ஒரு மெல்லிய தென்றலாக சினிமாவில் வீசிய பாசத்திற்குரிய பாரதிராஜா ஐந்தே படங்களில் தமிழ் திரையுலகில் ஒரு பெரிய சூறாவளியை ஏற்படுத்திவிட்டார். உணர்வுகளின் உருவமான காதலை மிகவும் அழகான திரைக்கதை மூலம் ரசிகர்களை ஆர்ப்பரித்த பாரதிராஜாவின் 'நிறம் மாறாத பூக்கள்' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 44 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.  


சிட்டி சப்ஜெக்ட் :


'கிழக்கே போகும் ரயில்' திரைப்படத்தில் கிராமத்து கிளிகளாக சிறகை விரித்து பறந்த பாஞ்சாலியும் பரஞ்சோதியும் அதற்கு நேர்மாறாக மாடர்ன் சிட்டியில் உலா வருகிறார்கள். பணக்கார வீடு பெண்ணாக மாடர்ன் கேர்ள் தோரணையில் மிடுக்காக ராதிகாவும் வேலையில்லா பட்டதாரியாக சுதாகரும் கதாபாத்திரங்களுக்கு அழகு சேர்த்தனர். 


 



கதை சுருக்கம் :


வேலையில்லாமல் கஷ்டப்படும் சுதாகருக்கு மேனேஜர் வேலையோடு மனதையும் பரிசளிக்கிறாள் ராதிகா. மெல்ல மெல்ல அவர்களுக்குள் காதல் மலர்கிறது, ராதிகாவின் அப்பாவுக்கும் உண்மை தெரிகிறது. பணக்கார பெண் - ஏழை காதலன் என்றால் எந்த அப்பா தான் சம்மதம் சொல்வார். சம்மதித்தது போல நடித்து பணத்தை கையாடல் செய்து ஓடிவிட்டான் என பழியை போட்டு மகளையும் அதை பக்காவாக நம்ப வைத்து காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுகிறார். 


மகள் காதல் தோல்வியின் துயரத்தில் இருந்து வெளிவர ஆறுதல் தேவை என ஊட்டியில் இருக்கும் நண்பனின் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார். ஆனால் உண்மையில் நண்பனின் மகன் விஜயனுக்கும் ராதிகாவும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது தான் அதன் உள்நோக்கம். விஜயனுக்கும் ஒரு பிளாஷ் பேக் இருக்கிறது. காதல் தோல்வியால் முழு நேர குடிகாரனாக கையில் டேப்ரிக்கார்டருமாக வலம் வருகிறார். தன்னுடைய கதை கதையை ராதிகாவிடம் சொல்கிறார். 


விஜயன் காதலியாக ரதி. ஹார்ஸ் ரைடிங், கார் டிரைவிங் என அனைத்தையும் ரதிக்கு விஜயன் சொல்லி கொடுக்கும் வேலையில் தனியாக செல்லும் போது குதிரை வேகம் எடுத்த போதிலும், கார் சீறி பாய்ந்த போதிலும், பதறி போய் துடித்த விஜயனிடம் 'எனக்கு ஹார்ஸ் ரைடிங்', 'கார் டிரைவிங்' தெரியும் என சொல்லி வெறுப்பேற்றுகிறாள். அதே போல ஒரு நாள் ஏரியில் இறங்கிய ரதி 'எனக்கு ஸ்விம்மிங் தெரியாது' என சொன்னதை நம்பாத விஜயன் கரையிலேயே நின்று கொண்டு ரதிக்காக சிரித்து கொண்டே காத்திருக்கிறார். ஆனால் அவரின் கண் முன்னாடியே ரதி மூழ்கி இறந்து போகிறார். விஜயனின் இந்த காதல் கதையை கேட்ட ராதிகாவுக்கு மனம் மாறுகிறது. திருமணத்திற்கு சம்மதிக்கிறார்கள். 



அந்த நேரத்தில் தான் கூலி வேலை செய்பவராக சுதாகரை ஊட்டி எஸ்டேட்டில் சந்திக்கிறாள் ராதிகா. உண்மை வெளிச்சத்துக்கு வர அவர்களை விஜயன், சேர்த்து வைத்து விட்டு ரதி மூழ்கிய அதே ஏரியில் சென்று மூழ்கி உயிரை விடுகிறார். அந்த நேரத்தில் டேப்ரிக்கார்டரில் இருந்து ‘ஆயிரம் மலர்களே மலருங்கள்’ என்ற பாடல் ஒலிக்கிறது. கதை நிறைவைகிறது. கனத்த இதயங்களுடன் திரும்பிய ரசிகர்கள் இன்று வரை அப்படத்தை கொண்டாடுகிறார்கள். 


பலே கூட்டணி :


பாக்யராஜ் கதைக்கு இளையராஜா இசையமைக்க, வசனங்களுக்கு பஞ்சு அருணாச்சலம் உயிர் கொடுக்க அப்படத்தை இயக்கி உருவம் கொடுத்தார் பாரதிராஜா. ராதிகா - சுதாகர் காதல் ஜோடி படம் முழுக்க ட்ராவல் செய்தாலும் மனதை நெகிழ வைத்தது விஜயன் - ரதி ஜோடி தான். ஊட்டியின் அழகுக்கு அழகு சேர்த்து இருந்தது பி.எஸ்.நிவாஸின் ஒளிப்பதிவு. 



ராஜாங்கம் செய்த இளையராஜா :


இளையராஜாவின் மேற்கத்திய இசை, மலேசியா வாசுதேவன், ஜென்சி, எஸ்.பி.பியின் குரலும் மனங்களை இன்று வரை கொள்ளை கொண்டுள்ளன. பாரதிராஜாவின் இயக்கத்தில் எஸ்.பி.பி பாடிய முதல் பாடல் ‘முதன் முதலாக காதல் டூயட் பாட வந்தேனே...’ பாடல் தான் என்பது குறிப்பிடத்தக்கது. ‘ஆயிரம் மலர்களே மலருங்கள்’, ’இரு பறவைகள் மலை முழுவதும்’ என அனைத்து பாடல்களிலுமே இளையராஜா ஆக்ரமித்துவிட்டார். நிறம் மாறவில்லை என்றாலும்  ரசிகர்கள் மத்தியில் என்றுமே மனம் வீசி கொண்டு இருக்கும்  பாரதிராஜாவின் ‘நிறம் மாறாத பூக்கள்’.