ஆவின் பால் பாக்கெட் அளவு குறைத்து விற்பனை செய்யப்படுவதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், இது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
ஆவின் பால் அளவு குறைப்பு சர்ச்சை
தமிழ்நாட்டில் ஆவின் நிர்வாகம் சார்பில் விற்கப்படும் பால் பாக்கெட்டின் எடை அளவு குறைவாக உள்ளதாக முன்னதாக குற்றச்சாட்டு எழுந்தது. 500 மில்லி லிட்டர் கொண்ட ஒரு பால் பாக்கெட் 520 கிராம் வரை இருக்க வேண்டும். ஆனால், 500 மில்லி லிட்டர் கொண்ட பால் பாக்கெட் 430 கிராம் மட்டுமே எடை உள்ளதாக முன்னதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
அதனைத் தொடர்ந்து ஆவின் நிர்வாகம் சார்பாக இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
ஆவின் நிர்வாகம் விளக்கம்
தொடர்ந்து ஆவின் நிர்வாகம் அளித்த விளக்கத்தில், “ஜூலை 30ம் தேதி வழங்கப்பட்ட ஒரே ஒரு பால் பாக்கெட் எடையின் அளவு மட்டுமே குறைவாக இருந்துள்ளது. அதுவும் உடனடியாக வாடிக்கையாளர்க்கு மாற்றி வழங்கப்பட்டது. நுகர்வோரின் நலம் பேணும் வகையில் தரத்துடன் கூடிய பால் விநியோகம் செய்யப்படும். இயந்திர தொழில்நுட்பம் காரணமாக ஏதேனும் அளவு குறை இருப்பின் உடனடியாக நுகர்வோர்களுக்கு , அதற்குரிய உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு மாற்று பால் பாக்கெட்டுகள் வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டது.
ஜெயக்குமார் விமர்சனம்
இந்நிலையில், முன்னதாக ஆவின் பால் எடை குறைப்பு சர்ச்சை குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார். ”இவர்கள் விஞ்ஞானப்பூர்வமாக ஊழல் செய்து சர்க்காரியா கமிஷனால் குற்றவாளி என அடையாளம் காணப்பட்டவர்கள். ஊழல் செய்வது இவர்களுக்கு கைவந்த கலை.
பால்வளத்துறை அமைச்சர் நாசர் தன் முன்னோர்கள் வழியில் அறிவியல்பூர்வமாக ஊழல் செய்துள்ளார். பால் பாக்கெட்டில் இருக்கும் பாலை திருடி ஏறக்குறைய பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய பாலைக் கூட குறைத்து ஆதாயம் தேடியுள்ளனர்.
பால்வளத்துறை அமைச்சர் மீது குற்றச்சாட்டு
தமிழ்நாடு முழுவதும் பால் உற்பத்தியாகிறது. அதில், நாள்தோறும் ஐந்தரை லட்சம் லிட்டரை நாசர் எனும் பூனைக்குட்டி குடித்துவிட்டது. முதலமைச்சர் ஸ்டாலின் அவரது தந்தைக்கு ஊர் முழுவதும் சிலை வைத்து அரசு கஜானாவை காலி செய்கிறார். மீனவர்கள் அன்றாடம் காய்ச்சிகள். கடலில் பேனா வைப்பதால் மீனவர்களின் வாழ்வாதாரம் முழுவதும் பாதிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஆவின் நிறுவனத்தில் நாள்தோறும் இரண்டு கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார்.
“தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு 70 லட்சம், 500 மில்லி பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படும் நிலையில், இந்த மோசடி மூலம் நாள் ஒன்றுக்கு 2 கோடியே 16 லட்சம் ரூபாய் அளவுக்கு கொள்ளை நடந்துள்ளது. இந்த விவகாரத்தில் முழுமையான நீதி விசாரணை நடத்தி, தவறிழைத்தவர்கள் அனைவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்