என அனைத்து பாடல்களுமே மிக பெரிய ஹிட் பாடல்களாக அமைந்தன. 


 



 


களத்தூர் கண்ணம்மா தமிழ் சினிமாவின் பொற்காலத்தில் வந்த ஒரு சிறந்த குழந்தை படமாக இன்றும் அதில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய ஏராளமான விஷயங்களை அடக்கியுள்ளது. ஒரு மாபெரும் பொக்கிஷத்தை நமக்கு அளித்த களத்தூர் கண்ணம்மா இன்றுடன் 63 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.