தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர். 1984ம் ஆண்டு விஜயகாந்த், விஜி, அனுராதா, ஒய்.ஜி.மகேந்திரன், வெண்ணிற ஆடை மூர்த்தி, எஸ்.எஸ். சந்திரன் உள்ளிட்டோரின்  நடிப்பில் வெளியான திரைப்படம் 'வெற்றி'. இப்படத்தில் தான் நடிகர் விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.


40 ஆண்டுகள் நிறைவு:


நடிகர் விஜயகாந்தின் குழந்தை பருவத்து கதாபாத்திரத்தில் விஜய் நடித்திருந்தார்.  இப்படம் வெளியாகி இன்றுடன் 40 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. வெற்றி திரைப்படத்துடன் சேர்த்து நடிகர் விஜய்யும் அவரின் திரை பயணத்தை தொடங்கி 40 ஆண்டுகளை நிறைவு செய்கிறார்.


 



குழந்தை நட்சத்திரமாக :


தந்தை ஒரு சிறந்த இயக்குநராக இருந்து மகனுக்கு திரையுலகில் ஒரு அடித்தளத்தை ஏற்படுத்தி கொடுத்தார். அந்த வகையில் அடுத்தடுத்து எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக மகன் விஜய்யையே நடிக்க வைத்தார். முதல் படத்திலே சீரியஸ் கதாபாத்திரத்தில் விஜய் நடிக்க அதை தொடர்ந்து குடும்பம், நான் சிகப்பு மனிதன், வசந்த ராகம், சட்டம் ஒரு விளையாட்டு, இது எங்கள் நீதி உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக 1988ம் ஆண்டு வரை நடித்திருந்தார்.


ஹீரோவாக அறிமுகம் :


1992ம் ஆண்டு வெளியான 'நாளைய தீர்ப்பு' திரைப்படம் மூலம் முதன்மை கதாபாத்திரத்தில் அறிமுகபடுத்தினார் எஸ்.ஏ. சந்திரசேகர். அதன் தொடர்ச்சியாக செந்தூரபாண்டி, ரசிகன், ராஜாவின் பார்வையிலே, விஷ்ணு, சந்திரலேகா, கோயம்புத்தூர் மாப்பிள்ளை என அடுத்தடுத்து கமர்சியல் படங்களாக நடித்து இளைய தளபதி என்ற அடைமொழியுடன் கொண்டாடப்பட்டார்.


கமர்ஷியல் முதல் ஸ்டார் ஹீரோ வரை :


கமர்ஷியல் ஹீரோ என்ற முத்திரை.யை மாற்றும் விதமாக அமைந்தது விக்ரமன் இயக்கத்தில் 1996ம் ஆண்டு வெளியான 'பூவே உனக்காக' திரைப்படம்.  பாசிலின் 'காதலுக்கு மரியாதை' திரைப்படம் மூலம் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை எட்டி பிடித்தார் விஜய். அதன் மூலம் சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு அரசின் விருதை பெற்றார். அன்று முதல் அவரின் திரை பயணம் ஏறுமுகமாக அமைந்தது. அனைத்து தரப்பு மக்களின் ஃபேவரட் ஹீரோ ஆனார். ஆக்ஷன், காமெடி, செண்டிமெண்ட், காதல், நட்பு  என அனைத்து கெட்டகாரியிலும் தூள் கிளப்பினார். 


 



வசூல் ராஜா :


தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வளர்ந்து வந்த விஜய் படங்கள் சமீப காலமாக ஏகபோக வரவேற்பை பெற்று வந்தது. FDFS காட்சியை பார்க்க ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. அதே சமயம் அவரின் படங்கள் வசூல் ரீதியாகவும் சாதனைகளை படைத்தன.


அரசியல் பிரவேசம் :


அசைக்க முடியாத ஒரு ஹீரோவாக சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2ம் தேதி ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை துவங்கி 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவிப்பை வெளிட்டு இருந்தார். அதனால் அவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள படங்களை முடித்து கொடுத்த பிறகு முழுவீச்சில் அரசியலில் ஈடுபட போவதாக தெரிவித்து இருந்தார். தற்போது அவர் நடித்து வரும் GOAT மற்றும் தளபதி 69 படங்களை முடித்ததும் சினிமாவில் இருந்து விலக போவதாக அவர் வெளியிட்ட அறிவிப்பு அவரின் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.


இருப்பினும் ஒரு நல்ல நடிகனாக ரசிகர்களை எந்த அளவுக்கு சந்தோஷமாக வைத்திருந்தாரோ அதே போல ஒரு நல்ல அரசியல் தலைவனாக தமிழக மக்களின் நலனுக்காக பாடுபடுவார் என அவர்களின் மனங்களை தேற்றி கொண்டனர்.