காலங்காலமாக தமிழ்நாடு சந்தித்து வரும் ஒரு மிக பெரிய பிரச்சினை என்றால் அது தண்ணீர் பிரச்சினை தான். இப்படி பட்ட ஒரு சமூக அவலத்தை  கையில் எடுத்து அதை சினிமாவாக்கியது மட்டுமல்லாமல் பரிதாப மக்களின் அவல நிலை, அலட்சியம் செய்யும் அரசாங்க அதிகாரிகள், கண்டுகொள்ளாமல் கடந்து செல்லும் அரசியல்வாதிகள் என அனைவரின் சுயத்தையும் துணிச்சலாக இயக்குனர் சிகரம் கே. பாலசந்தர் தோலுரித்து காட்டிய திரைப்படம் தான் 1981ம் ஆண்டு வெளிவந்த "தண்ணீர் தண்ணீர்" திரைப்படம். இப்படம் வெளியாகி இன்றுடன் 42 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இன்னும் எத்தனை நூற்றாண்டுகளை கடந்தாலும்  இப்படம் ஏற்படுத்திய தாக்கத்தை வேறு எந்த ஒரு படைத்தலும் கொடுக்க முடியாது. 


 



தண்ணீர் பஞ்சத்தை வைத்து தமிழ் சினிமாவை முதன்முதலில் கலக்கிய  படம் தான் 'தண்ணீர் தண்ணீர்' திரைப்படம். கோமல் சுவாமிநாதனின் கதை வசனத்தில் உருவான இந்த நாடகம் மாபெரும் வெற்றி பெற்று மக்களின் வரவேற்பை பெற்றது. அந்த நாடகத்தை சிறுது மேம்படுத்தி அதன் உரிமையை கைப்பற்றி கே. பாலசந்தர் இப்படத்தை இயக்கினார். 


கோவில்பட்டி அருகே உள்ள அத்திப்பட்டி என்ற கிராமத்தில் நடைபெறும் கதைக்களமாக அமைந்த இப்படத்தில் ராதாரவி, சரிதா, வாத்தியார் ராமன், குகன், சார்லி, சண்முகம் மற்றும் பலர் நடித்திருந்தனர். பல ஆண்டுகாலமாக மழையே பெய்யாத அந்த கிராமத்தில் ஏரி, குளம், ஆறு, கிணறு என அனைத்து இடங்களும் வறட்சியில்  பிளந்து கிடைக்க அங்கே இருக்கும் மக்கள் தாகத்தால் தவிக்கும் காட்சி பார்வையாளர்களை மிரள செய்தது. அது மட்டுமின்றி மின்சாரம், மருத்துவம், போக்குவரத்து என எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாத கிராமத்தில் அவதிப்படும் மக்கள் தங்களின் நிலையை எடுத்துரைத்து அரசுக்கு கோரிக்கை வைத்தும் அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. 


கதையின் நாயகியாக செவ்வந்தி என்ற கதாபாத்திரத்தில் சரிதாவின் அட்டகாசமான நடிப்பு காண்போரை கரைய வைத்தது. கோமல் சுவாமிநாதனின் வசனம் ஒவ்வொன்றும் சமூகத்தின் நிலையை நெற்றியில் அடித்தார் போல துணிச்சலுடன் வெளிப்படுத்தியது. ஒரு கட்டத்தில் அரசை எதிர்பார்த்து ஏமாந்த ஊர் மக்கள் தாங்களாகவே ஒரு கால்வாய் வெட்டலாம் என தீர்மானிக்கும் போது அதையும் செய்யவிடாமல் அரசாங்கம் எதிர்க்கிறது. எப்படி அந்த பிரச்சனையை ஊர் மக்கள் எதிர்த்து போராடினார்கள்? ஊர் மக்களுக்கு தண்ணீர் கிடைத்ததா? என்பது தான் தண்ணீர் தண்ணீர் படத்தின் கதைக்களம். 


இன்று தண்ணீர் பிரச்சினை இருக்கும் பல இடங்களில் எல்லாம் மக்கள் காலி தண்ணீர் குடங்களுடன் மறியல் செய்வதை பார்த்ததுண்டு. அவை அனைத்திற்கும் ஆரம்ப புள்ளியை அமைந்தது தண்ணீர் தண்ணீர் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு நாலு குடம் தண்ணீருக்காக மக்கள் எந்த அளவிற்கு கஷ்டப்படுகிறார்கள் என்பதை அப்பட்டமாக இப்படத்தின்  மூலம் வெளிச்சம் போட்டு காட்டினார் பாலச்சந்தர். 


சரிதா மற்றும் ராதாரவி திரை பயணத்தில் மிக முக்கியமான படமாக அமைந்தது தண்ணீர் தண்ணீர் திரைப்படம். எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் இப்படத்தின் பாடல்கள் அனைத்துமே சிறப்பாக அமைந்தது. இப்படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்களுக்கு கவியரசு கண்ணதாசன் தான் வரிகளை எழுதினார். அதுவே அவர் கடைசியாக எழுதிய பாடல் வரிகளாகின. மீதம் உள்ள பாடல்களின் வரிகளை கவிப்பேரரசு வைரமுத்து எழுதினார். இப்படி பல ஜாம்பவான்களின் கூட்டணியில் அமைத்த ஒரு வெற்றி படம் தான் தண்ணீர் தண்ணீர்.