அண்ணாமலை என்கிற பெயரை இன்று பலரும் உபயோகித்துக் கொண்டிருக்கிறார்கள். அதெல்லாம் அரசியல்; அதற்கும் இந்த செய்திக்கும் சம்மந்தம் இல்லை. ஆனால், 30 ஆண்டுகளுக்கு முன்பே அண்ணாமலை என்கிற பெயர், தமிழ்நாட்டில் பேமஸ். நடிகர் ரஜினிகாந்த் நடித்து, சுரேஷ்கிருஷ்ணா இயக்கி, தேவா இசையமைத்த படம். 


‛வந்தேண்டா பாலுக்காரன்...’ என, ஓப்பனிங் சாங்கில் எண்ட்ரி ஆகும் வெள்ளந்தி ரஜினி, நண்பன் அசோக்கை நம்பி... தன் சொத்துக்களை இழந்து நடுரோட்டில் நிற்பதும், ‛வெற்றி நிச்சயம்... இது வேத சத்தியம்...’ என ஒரே பாடலில், ஓவர் நைட்டில் அண்ணாமலை, கோடீஸ்வரன் ஆவதும் தான் கதை. 




ஜோடிக்கு குஷ்பூ, தோழனுக்கு சரத்பாபு, அன்புக்கு அம்மாவாக மனோரமா, வழக்கம் போல வில்லனாக நிழல்கள் ரவி , சிரிப்புக்கு ஜனகராஜ் என, மிகச்சிறிய நட்சத்திர பட்டாளங்களோடு, மெகா ஸ்டார்கள் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம். குஷ்பூவுக்கு ஒரு பாட்டு, ரஜினிக்கு ஒரு பாட்டு என , பெயருக்கு பெயர் வைத்து பாட்டு எழுதி, அதையும் ஹிட் அடித்த வைரமுத்து-தேவா கூட்டணியில் குதூகல பாடல்கள், இன்றும் கேட்க இனிமையானது. 


புல்டவுசரில் வீடு இடிக்கப்பட்ட போது, நண்பனின் துரோகத்தை கண்டு பொங்கும் அண்ணாமலை ரஜினி, ‛அசோக்... இந்த நாள்... உன் காலண்டரில் குறிச்சு வெச்சுக்கோ...’ என வசனம் பேசிவிட்டு, வீட்டை விட்டு வெளியேறும் அண்ணாமலை, பின்னர் அதே வீட்டை வாங்கி, நண்பனுக்கு சூடு வைத்து, பின்னர் அவரிடமே வீட்டை ஒப்படைத்து பெருந்தன்மையை நிரூபிக்கும், முழுநீல ‛பாசிட்டிவ்’ படம் தான், அண்ணாமலை. 




உழைத்து முன்னேற வேண்டும் என பலருக்கு தூண்டுதலாக இருந்த படம். ஒரு பாடலில் முன்னேறலாம் என்பது கற்பனை என்றாலும், நினைத்தால் முன்னேறலாம் என்பதை எடுத்துரைத்த வகையில், பலருக்கு தூண்டுகோலாய் இருந்தது அண்ணாமலை படம். அண்ணாமலை சைக்கிள் , அண்ணாமலை செருப்பு, அண்ணாமலை சட்டை என புதிய ரெண்ட்டுகளை அப்போதே உருவாக்கிய படம். நட்பு, காதல், பாசம், மகள், துரோகம் என அனைத்து மசாலாக்களும் போதிய அளவு நிரப்பப்பட்டு , கொதி நிலையில் பரிமாறப்பட்ட அண்ணாமலை பிரியாணி, அப்போதே அலாதியாய் இருந்ததால் தான், இன்று 30 ஆண்டுகளுக்குப் பிறகும் கொண்டாடப்படுகிறது. 




உண்மையில் நாட்கள் ஓடிவிட்டன தான். ஆனால், மாதத்திற்கு ஒரு நாளாவது, ஏதாவது ஒரு சேனலில் அண்ணாமலை ஓடிக்கொண்டு தான் இருக்கிறது. ரஜினியின் சூப்பர் ஸ்டார் பயணத்தில், டாப் 10 ஹிட் படங்கள் என எடுத்தால், அதில் அண்ணாமலை கட்டாயம் இருக்கும். ‛எனை வாழ வைப்பது தமிழ்நாடு’ என , எண்ட் கார்டில் வணக்கம் போடும் ரஜினி, அரசியலுக்கு வருவார் என்பதற்கான சாயலாகத் தான் அப்படிப்பட்ட வசனங்களும் காட்சிகளும் வைக்கப்பட்டன. ஆனால், 30 வருடம் கழித்துப் பார்த்தாலும், ரஜினி அரசியலுக்கு வரவில்லை ; முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் என்பது மட்டும் தான், குறையே தவிர, மற்றபடி அண்ணாமலை.. மாஸ் தான்!