30 Years of Ajithism: சினிமாவில் அறிமுகமாகி 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நடிகர் அஜித்துக்கு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
1992 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான பிரேம புத்தகம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகர் அஜித்(Ajith) 1993 ஆம் ஆண்டில் ரிலீசான அமராவதி படத்தின் மூலம் தமிழில் கால் பதித்தார். அதன்பிறகு தொடர்ந்து படங்களில் நடித்த அவருக்கு 1995 ஆம் ஆண்டு வெளியான ஆசை திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. இதன்பின்னர் காதல் மன்னன், அவள் வருவாளா, வாலி, வில்லன், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், அட்டகாசம், வரலாறு, பில்லா, மங்காத்தா, வீரம், விவேகம், வேதாளம், கடைசியாக வெளியான வலிமை படம் வரை தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக இன்றளவும் அஜித் திகழ்கிறார்.
எந்த பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காத அஜித், 2010 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு நடந்த பாராட்டு விழாவில் பிரபலங்களை திரைப்பட விழாக்களில் பங்கெடுக்குமாறு சிலர் மிரட்டுவதாகப் பகிரங்கமாகப் புகார் கூறியது சலசலப்பை ஏற்படுத்தியது. தன் ரசிகர் மன்றத்தை கலைத்தது முதல் அவர்கள் ஆர்வம் மிகுதியால் ஏதாவது செய்யும் போது கண்டிப்பது வரை செய்வதால் அஜித் மீது பெரும்பாலும் அனைவருக்கும் நல்ல அபிப்ராயமே உள்ளது.
இதனிடையே தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் 3வது முறையாக ஒரு படத்தில் இணைந்துள்ள அஜித், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கவும் கமிட் ஆகியுள்ளார். இந்த படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன் ஐரோப்பிய நாடுகளில் அவர் மேற்கொண்ட பைக் பயணத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.
இந்நிலையில் நடிகர் அஜித் திரையுலகில் 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருவதோடு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அஜித்தின் பழைய பேட்டி ஒன்று வைரலாகியுள்ளது. 2009 ஆம் ஆண்டில் அஜித் சிவாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தில் சரண் இயக்கத்தில் அசல் படத்தில் நடித்தார். இந்த படத்தின் தொடக்க நிகழ்வில் அஜித் சினிமாவில் பல வெற்றி, தோல்விகளை என்பது சகஜம் தான். இதையும் மீறி நல்ல மனிதனாகவே இருக்க ஆசைப்படுகிறேன். உங்களுடைய அன்பிற்கும், ஆதரவிற்கும் ரொம்ப நன்றி என தெரிவித்துள்ளார்.