தமிழ் சினிமா கொண்டாடிய ஆச்சி மனோரமா சுமார் ஆறு தசாப்தங்களாக 1200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பல தரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் அனைவராலும் கொண்டாடப்பட்டவர். அவரின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படமாக இன்றும் நினைவில் நிற்கும் ஒரு முழு நீள காமெடி திரைப்படம் 'பாட்டி சொல்லை தட்டாதே'. 1988ஆம் ஆண்டு ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ராஜசேகர் இயக்கத்தில் உருவான இப்படம் இன்றுடன் 35 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 


 



அன்றைய காலகட்டத்தில் மிகவும் சிறந்த காமெடி ஜோடியாக இருந்த எஸ்.எஸ். சந்திரன் - ஆச்சி மனோராமா காம்போவில் பாண்டியராஜன், ஊர்வசி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த இப்படம் வெள்ளி விழா கண்ட ஒரு சூப்பர் ஹிட் படம்.


அது வரையில் தமிழ் சினிமா காணாத ஒரு வித்தியாசமான காமெடி காட்சிகள் நிறைந்த ஒரு படம். அது இன்றும் பேசப்படுவது தான் அப்படத்தின் சிறப்பு. இப்படத்தின் மிகப்பெரிய ஹைலைட்டே கிளைமாக்ஸ் காட்சியில் இடம்பெற்ற பைட் சீன் மற்றும் கார் சேஸ் சீன் தான். அந்த காருக்கு முன் பாதியில் கார் எஞ்சினும் பின் பாதியில் ஆட்டோ எஞ்சினும் பொருத்தி மாஸ் காட்டினர்.


அதே போல சண்டைக்காட்சிகளையும் ரசிகர்கள் மிகவும் விரும்பினர். சிறிய பட்ஜெட்டில் பெரிய லாபம் ஈட்டிய இப்படத்தில் ‘கண்ணாத்தா’ என்ற கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக  சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார்.


தாய் தந்தையை இழந்த பேரனை தாத்தாவும் பாட்டியும் அன்பைக் கொட்டி வளர்க்கிறார்கள். பேரன் பாண்டியராஜன் தனது அலுவலகத்தில் வேலை செய்யும் ஊர்வசியை சந்தித்து காதல் வயப்படுகிறான். கட்டாயத் திருமணத்தில் விருப்பமில்லாததால் வீட்டுக்குச் செல்ல மறுக்கும் ஊர்வசியை ரகசியமாக பாண்டியராஜன் திருமணம் செய்து கொண்டு இருவரும் சென்னையில் வசிக்கிறார்கள்.


 



அதே சமயம் அலுவலகத்தில் திருமணம் பற்றி யாருக்கும் சொல்லாமல் ஒருவரை ஒருவர் தெரியாது போலவே காட்டிக் கொள்கிறார்கள். பாட்டியும் தாத்தாவும் சென்னைக்கு வர, அவர்களிடம் தங்களுக்கு கல்யாணமாகி குழந்தை இருப்பதாக பொய் சொல்லி விடுகிறார்கள்.


சில்க் ஸ்மிதாவின் குழந்தையை வாடகைக்கு வாங்கி பாட்டியை ஏமாற்றுகிறார்கள். பின்னர் அவர்களுக்கு இடையே ஏற்படும் குழப்பம் படத்தை ஸ்வாரஸ்யமாக நகர்த்துகிறது. பெரிய ரகளைக்கு பிறகு பாட்டிக்கு உண்மை தெரியவருகிறது. இது தான் பாட்டி சொல்லை தட்டாதே படத்தின் கதை. இந்தத் திரைக்கதையை மேலும் சுவாரஸ்யமாக்கியது சித்ராலயா கோபுவின் வசனங்கள். இன்றளவும் அவை பேசப்படும் வசனங்களாக இருப்பது தான் அதன் தனிச்சிறப்பு. 


இப்படத்தின் ப்ரிவியூ காட்சி கார்ட்டூன் வடிவத்தில் வெளியிடப்பட்ட நிலையில், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அந்தக் காலகட்டத்திலேயே இப்படம் 175 நாட்களுக்கும் மேல் திரையரங்குகளில் ஓடி நல்ல வசூலை ஈட்டியதுடன், என்றுமே ஒரு கிளாசிக் எவர்கிரீன் காமெடி படங்களில் ஒன்றாக விளங்குகிறது 35 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான 'பாட்டி சொல்லைத் தட்டாதே' திரைப்படம்.