பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர் நடிகைகளாக இருப்பவர்கள் கத்ரினா கைஃப் மற்றும் விக்கி கௌஷல் . இருவரும் பாலிவுட்டின் நட்சத்திர காதலர்களாக வலம் வந்துக்கொண்டிருக்கின்றனர்.இவர்கள் இருவரின் காதல் கதைகள் கடந்த சில வருடங்களாகவே கிசு கிசுக்கப்பட்டு வருகிறது. அவ்வபோது இவர்கள் பொதுவெளியில் ஒன்றாக அடையாளம் காணப்படுவது, பொது விழாக்களுக்கு ஒன்றாக வருவதும் ரசிகர்களுக்கு கூடுதல் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இந்த செய்திகள் குறித்து அதிக கவனம் செலுத்தாத கத்ரினா- விக்கி கௌஷல் ஜோடிகள் தங்கள் பட வேலைகளில் மட்டும் கவனம் செலுத்தி வந்தனர். இது இவர்களின் காதல் வலையில் விழுந்திருப்பதை கூடுதலாக உறுதிப்படுத்துவதாக இருந்தது.
கத்ரினா - விக்கி கௌஷலின் காதல் கிசு கிசுக்கள் சற்று ஓய்ந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. காரணம் இரு குடும்பத்தினரும் பேச்சு வார்த்தை நடத்தி , திருமணத்திற்கு தயாரகிவிட்டார்களாம். கடந்த தீபாவளி பண்டிகையின் பொழுதுதான் இருவருக்கும் முக்கியமான நபர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில் கத்ரினா- விக்கி திருமணம் அடுத்த மாதம் பிரம்மாண்டமாக நடக்க இருப்பதாக சில நம்பத்தகுந்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. திருமணம் ராஜஸ்தானில் நடக்க இருப்பதாகவும், அதனை முன்னிட்டு விருந்தினர்களை தங்க வைக்க கிட்டத்தட்ட 45 ஹோட்டல்கள் முன்பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
பாலிவுட் பத்திரிக்கைகளின் தகவலின் படி ராஜஸ்தானின் சிக்ஸ் சென்ஸ் ரிசார்ட்டில் வரவேற்பும் , டிசம்பர் 9 ஆம் தேதி சோவாய் மாதோபூரில் உள்ள பர்வாராவில் கத்ரினா- விக்கி திருமணமும் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.இவர்களின் திருமண விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கொண்டாட்டத்தின் டிசம்பர் 7 ஆம் தேதி முதல் பல முக்கிய விருந்தினர்கள் கலந்துக்கொள்ளவுள்ளார்களாம். திருமண விழாவின் பொழுது பாலிவுட் சூப்பர் ஸ்டார்ஸான சல்மான் கான் , ஷாருக்கான் உள்ளிட்டோர் முக்கிய விருந்தினர்களாக பங்கேற்பார்கள் என செய்திகள் வெளியான நிலையில், சல்மான் கான் திருமணத்திற்கு வரவில்லை என கூறப்படுகிறது. கத்ரினாவும் சல்மான் கானும் முன்னதாக காதலித்து வருவதாக பாலிவுட்டில் செய்திகள் உலா வந்தன. இந்நிலையில் முன்னால் காதலியின் திருமணத்திற்கு சல்மான் எப்படி வருவார் என்கின்றனர் பாலிவுட் ரசிகர்கள்.
அடுத்ததாக மணமகன் விக்கி கௌஷலை வைத்து படம் எடுத்த இயக்குநர் ஷஷாங்க் கைதான் திருமணத்தில் முக்கிய விருந்தினராக கலந்துக்கொள்ளவுள்ளாராம்.பாலிவுட் வட்டாரம் கத்ரினா - விக்கி கௌஷலின் திருமணத்திற்காக அதிக ஈடுபாட்டுடன் தயாராகி வந்தாலும் , காதல் ஜோடிகளின் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். கரண் ஜோகர் நடத்தும் காஃபி வித் கரண் நிகழ்ச்சிதான் கத்ரினா மற்றும் விக்கி கௌஷலின் நட்பு மலர காரணமாக அமைந்ததும் நினைவு கூறத்தக்கது.