நடிகர் மயில்சாமி மறைந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் அவரின் நினைவுகளை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து தங்கல் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். 


ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்தவர் மயில்சாமி. நடிப்பின் மீது தீராத ஆர்வம் கொண்ட அவர் சிறுவயதிலேயே சினிமாவில் நடிக்க சென்னை வந்தார். 1984 ஆம் ஆண்டு பாக்யராஜ் இயக்கி நடித்த ‘தாவணி கனவுகள்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த மயில்சாமி வடிவேலு, விவேக் தொடங்கி சந்தானம் வரை அனைவருடனும் இணைந்து பிரபலமான காமெடி காட்சிகளில் நடித்துள்ளார். 


இதேபோல் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், விக்ரம், சூர்யா என அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களில் மயில்சாமி நடித்துள்ளார். சின்னத்திரையில் “காமெடி டைம்” என மயில்சாமி தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வந்த மயில்சாமி, 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.


தீவிர எம்ஜிஆர் பக்தரான அவர் கஷ்டம் என யார் வந்து கேட்டாலும் உதவி செய்வார். அதேபோல் ஆன்மீகத்திலும் தீவிரமாக தன்னை ஈடுபடுத்தியிருந்தார். இப்படியான நிலையில் கடந்தாண்டு சிவராத்திரி அன்று சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள மேகநாதேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற பூஜையில் பங்கேற்றார். இதில் டிரம்ஸ் இசைக்கலைஞர் சிவமணியுடன் இணைந்து சிவ பாடல்கள் பாடியிருந்தார்.  






இதன்பின்னர் அதிகாலை 3 மணிக்கு வீட்டுக்குச்  சென்ற அவருக்கு, 3.30 மணியளவில் நெஞ்சுவலி ஏற்பட்டது. அவருக்கு ஏற்கனவே 2 முறை இதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டிருந்த நிலையில் மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டதால் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால் மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்ததில் வரும் வழியிலேயே மயில்சாமி உயிர் பிரிந்ததாக தெரிவித்தனர். 


மயில்சாமி மறைவு சம்பவம் ஒட்டுமொத்த திரையுலகினரையும் அதிர்ச்சியில ஆழ்த்தியது. பல  முன்னணி பிரபலங்கள் அனைவரும் மயில்சாமி உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். அவரின் மறைவுக்கு பின்னர் தான் மயில்சாமி பற்றிய நெகிழ்ச்சியான பல நிகழ்வுகள் வெளியுலகுக்கு தெரிய வந்தது. இன்றுடன் மயில்சாமி மறைந்து ஓராண்டு நிறைவடைந்து விட்டது. இன்றும் டிவியில் அவர் நடித்த காட்சிகளை பார்த்தால் நம்மை அறியாமல் ஒரு நிமிடம் மயில்சாமி மறைவை நினைத்து வருத்தப்படாதவர்கள் யாரும் இல்லை. அந்த அளவுக்கு சொல்லாலும்,செயலாலும், நடிப்பாலும் மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து விட்டார். அவரின் நினைவுக்கு என்றுமே அழிவில்லை.