கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் -2 படம் விறுவிறுப்பாக உருவாகி வரும் நிலையில், அதன் முதல் பாகமான “இந்தியன்” படம் வெளியாகி இன்றோடு 27 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
முதல்முறையாக இணைந்த கூட்டணி
ஜென்டில்மேன்,காதலன் படங்களை இயக்கிய பிறகு தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் என்ற பெயருக்கு ஷங்கர் சொந்தக்காரர் ஆக மாறியது இந்தியன் படத்தின் மூலமாக தான் என்றே சொல்லலாம். 1996 ஆம் ஆண்டு மே 9 ஆம் தேதி வெளியான இந்தியன் படத்தில் கமல்ஹாசன், சுகன்யா, மனிஷா கொய்ராலா, ஊர்மிளா, கஸ்தூரி, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். முதல்முறையாக கமலும் - ஷங்கரும் இப்படத்தில் இணைந்தனர்.
கதை சுருக்கம்
சுதந்திரப் போராட்ட தியாகியாகவும், ஊழல் செய்யும் மகனாகவும் என இரட்டை வேடத்தில் கமல் நடித்திருப்பார். லஞ்சம் கொடுக்காததால் தன் மகள் உயிர் பறிபோறிவதும், லஞ்சம் கொடுத்ததால் தன் மகன் அனுமதி கொடுத்த பள்ளி குழந்தைகள் செல்லும் பேருந்து விபத்துக்குள்ளாவதையும் பொறுத்துக் கொள்ள முடியாத சுதந்திரப் போராட்ட தியாகியான தந்தை, ஊழலுக்கு எதிராகவும், தன் மகனுக்கு எதிராகவும் என்ன முடிவு எடுக்கிறார் என்பதே இப்படத்தின் கதையாகும்.
தாக்கத்தை ஏற்படுத்திய கூட்டணி
இன்றைய இந்தியா முழுமைக்கும் தலைவிரித்தாடும் லஞ்சம், ஊழலுக்கு எதிராக எடுக்கப்படும் படங்களை ரசிகர்கள் கொண்டாடுவார்கள். அதில் முன்னோடியானது ‘இந்தியன்’ படம் . சேனாபதியாக வரும் அப்பா கமல், வர்மகலை தெரிந்த ‘இந்தியன் தாத்தா’ வாக அனைவராலும் கொண்டாடப்பட்டார். குறிப்பாக பிளாஷ்பேக் காட்சிகளில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தையும், சுதந்திரப் போராட்டக் காலகட்டத்தை அச்சு அசலாக திரையில் உருவாக்கியிருந்தார் கலை இயக்குநர் தோட்டா தரணி.
இந்தியன் படத்தின் சிறப்புகள்
- முதல் 2 படங்களில் பாடல்களில் மட்டும் பிரமாண்டம் காட்டியிருந்த ஷங்கர், இந்த படத்தில் பாடல்கள் மட்டுமல்லாது காட்சிகளிலும் மிரட்டியிருப்பார். அன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியை இது மிகப்பெரிய சாதனையாக அமைந்தது.
- இந்தியன் படம் கமல் நடிப்பில் மிகப்பெரிய மைல்கல்லாக அமைந்தது. இதற்காக மூன்றாம் முறையாக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை அவர் பெற்றார். மாற்று சினிமா மட்டுமல்ல கமர்ஷியல் சினிமாவிலும் நான் ஹீரோ என்பதை கமல் நிரூபித்தார்
- செயற்கையான ஒப்பனை எனப்படும் பிராஸ்தடிக் மேக்கப் (prosthetic makeup) முதல்முறையாக இந்திய சினிமாவில் அறிமுகம் செய்தவர் கமல் தான். இதற்காக ஹாலிவுட்டில் இருந்து மைக்கேல் என்ற நிபுணரை தமிழுக்கு அழைத்து வரப்பட்டார். இந்த மேக்கப் போட்டுக் கொண்டு 70 வயது முதியவராக கமல் நடித்தார்.
- திரையில் 42 வயது நடிகரான கமல் தோன்றியபோது, அவரை 70 வயதுடையவராகவே அனைவரும் நினைத்தனர். நடிகை சுகன்யாவும் இதே மேக்கப் உடன் வயதானராக நடித்திருந்தார்.
- ஷங்கரின் பலங்களில் ஒன்றாக கருதப்பட்ட எழுத்தாளர் சுஜாதா இந்த படத்தில் தான் முதல்முறையாக அவருடன் இணைந்தார். ஜீன்ஸ் தவிர தான் உயிரோடு இருக்கும்வரை ஷங்கர் இயக்கிய அனைத்துப் படங்களுக்கும் சுஜாதா வசனம் எழுதினார்.
- இந்தியன் படம் தான் கமலுடன் ஏ.ஆர்.ரஹ்மான் இணைந்த படம். இப்படம் அவரின் ஆல்டைம் பேவரைட் ஆல்பங்களில் ஒன்றாக அமைந்தது. அக்காலத்தில் மிக அதிக பொருட்செலவில் உருவான மிக அதிக வசூலைக் குவித்த இப்படம் 1995ல் வெளியான பாட்ஷா பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது.
- இந்தி நடிகை ஊர்மிளா தமிழில் நடித்த ஒரே படம் இந்தியன் தான். தொலைக்காட்சி, யூடியூபிலும், ஓடிடி தளங்களிலும் இன்றளவும் அதிகம் பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இந்தியன் உள்ளது. அந்த அளவுக்கு ரசிகர்களை கவர்ந்த இந்தியன் படம், 2ஆம் பாகமாக 27 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.