இன்று தமிழ் சினிமாவின் உச்சபட்ச நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் நடிப்பில் சமீப காலமாக வெளியாகும் படங்கள் அனைத்தும் மாஸ் ரகங்களாகவே இருந்து வருகின்றன. அப்படி இருந்தும் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்கள் ரசித்து கொண்டாடிய விஜய்யை மிகவும் மிஸ் செய்கிறார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை. அதற்கு உதாரணமாக வெளியான ஒரு படம் தான் 1998ம் ஆண்டு கே. செல்வபாரதி இயக்கத்தில் வெளியான 'நினைத்தேன் வந்தாய்' திரைப்படம். காமெடி கலந்த இந்த பேமிலி டிராமா  வெளியாகி இன்றுடன் 26 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 


 




ஒரு ஹீரோ இரண்டு ஹீரோயின் கான்செப்ட் தமிழ் சினிமாவில் புதிதில்லை என்றாலும் இப்படம் கொஞ்சம் ஸ்பெஷல். காரணம் அந்த ஹீரோயின்கள் இருவரும் அக்கா தங்கைகள். ஹீரோ கல்யாணம் செய்து கொள்ள போவது அப்பா பார்த்த பெண்ணையா அல்லது கனவில் பார்த்து ரசித்து நேரில் காதலித்த பெண்ணையா என்பது தான் படத்தின் கிளைமாக்ஸ். இந்த கான்செப்டை மையமாக வைத்து அதில் பல ரசிக்க வைக்கும் காமெடிகளை சேர்த்து பார்வையாளர்களுக்கு சிறந்த என்டர்டெயின்மென்ட் படமாக அமைக்கப்பட்டு இருந்தது. 


விஜய்க்கு ஜோடியாக ரம்பா மற்றும் தேவயானி நடிக்க, மணிவண்ணன், வினு சக்கரவர்த்தி, சார்லி, ஆர். சுந்தர்ராஜன், செந்தில், மலேசியா வாசுதேவன் உள்ளிட்ட ஏராளமானோர் இப்படத்தில் நடித்திருந்தனர். விஜய் படங்களில் வழக்கமாக இருக்கு பஞ்ச் டயலாக் எதுவும் இல்லாமல் மிகவும் எதார்த்தமான ஒரு நடிப்பை மிக சிறப்பாக வெளிப்படுத்தி இருந்தார். ரம்பாவின் அழகும் தேவயானியின் வெகுளித்தனமும், தேனிசை தென்றல் தேவாவின் இசையில் படத்தின் ஹைலைட். முழுக்க முழுக்க ஃபேமிலி ஆடியன்ஸை கவர்ந்த ஒரு திரைப்படம் 'நினைத்தேன் வந்தாய்'. 


 




கனவில் வரும் பெண்ணுக்கு தொப்புள் அருகில் மச்சம் இருக்கும் என்ற ஒரே ஒரு அடையாளத்தை வைத்து கொண்டு காதலியை தேடி விஜய் அலையும் காட்சிகள், தேவயானியை பெண் பார்க்கும் படலம், மரத்துடன் ஹீரோயின்கள் பேசும் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. 


தேவாவின் இசையில் மல்லிகையே மல்லிகையே, வண்ண நிலவே வண்ண நிலவே, என்னவளே என்னவளே பாடல்கள் இன்றும் எவர்கிரீன் பாடல்களாக முணுமுணுக்க வைக்கிறது. தேவாவின் ஸ்பெஷல் ஜானரில் மனிஷா மனிஷா போல் இருப்பாளா... பாடலும் அதிகம் விரும்பபட்டது. 


ஒவ்வொரு முறை டிவியில் இப்படம் ஒளிபரப்பாகும் போது சலிப்பில்லாமல் பார்க்க தூண்டும் ஒரு நல்ல பொழுதுபோக்கு அம்சமாக உருவான திரைப்படம். படத்தில் எந்த இடத்திலும் சலிப்பு தட்டும் அளவிலான காட்சிகள் இடம்பெறாமல் மிகவும் அழகாக திரைக்கதை அமைக்கப்பட்டு இருந்தது கூடுதல் பிளஸ் பாய்ண்ட். இப்படம் இன்று மட்டுமல்ல எத்தனை எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் ஃபேமிலியுடன் கவலைகளை மறந்து ரசிக்க வைக்கும் ஒரு நல்ல என்டர்டெயின்மென்ட் திரைப்படம்.