படையப்பா இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், ரம்யாகிருஷ்ணன், சௌந்தர்யா, செந்தில் மற்றும் பல நடிகர்கள் நடித்திருக்கும் அதிரடி மற்றும் குடும்பத்திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் பி எல் தென்னப்பன் தயாரிக்க, இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருப்பார். படையப்பா ரஜினியின் திரை வாழ்க்கையில் தவிர்க்க முடியாத மிக முக்கிய வெற்றிப் படங்களில் ஒன்று. என்றும் நினைவிலிருந்து அழியாதிருக்கக்கூடிய முக்கியப் படங்களிலும் ஒன்று. காரணம், இன்றைக்கும் ஒரு வலுவான கமர்ஷியல் திரைப்படம் எப்படி உருவாக வேண்டும் என்பதற்குப் படையப்பா திரைக்கதை ஒரு ஆகச் சிறந்த உதாரணம்.


படையப்பா வெற்றியின் பெரும் பலம் திரைக்கதை. படம் வெளியாகி 22 ஆண்டுகள் ஆன பிறகும், காட்சிகள் நினைவிலிருப்பதற்குக் காரணம் ரஜினி. ரஜினியின் வசனங்களும், நடிப்பும் நினைவிலிருப்பதற்குக் காரணம் திரைக்கதை. அதுமட்டுமின்றி இந்த திரைப்படத்தில் இன்றளவும் பேசப்படும் காட்சிகள் பல உள்ளன, அவற்றில் ஊஞ்சல் காட்சி, ஊரே திரண்டு வரும் காட்சி, ரஜினியின் உடலை சட்டையின்றி காண்பிக்கும் காட்சி ஆகியவை எப்படி யாதர்த்தமாகவே உருவாகின என்பதை விளக்கி இருக்கிறார். இது எதுவுமே திட்டமிட்டு செய்தது இல்லை என்று கூறியிருக்கிறார்.



"வீட்டிற்குள் சென்றதும் ஊஞ்சலை பார்த்ததும் தோன்றியது. ஏற்கனவே வேறு மாதிரி வைத்திருந்தோம் அந்த காட்சியை, ஒரு கயிற்றை கட்டி சோஃபாவை இழுப்பது போல இருந்தது. அந்த ஊஞ்சலை பார்த்ததும், பெரிய வீட்டில் எல்லா உட்காரும் பொருட்களையும் எடுத்து மறைத்துவைக்க வேண்டும். அப்போது தான் ஊஞ்சலை என்ன செய்வது என்ற கேள்வி வந்ததும், நான் ஆர்ட் டைரக்டரை கூப்பிட்டு, இந்த ஊஞ்சலை மேலே கட்டி வைத்து துண்டை வைத்து இழுத்ததும் வருவதுபோல செய்யமுடியுமா என்றேன், முடியும் என்றார், லஞ்ச் முடிச்சிட்டு வந்து பாத்தோம் மேல ஒரு கட்டையை வைத்து கட்டி வைத்திருந்தார். ரஜினி சார் கேட்டார் வேற மாதிரி வச்சுருந்தீங்களே இந்த ஸீன், என்னாச்சுன்னு கேட்டார், இந்த ஊஞ்சலை பார்த்ததும் தோணுச்சு சார் இது அதை விட நல்லாருக்கும்ன்னு சொன்னேன் அப்படிதான் நடந்தது அது. பின்னாடி இவ்வளவு பெரிய சீனா மாறும்ன்னு நெனைக்கல." என்று அந்த ஊஞ்சல் இழுத்து அமரும் காட்சி உருவான விதத்தை விளக்கினார்.



"ஒரு நாள் அவர் எக்சர்சைஸ் பண்ணிட்டு இருக்கும்போது பாத்தேன், சார் என்ன சார் உடம்ப இப்படி வச்சுருக்கீங்க, நான் இப்படி இருக்கும்ன்னு நெனைகல, ஒல்லியான உடம்பு இருக்கும்ன்னு தான் நெனச்சேன்னு சொன்னேன், ஆமா சார் எக்சர்சைஸ் பன்றேன், ஸ்கிப்பிங் பன்றேன் சார்னு சொன்னார், இத படத்துல பயன்படுத்தலாமே சார், நல்லா முறுக்கேறி இருக்கு என்றேன். 1000 ஸ்கிப்பிங் எல்லாம் பண்ணுவாரு, அதுலயும் ஸ்பீடு தான்.  அப்புறம் தான் கனல் கண்ணனை கூப்பிட்டு சொன்னேன், அண்ணன் அவருக்கு போயி பாடியெல்லாம், அதெல்லாம் நல்லாருக்காதுண்ணேன்னு சொன்னாரு, நான் கூட்டிட்டு போயி காமிச்சேன், அசந்து போய்ட்டார். அப்போது அந்த ஸீன் ஷூட்டிங்கிற்கு 10 நாள் முன்னதாக சொல்லுங்கள் நான் எக்ஸ்டரா பன்றேன்னு சொன்னார். அப்புறம் தான் அந்த ஷாட்ஸ் எடுத்தோம். நெறைய பேர் சிஜி ன்னு சொல்றாங்க, அந்த காலத்துல சிஜியே கிடையாது. படத்துலயே நாலு சிஜி தான், அந்த வேல் பறந்து வர்றது, புல்லட் போறதுன்னு அதுவே அவ்வளவு கேவலமா இருக்கும்" என்று ரஜினி வெற்றிக்கொடிகட்டு பாடலில் சட்டையின்றி உழைக்கும் காட்சியை எடுத்ததை குறிப்பிட்டார்.



படையப்பா திரைப்படம் மூன்று தலைமுறைகளைக் கொண்ட கதை என்பதால், சுமார் மூன்றரை மணி நேரத்துக்கு எடுக்கப்பட்டது. படம் பார்த்த ரஜினி இரண்டு இன்டர்வெல் விடுவதுபற்றி யோசித்ததாகவும், கமல்ஹாசனிடம் நடத்திய ஆலோசனையில் அவர் அது வேண்டாம் என அறிவுறுத்தியதாகவும் பேச்சுகள் உண்டு. அண்மையில் வெளியான பேட்டி ஒன்றில் கே.எஸ். ரவிக்குமார் இதனை உறுதிப்படுத்தியிருப்பார். பிறகு, அந்தப் படம் பெருமளவில் சுருக்கப்பட்டது. இன்றைக்கு ஒருசில படங்களில், நீக்கப்பட்ட காட்சிகளைப் பார்த்த பிறகுதான், சில கதாபாத்திரங்களின் குணாதிசயங்களும், சில காட்சிகளுக்கான காரணங்களும் புரிகின்றன. ஆனால், அத்தனைக் காட்சிகள் நீக்கப்பட்டும் படையப்பா எவ்வித சிதைவும் இல்லாமல் இந்தளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறது என்றால், அதிலிருந்தே அதன் திரைக்கதை வலிமையை உணரலாம். இதற்கானப் பாராட்டு கே.எஸ். ரவிக்குமாரையே சேரும்.


அதுகுறித்து பேசுகையில் "அந்த கூட்டத்தை காட்டுவதற்காக 500 ட்ராக்டர்களை வரவழைத்தோம். அவ்வளவு மக்களை கூட்டினோம், அப்போதுதான் அந்த மக்கள் பின்னால் இருக்கிறார்கள் என்ற பிம்பம் வரும் என்று அவ்வளவு பெருசா மைசூர்ல பண்ணோம். முழு காட்சிகளா ஒரு 3 சீன் டெலிட் பண்ணிருப்போம், டப்பிங் போனதுக்கு அப்புறம் கட் பண்ணோம். செந்திலை வைத்து ஒரு காமெடி ஸீன் இருந்தது, சித்தாராவை பொண்ணு கேட்க வரும் ஸீன் ஒன்று இருந்தது, துண்டு தவறினதுக்கு அப்புறம் முருகர் கோயில் ஒண்ணுல ரஜினி தனியா அநாதயா படுத்துருக்குற மாதிரி ஒரு சீன் இருந்தது, நல்ல லைட்டிங் எல்லாம் வச்சு அருமையா பண்ணிருந்தோம். இது மூனையும் நான்தான் வேண்டாம்ன்னு கட் பண்ண சொல்லிட்டேன்." என்று படையப்பா டெலிட்டட் சீன்ஸ் குறித்து பேசினார்.