தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களுள் ஒருவராக வலம் வரும் சியான் விக்ரம் திரையுலகிற்குள் நுழைந்து இன்றுடன் 32 வருடங்கள் ஆகின்றது. இது குறித்த வீடியோ பதிவு ஒன்றை நடிகர் விக்ரம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
சியான் விக்ரம்:
பரமக்குடியில் இருந்து சினிமா கனவுடன் சென்னை வந்த இவருக்கு, ஆரம்பத்தில் பல நெருக்கடிகளும், தடைகளும் ஏற்பட்டாலும், அவையனைத்தையும் ஒன்-மேன் ஆர்மியாக கடந்து இன்று தமிழ் சினிமாவில் முன்னனி ஹீரோக்களுள் ஒருவராக நிற்கிறார். பிரபல இயக்குனர் பாலாவின் இயக்கத்தில், 1999ஆம் ஆண்டு வெளியான சேது படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஹீரோவாக அறிமுகமானவர் விக்ரம். இவரது முழு பெயர் கென்னடி ஜான் விக்டர் என்பது பல பேர் அறியாத கதை. 1990ஆம் ஆண்டு இதே தேதியில் வெளியான என் காதல் கண்மனி என்ற படத்தில் நடிகை ரேகாவுடன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார் விக்ரம். இப்படம் வெளியாகி இன்றுடன் 32 ஆண்டுகள் நிறைவடைகிறது. வெளியான புதிதில், அப்படம் பெரிதாக பேசப்படாத நிலையில், நடிகர் விக்ரம் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிபடங்களில் துணை கதாப்பாத்திரங்களில் நடித்து வந்தார். அது மட்டுமன்றி, கோலிவுட்டிலும் சில படங்களில் ஹீரோக்களுக்கு டப்பிங் பேசியுள்ளார். “காதலன் படத்தில் பிரபு தேவாவிற்கு வாய்ஸ் கொடுத்ததே இவர்தானா?” என்று ரசிகர்கள் இன்றளவும் ஆச்சரியம் கொள்கின்றனர்.
சூப்பர் ஹிட் படங்கள்:
ஆரம்ப காலத்தில், நல்ல நடிப்பு திறமை இருந்தும் ஏனோ இவருக்கு அதற்கேற்ற அங்கீகாரம் இவருக்கு கிடைக்காமலேயே போய்க்கொண்டிருந்தது. அப்போதுதான் அவரைத் தேடி வந்தது சேது படத்தில் ஹீரோவாக நடிக்கும். வாய்ப்பு. இப்படத்தில், ஒரிஜினல் ரக்கட் பாயாகவும், காதலையும் காதலியையும் இழந்த பிறகு பித்து பிடித்தவராகவும் ‘சியான்’ என்ற ரோலில் ரசிகர்களை அசரவைத்தார் விக்ரம். அதே போல 2001ஆம் ஆண்டில் ரிலீஸான காசி படத்திலும் கண் பார்வையற்றவராக தனது நடிப்பால் காண்பவர்களை மிரள வைத்தார். இதையடுத்து, விக்ரமின் திரமைக்கேற்ற படங்கள் அடுத்தடுத்து அவரது வாசல் கதவை தட்டிக்கொண்டேயிருந்தது. அதற்கடுத்து 2000 காலங்களில் இவர் நடிப்பில் வெளிவந்த படங்களான தூள், அந்நியன், தில் உள்ளிட்ட படங்கள் சூப்பர் ஹிட் அடித்தன.
திரையுலகில் 32 வருடங்கள்!
நடிகர் விக்ரமின் 32 ஆண்டு கால சினிமா வாழ்க்கையை கொண்டாடும் வகையில், அவர் நடித்துள்ள படங்களில் முத்திரை பதிக்கும் காட்சிகளை வைத்து அவரது ரசிகர் ஒருவர் அவருக்கு எடிட் செய்து கொடுத்துள்ளார். இதை விக்ரம், தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.
வீடியோ பதிவுடன் நடிகர் விக்ரம், ”இத்தனை வருடங்கள். அத்தனை கனவுகள். முயற்சி திருவினை ஆக்கும் என்பார்கள். நீங்கள் இல்லையெனில் அது வெரும் முயற்சி மட்டுமே. இந்த 32 வருடத்துக்கு நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.
பொன்னியின் செல்வன் படத்தில், அசல் அரசனாகவும், சமயத்தில் அரக்கனாகவும் ஆதித்த கரிகாலனாக கலக்கிய விக்ரமின் நடிப்பை அனைவரும் பாராட்டி தள்ளினர். சேது படம் முதல், சமீபத்தில் வெளியான கோப்ரா படம் வரை புது புது கெட்-அப்புகளில அசராமல் நடித்து மக்களின் மனங்களை கவருவதில் வல்லவர் விக்ரம். தமிழ் சினிமா உலகில், டெக்னிக்கலாகவும், திரைக் கதை ரீதியாகவும் பல விஷயங்கள் மாறிவிட்டது. ஆனால் விக்ரமின் 32 வருடங்களில் இன்னமும் மாறாமல் இருப்பது இவரது அசராத நடிப்பும், அயராத உழைப்பும்தான் என ரசிகர்கள் தங்கள் கருத்துகளை சமூக வலைதளங்களில் பரிமாறி வருகின்றனர்.