நட்பின் அச்சில் உலகம் சுற்றிக்கொண்டிருக்கிறது என்று நம்புபவர்களுக்கு புராண காலத்திலிருந்தே கதைகள் இருக்கின்றன. கர்ணன் - துரியோதனன் நட்பு கதை அதற்கு சிறந்த உதாரணம். அப்படி நட்பின் அச்சில் நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்காக மணிரத்னம் எடுத்த படம் ‘தளபதி’.
தமிழ் சினிமாவின் உச்சபட்ச ஸ்டார் ரஜினி, மலையாள படவுலகின் மெகா ஸ்டார் மம்மூட்டி இருவரையும் வைத்து நட்பின் அச்சை வார்த்து புது உலகத்தை படைத்தார் மணிரத்னம். படத்தின் முதல் காட்சியிலேயே ரசிகர்களை படத்துடன் கனெக்ட் செய்யும் வித்தையை மணிரத்னம் அசாத்தியமாக செய்திருப்பார். பதின் பருவ பெண் ஒருவர் குழந்தையை பெற்றுவிட்டு என்ன செய்வதென்று தெரியாமல் கூட்ஸ் வண்டியில் அந்தப் பிஞ்சை வைத்து அனுப்புவதில் நெஞ்சை அடைக்கும் சோகம் ஒன்று எட்டிப்பார்க்கும்.
காட்சி இப்படி என்றால் அதற்கு இசைஞானி செய்த காரியம் லேசுப்பட்டது அல்ல. சின்ன தாயவள் என்று பாடல் தொடங்கும்போது எட்டிப்பார்த்த சோகம் ரசிகர்களை கெட்டியாக பிடித்துக்கொள்ளும். படம் இப்படி அமைதியாக ஆரம்பித்தாலும் போகப்போக பற்றிக்கொள்ளும்.
மணிரத்னத்தின் அனைத்து படங்களிலும் ஒருவித அமைதி நிலவும். அந்த அமைதிக்குள் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் இருக்கும். நாயகன் அமைதிக்குள் கட்டுக்கோப்பான ஆர்ப்பாட்டத்தை தூவியிருந்த மணிரத்னம், தளபதி அமைதிக்குள் அளவற்ற ஆர்ப்பாட்டத்தை நிகழ்த்தியிருப்பார்.
ரஜினி என்ற மாஸ் ஹீரோவை இப்படியும் மாற்றிக்காட்டலாம் என்று கோலிவுட்டுக்கு சொன்ன படம் தளபதி. ரஜினியின் ஹேர் ஸ்டைலும், அவரது உடையமைப்பும் வேறு ஒரு ரஜினியை அறிமுகம் செய்துவைத்தது.
இருவருக்குள் உருவாகும் அன்யோன்யத்தின் ஆதி எப்போதும் எதிர் எதிர் நிலையிலிருந்தே தொடங்கும். சூர்யாவும், தேவாவும் அப்படித்தான்.தேவாவை கண்டு ஊரே நடுங்க தேவா ஆள்களில் ஒருவரை சூர்யா துவைத்து எடுத்து தேவாவை பகைத்துக்கொள்ள அந்தப் பகை எப்போதும் விலகாத நட்பை அவர்களுக்குள் உருவாக்கியது.
வாழ்க்கை நம்மை அழைத்து செல்லும் விதம் வித்தியாசமானது. எங்கு கொண்டு போய் சேர்க்கும் என்பது தெரியாமல் கூட்ஸ் வண்டியில் பயணப்பட்டு ஒரு பாட்டியின் கையில் வந்து சேரும் சூர்யா தேவாவின் ஆன்மாவில் கலப்பது யாரும் எதிர்பார்க்காதது.
சூர்யாவை தன்னுடன் வந்து தங்க அழைக்கும் தேவாவிடம், என்னை நம்பி இவ்வளவு பேரு இருக்காங்க தேவா என சூர்யா சொல்ல எனக்கு உன்னை விட்டா யார் இருக்கா என தேவா சொல்வது நட்பு ஆழத்தின் அழகியல். ரஜினி மிகச்சிறந்த நடிகன். அவர் மாஸ் என்ற வட்டத்துக்குள் சிக்கிக்கொண்டு அந்த நல்ல நடிகனை இழந்துவிட்டாரோ என்ற சந்தேகம் இன்றளவும் பலருக்கு இருக்கிறது. அது ஒருவகையில் உண்மையும்கூட. அவரை சுற்றி வியாபாரம் பெருக தன்னை அறியாமலேயே அந்த வட்டத்துக்குள் அவர் சென்றுவிட்டார்.
ஆனால், அந்த வட்டத்துக்குள்ளேயே ரஜினியை வைத்து மிகச்சிறந்த நடிப்பை வாங்கியிருப்பார் மணிரத்னம். மகேந்திரன், எஸ்.பி. முத்துராமனுக்கு அடுத்து ரஜினிக்குள் இருக்கும் மிகச்சிறந்த எமோஷனலையும், நடிப்பையும் மணி வாங்கியிருப்பார்.
ரஜினியிடமிருந்து ஷோபனா பிரிவதுபோல் படத்தில் ஒரு காட்சி வரும். அந்தக் காட்சியின் கலர் டோனும், மணியின் ஷாட் கம்போஸும் ஒருவித சோகத்தை கொடுக்க, அழுகையை தேக்கிக்கொண்டு ஷோபனாவிடம் போ என சொல்வார். அந்த ஒரு காட்சி போதும் ரஜினி எவ்வளவு பெரிய நடிகன் என சொல்வதற்கு.
போ என்று ஒருவார்த்தையில் காதலின் பிரிவை ரஜினி ஏற்றுவிட்டாரே என்ற எண்ணம் எழுகையில் அந்த இடத்தில் இளையராஜா வசனம் எழுதியிருப்பார். ஆம், இளையராஜா இசையமைப்பாளர் மட்டுமில்லை எங்கெல்லாம் மொழியற்று வலி நிறைந்த மௌனம் நிகழ்கிறதோ அங்கெல்லாம் இளையராஜாவால் மட்டும்தான் வசனம் எழுத முடியும்.
தமிழ் சினிமாவில் எத்தனையோ மாஸ் காட்சிகள் வரலாம். வந்திருக்கின்றன. ஆனால், அரவிந்த் சாமியுடன், ரஜினியும், மம்மூட்டியும், நாகேஷும் நிகழ்த்தும் உரையாடல் காட்சியின் தாக்கம் இன்றுவரை பல காட்சிகளில் இருக்கிறது.
நீண்ட வசனம் பேசிவிட்டு , “இது சூர்யா சார் நெருங்காதிங்க” என்ற ஒற்றை வார்த்தையை சொல்வதில் இருக்கும் மாஸும், அதற்கு இளையராஜா கொடுத்திருந்த பின்னணி இசையும் இனி எப்போதும் நிகழாத மேஜிக்.
அதேபோல் மம்மூட்டி. தனது பக்குவமான நடிப்பில் மிரள வைத்திருப்பார். ரஜினி குறித்து ஷோபனாவின் தந்தையிடம் பேசும் காட்சியில் சூர்யாவுக்கு ஒரு அண்ணனாக பேச ஆரம்பித்து கடைசியில் நண்பனாக பேச்சை முடித்திருப்பார். இப்படி படத்தில் ஒவ்வொருவரும் தங்களது கதாபாத்திரத்தை முழுமையாக உணர்ந்திருப்பர்.
படம் வெளியாகி இன்றோடு 30 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இருந்தாலும் அந்தப் படத்துக்கு ரசிகர்கள் எக்கச்சக்கமாக இன்றளவும் இருக்கின்றனர். அதற்கு காரணம் இப்படம் தமிழ் சினிமா படையின் ஒற்றை தளபதி.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்