நடிகர் விஜய்யின் முதல் பிளாக்பஸ்டர் படமான பூவே உனக்காக வெளியாகி இன்றுடன் 27 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 


இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் மகன் என்ற அடையாளத்துடன் 1992 ஆம் ஆண்டு நாளைய தீர்ப்பு படம் மூலம் அறிமுகமான விஜய்க்கு ஒரு 4  ஆண்டுகளுக்கு சொல்லிக் கொள்ளும்படியான படங்கள் அமையவே இல்லை. இதில் பல படங்கள் அவரது அப்பா இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கியது. இந்த நிலையில் தான் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் விஜய் நடிக்கப்போகிறார் என்ற தகவல் வெளியானது. விக்ரமனும், சூப்பர்குட் பிலிம்ஸூம் அதற்கு முன்னால் பல வெற்றிப் படங்களை கொடுத்த நிலையில் விஜய்யை வைத்து தேவையில்லாமல் ரிஸ்க் எடுக்கிறார்கள் என பலரும் நினைத்தார்கள். 


ஆனால் எல்லாவற்றையும் தவிடுபொடியாக்கி “பூவே உனக்காக” படம் மகத்தான வெற்றி பெற்றதோடு, விஜய்யின் சினிமா கேரியரில் முதல் பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது. 






கதையின் கரு


ஒரு ஊரில் இந்து, கிறிஸ்துவ மதங்களைச் சேர்ந்த இரு நண்பர்கள் வீட்டில் உள்ள இருவர் காதலிக்கின்றனர். காதலர்கள் வீட்டை விட்டு வெளியேற நண்பர்களாக இருந்த குடும்பம் எதிரியாக மாறுகின்றது. இதற்கிடையில் 25 ஆண்டுகளுக்குப் பின் இந்த இரு குடும்பங்களின் பேரன் என சொல்லிக் கொண்டு விஜய் வருகிறார். அவர் இருகுடும்பங்களையும் இணைத்து வைக்கும் முயற்சியில் ஈடுபடும்போது மீண்டும் அந்த குடும்பத்தில் காதல் பிரச்சினை முளைக்கிறது. இதற்கிடையில் விஜய்யின் மனைவி என சொல்லிக் கொண்டு சங்கீதா வருகிறார். விஜய் அந்த இரண்டு வீட்டின் பேரன் இல்லை என சங்கீதா சொல்ல, உண்மையில் விஜய் யார்? அவர் ஏன் இருகுடும்பங்களையும் சேர்த்து வைக்க மெனக்கெடுகிறார்? என்பதை பிளாஸ்பேக் காட்சிகளோடு  அழகாக சொல்லியது “பூவே உனக்காக” 


ஏகப்பட்ட நட்சத்திரங்கள் 


ஹீரோவாக விஜய். ஹீரோயினாக சங்கீதா நடிக்க, இரண்டாவது ஹீரோயினாக அஞ்சு அரவிந்த் இப்படத்தில் அறிமுகமாகியிருந்தார். அதேபோல் இந்து குடும்பத்தில் மலேசியா வாசுதேவன், நம்பியார், விஜயகுமாரி ஆகியோரும், கிறிஸ்தவ குடும்பத்தைச் சேர்ந்தவர்களகா ஜெய்கணேஷ், நாகேஷ்,விஜயகுமாரியும் நடித்திருந்தனர். சார்லி காமெடி காட்சிகளில் கலக்க, அவருக்கு இணையாக மீசை முருகேசனும் அசத்தியிருப்பார். காதல் ஜோடிகளாக சிவா - தாரிணி, சக்திகுமார் - அஞ்சு அரவிந்த நடித்திருந்தனர். விக்ரமன் மீதான நட்பின் காரணமாக நடிகர் முரளி பாடல் ஒன்றில் நடித்திருப்பார். 


நான் தான் வீட்டை விட்டு ஓடிப்போன சிவா - தாரிணியின் பையன் என விஜய் சொல்லிக்கொண்டு இருக்கையில், உண்மையான மகளே நான் தான் என சங்கீதா சொல்லும் காட்சி  படம் பார்த்தவர்களையும் அப்ப விஜய் யாரு? என்ற கேள்வியை எழுப்பும் வகையில் திரைக்கதை வடிவமைக்கப்பட்டிருந்தது. 


தேனிசை பாடல்களை கொடுத்த எஸ்.ஏ.ராஜ்குமார் 


இந்த படத்தின் பாடல்கள் மிகப்பெரிய பலமாக அமைந்தது.குறிப்பாக சொல்லாமலே யார் பார்த்தது, ஆனந்தம் ஆனந்தம் பாடலும் எவர்க்ரீன் பாடலாக அமைந்தது. இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமாருக்கு இப்படம் 50வது படமாக அமைந்தது. 


சுகமான ஒருதலைக் காதல்


ஒருதலைக்காதல் என்றாலே சோகமானது தான் என்ற கருத்தை தூக்கி எறிந்து விட்டு, அதுவும் ஒரு சுகம் தான் என்பதை இப்படம் சொல்லியது. குறிப்பாக விஜய், அஞ்சு அரவிந்தை ஒருதலையாக காதலிப்பார். ஆனால் அஞ்சுவோ சக்திகுமாரை விரும்புவார். தான் ஆசைப்பட்டது நான் நடக்கல.. தான் காதலிச்ச பொண்ணு ஆசைப்பட்டதாவது நடக்கட்டுமே என விஜய் எடுக்கும் முடிவு  இன்றைக்கும் பலரது வாழ்க்கையிலும் தொடர்கிறது. 


சிந்திக்க வைத்த வசனங்கள் 


“மதம் மனுசங்க கிட்டதான் இருக்கு.. ஆனால் காதல் காக்கா, குருவிகிட்ட கூட இருக்கு”, “காதல்ங்கறது ஒரு செடில பூக்கிற பூ மாதிரி. உதிர்ந்துருச்சின்னா உதிர்ந்ததுதான்” என ஆங்காங்கே சொல்லப்பட்ட வசனங்கள் பெரும் வரவேற்பை பெற்றது. தமிழகத்தின் பல ஊர்களிலும் 100 நாட்களைக் கடந்து ஓடிய பூவே உனக்காக, அதிகப்பட்சமாக 270 நாட்கள் சில ஊர்களில் ஓடியது.