முகவரி படம் வெளியாகி 24 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை தொடர்ந்து அப்படத்தின் இயக்குநர் வி.இசட்.துரை நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த 2000 ஆம் ஆண்டு அஜித்குமார், ஜோதிகா, ரகுவரன், கே.விஸ்வநாத், விவேக், மணிவண்ணன், சித்தாரா, ஜெய் கணேஷ் உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியான படம் ‘முகவரி’. வி.இசட். துரை இயக்கிய இப்படத்திற்கு எழுத்தாளர் பாலகுமாரன் வசனம் எழுதியிருந்தார். தேவா இப்படத்துக்கு இசையமைத்திருந்தார். அஜித் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்திருந்தது.
இந்நிலையில் முகவரி படம் வெளியாகி இன்றோடு 24 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதுதொடர்பாக இயக்குநர் வி.இசட். துரை பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “ஓ மை காட்.. முகவரி திரைப்படத்தின் அற்புதமான 24வது ஆண்டு விழாவைக் கொண்டாட வேண்டும். அது பல நினைவுகளை கொண்டு வரும்.
எனக்கும், பி.சி.ஸ்ரீராம் சாருக்கும் இது ஒரு ஸ்பெஷல் படம் என்பதில் உறுதியாக இருக்கிறேன். இந்த நேரத்தில் தயாரிப்பாளர் எஸ்.எஸ்.சக்ரவர்த்தி சார், ரகுவரன் சார், விவேக் சார், மணிவண்ணன் சார் ஆகியோரை மிஸ் செய்வது இயல்புதான். இருந்தாலும் படத்திற்கு அவர்கள் அளித்த பங்களிப்பு எப்போதும் நினைவில் இருக்கும். இந்த மகத்தான நினைவுகளை ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் சாருடன் கொண்டாட முடிந்ததில் மகிழ்ச்சி. மேலும் திரு.அஜித், ஜோதிகா மேடம் மற்றும் படக்குழுவினருக்கு சிறப்பு நன்றி” என நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.
மறக்க முடியாத படம்
முகவரி படத்தில் அஜித் ஸ்ரீதர் என்னும் கேரக்டரில் நடித்திருந்தார். இசையமைப்பாளராக வர வேண்டும் என்ற ஆசையில் தொடர்ந்து விடா முயற்சியோடு போராடும் இளைஞராக அவரது கேரக்டர் உருவாக்கப்பட்டிருந்தது. ஸ்ரீதரின் ஆசைக்கு குடும்பமே உறுதுணையாக நிற்பதும், நடுவே காதல் வந்தாலும், லட்சியத்தை விடாப்பிடியாக கொண்டிருந்த அஜித்தின் அந்த கேரக்டர் என்றைக்கும் ஸ்பெஷலானது தான்.
உண்மையில் முகவரி படம் அஜித் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படமாகும். இலக்கை நோக்கி போகும் போது தோல்வியடைந்தால் துவண்டு விட கூடாது, விடாப்பிடியாக முயற்சிக்க வேண்டுமென்ற அந்த அடிப்படை கதை அனைவருக்கும் பாடமாக அமைந்தது.தேவாவின் இசையில் அனைத்து பாடல்களும் மிகுந்த வரவேற்பை பெற்றது.
இந்த படத்துக்குப் பின் வி.இசட்.துரை தொட்டி ஜெயா, காதல் சடுகுடு, நேபாளி, 6, ஏமாளி, இருட்டு, தலைநகரம் 2 உள்ளிட்ட பல படங்களை இயக்கியிருந்தாலும் இன்றளவும் அவர் பெயரை சொன்னால் நம் அனைவருக்கும் முகவரி படம் தான் நினைவுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Mayilsamy: மயில்சாமி மறைந்து ஓராண்டு நிறைவு.. மறவாமல் நினைவுகளை பகிரும் ரசிகர்கள்!