பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கியின் (Paytm Payments Bank) நிர்வாக இயக்குநர், தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து விலகுவதாக சுரீந்தர் சாவ்லா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக 'One 9' கம்யூனிகேசன் நிறுவனம் (One 97 Communications Limited) வெளியிட்டுள்ள தகவலில் ”பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கியின் நிர்வாக இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான (MD & CEO) சுரீந்தர் சாவ்லா (Surinder Chawla ) தனிப்பட்ட காரணங்களுக்காகவும் சிறந்த தொழில் வாய்ப்புகள் குறித்து ஆராய்வதற்காகவும் ஏப்ரல் 8, 2024 அன்று ராஜினாமா செய்தார். ஜூன் 26-(26.06.2024)ம் தேதியில் இருந்து அவர் பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
30 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டுள்ள பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி விதிமுறைகளை மீறி செயல்பட்டதற்காக பேடிஎம் நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்தது. Paytm-இன் தாய் நிறுவனமான One97 கம்யூனிகேசன் லிமிடெட். மற்றும் Paytm Payments Bank நிறுவனங்களின் கணக்குகள், ரிசர்வ் வங்கியால் முடக்கப்பட்டது. இதை தொடர்ந்து பேடிஎம் வாலெட், பேடிஎம் பாஸ்டேக், பேடிஎம் என்எம்டிசி கார்டுகள் ஃபாஸ்டேக் உள்ளிட்ட சேவைகளை பயனாளர்கள் தொடர முடியாது நிலை ஏற்பட்டது. இந்நிறுவனம் தொடர்ந்து சிக்கல்களைச் சந்தித்து வருகிறது.
மேலும், 'One 9' கம்யூனிகேசன் மார்ச் 1, 2024 அன்று வெளியிட்ட அறிவிப்பின்படி, அந்நிறுவனத்துக்கும் பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கிக்கும் இடையிலான கிட்டத்தட்ட அனைத்து ஒப்பந்தங்களும் நிறுத்தப்பட்டுள்ளன என குறிப்பிட்டிருந்தது. அதோடு, பிப்ரவரி 26, 2024 அன்று நாங்கள் வெளியிட்ட தகவலின்படி, பேடிஎம் பேமன்ட்ஸ் பேங்க் லிட் நிறுவனத்தின் குழு ஒரு தலைவர் உட்பட ஐந்து இயக்குநர்கள் உடன் மறுசீரமைக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பேடிஎம் பேமன்ட்ஸ் பேங்க் லிட் நிறுவனத்தில் 2023, ஜனவரி மாதம் சுரிந்தர் சாவ்லா எம்.டி. மற்றும் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றார். இந்திய ரிசர்வ் வங்கியின் தடை நடவடிக்கைக்கு உள்ளானது. இது நிறுவனத்தை கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கியது. இந்நிலையில், பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கியின் தலைமை செயல் அதிகாரி & எம்.டி. தனது பொறுப்பை ராஜினாம செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பேடிஎம் பேமன்ட்ஸ் வங்கியின் தலைமை பொறுப்பில் இருந்தவர் ராஜினாமா செய்துள்ளது பங்குச்சந்தையிலும் அதன் தாக்கம் எதிரொலித்தது. இதன் பங்குகள் 1.95% சரிவைக் கண்டது.