2கே கிட்ஸ்களுக்கு இன்றைய பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே படம் தான் தெரியும். அதேசமயம் 90ஸ் கிட்ஸ் ரசிகர்களின் பேவரைட் ஆன படங்களில் ஒன்றான விஜய் நடித்த “லவ் டுடே” படம் பற்றி தெரியுமா என்று கேட்டால் இல்லை என்றே சொல்லலாம். அந்த படம் வெளியாகி இன்றோடு 26 ஆண்டுகள் ஆகிறது.
விஜய்யின் ரசிகர்களுக்கு ஃபேவரைட்
1997 ஆம் ஆண்டு அறிமுக இயக்குநர் பாலசேகரன் இயக்கிய லவ் டுடே படத்தில் விஜய் , சுவலட்சுமி,மந்திரா,ரகுவரன், ராஜன் பி.தேவ் கரண் மற்றும் ஸ்ரீமன் ஆகியோர் நடித்திருந்தனர். ஷிவா இசையமைத்த இப்படம் 175 நாட்களுக்கு மேல் ஓடி விஜய்யின் ஆரம்ப காலக்கட்டத்தில் அவர் நடிப்பிலும் தேர்ந்த நடிகர் என நிரூபித்தது. இப்படம் தெலுங்கில் சுஸ்வாகதம் என்றும் , கன்னடத்தில் மஜ்னு என்றும் , இந்தியில் க்யா யேஹி பியார் ஹை என்ற பெயரிலும் ரீமேக் செய்யப்பட்டது.
சுருக்கமான கதை
தன்னுடன் விருப்பத்துக்கு நோ சொல்லாத அப்பாவுடன் இருக்கும் விஜய்க்கு, கண்டிப்பு மிக்க போலீஸ்காரரின் மகளான சுவலட்சுமியை கண்டதும் காதல் என்றாகி விடும். ஆனால் காதலில் விருப்பம் இல்லாத சுவலட்சுமி, விஜய்யின் கோரிக்கையை நிராகரிக்கிறார். நண்பர்கள் எவ்வளவோ சொல்லியும் காதல் மீதான மோகத்தால் நேரத்தை வீணாக்குகிறார். ஒரு கட்டத்தின் விஜய்யின் காதல் நெருக்கடி, சுவலட்சுமி குடும்பத்துடன் ஊரை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்படுகிறது. இதனால் விஜய் அவரை கண்டுபிடிக்க புறப்படுகிறார்.
ஆனால் அதற்குள் அப்பா ரகுவரன் விபத்தில் இறக்கிறார். நண்பர்கள் விஜய் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் போகிறது. அவரது இறுதிச்சடங்குகளை கூட செய்ய முடியாத நிலை விஜய்க்கு ஏற்படுகிறது. இறுதியாக சுவலட்சுமி விஜய்யின் காதலை ஏற்றுக் கொண்டாலும், அந்த காதல் தான் எல்லாவற்றையும் இழக்க காரணமாக அமைந்தது என கூறி விஜய்யை காதலை வெறுக்கிறார்.
ரசிகர்களை கவர்ந்த கிளைமேக்ஸ்
இயக்குநர் பாலசேகரன் ஒரு நேர்காணலில், இந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் விஜய், சுவலட்சுமி ஒன்று சேர்ந்திருந்தால் நிச்சயம் படம் ஓடாமல் போயிருக்கும். ஆனால் காதல் பெறுவது மட்டுமல்ல, இழப்பதும் தான் என்பதை அழுத்தமாக சொல்லியதால் ரசிகர்களின் வரவேற்பை பெற்றதாக குறிப்பிட்டிருப்பார்.
பலமாக அமைந்த பாடல்கள்
அறிமுக இசையமைப்பாளரின் இசை என தெரியாத அளவுக்கு ஷிவா இசையமைத்திருந்தார். ‘என்ன அழகு.. எத்தனை அழகு’ பாடல் பலரின் ஆல்டைம் பேவரைட்டாக இன்றளவும் உள்ளது.