மலையாளத்தில் வெளியான நடிகர் ஃபஹத் ஃபாசிலின் “ஆவேஷம்” படம் ரூ.100 கோடி வசூலித்து சாதனைப் படைத்துள்ளது.
மலையாள சினிமாவுலகில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற ரோமஞ்சம் படத்தை இயக்கியவர் ஜித்து மாதவன். இவர் அடுத்தாக ஃபஹத் ஃபாசிலை வைத்து “ஆவேஷம்” என்ற படத்தை இயக்கியிருந்தார். இப்படம் கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியாகியது. ரசிகர்களிடம் இருந்து பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்ற இப்படம் வசூலை வாரிக்குவித்தது. சுஷின் ஷ்யாம் இசையமைத்த இப்படத்தை ஃபஹத் ஃபாசில் அண்ட் ஃப்ரெண்ட்ஸ் மற்றும் அன்வர் ரஷீத் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருந்தது.
ஆவேஷம் படம் 14 நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளது. இது மலையாள சினிமாவுலகில் மகத்தான சாதனையாக பார்க்கப்படுகிறது. தற்காலங்களில் ரூ.100 கோடி வசூலிப்பது சாதாரண விஷயம் என குறிப்பிடப்பட்டாலும், முன்னணி நடிகர்கள் இல்லாமல் இளம் நடிகர்கள் நடித்த படங்கள் ரூ.100 கோடி வசூலித்திருப்பது தான் அங்கு பேசுபொருளாக மாறியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் வெளியான பிரேமலு மற்றும் மஞ்சும்மல் பாய்ஸ் ஆகிய இரண்டு திரைப்படங்களும் தாறுமாறாக வசூலை ஈட்டியது.
தொடர்ந்து மார்ச் மாதம் வெளியான பிரித்விராஜ் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கிய ஆடுஜீவிதம் படம் ரூ.100 கோடியை அள்ளியது. இந்நிலையில் தற்போது ஃபஹத் ஃபாசில் நடித்த “ஆவேஷம்” படமும் ரூ.100 கோடி வசூலை பெற்றுள்ளது பிற திரையுலகினர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தடுமாறுகிறதா தமிழ் சினிமா?
இப்படியான நிலையில் எப்போதும் தரமான படங்களை வழங்கும் தமிழ் சினிமா தடம் மாறி வருகிறதா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. ஏற்கனவே ரீ-ரிலீஸ் படங்கள் கல்லா கட்டி வரும் நிலையில், மறுபக்கம் முன்னணி நடிகர்களின் படங்கள் எதுவும் பெரிய வெற்றியைப் பெறவில்லை. இன்னொரு பக்கம் சிறிய பட்ஜெட் படங்கள் தரமான கதையாக இருந்தாலும் மக்கள் தியேட்டருக்கு வராததால் காட்சிகள் கொடுக்கவே தியேட்டர்கள் தயங்குகின்றன. இவற்றுக்கெல்லாம் தீர்வே இல்லையா என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழ தொடங்கியுள்ளது.
2023 ஆம் ஆண்டில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர், விஜய் நடித்த லியோ ஆகிய 2 படங்கள் ரூ.600 கோடி வசூலை ஈட்டி மகத்தான சாதனைப் படைத்தது. ஆனால் இந்த முறை 4 மாதங்கள் நிறைவடைந்த நிலையில் தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான், ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்த லால் சலாம், ஜெயம் ரவி நடித்த சைரன் உள்ளிட்ட படங்கள் மக்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறி விட்டது.
இரண்டாம் பாதியில் இந்தியன் 2, தி கிரேட்டஸ் ஆஃப் ஆல் டைம், விடா முயற்சி, வேட்டையன், அமரன், கங்குவா,ராயன், தங்கலான், விடுதலை பாகம் 2 என பல படங்கள் ரிலீசாக உள்ளது. இந்த படங்கள் ஜெயித்தால் மட்டுமே இந்தாண்டு தமிழ் சினிமா சொல்லிக்கொள்ளும்படியான நிலையில் இருக்கும். ஏற்கனவே ரீ-ரிலீஸ் படங்கள் கொஞ்சம் கொஞ்சமாக புதிய படங்களின் வெற்றியை தடுத்து வரும் நிலையில் சரியான முறையில் ரசிகர்களை கவர படங்களும் தவறி வருவது சரியாகுமா என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.