தென்காசி மாவட்டம் குற்றாலம் வனச்சரக எல்கைக்குட்பட்ட பகுதியில் உள்ள அரசு காப்புகாட்டில் ஏராளமான அரிய வகை மரங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. மேலும் அங்குள்ள நீர்த்தேக்கத்தை ஒட்டியிருக்கும் பகுதிகளில் அதிக அளவு தேக்கு மரங்கள் வளர்ந்திருக்கின்றன. பல லட்சக்கணக்கில் மதிப்புடைய இந்த தேக்கு மரங்கள் அவ்வப்போது சட்டவிரோதமாக சிலர் வெட்டி கடத்துவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த சூழலில் அரசு காப்பு காட்டில் உள்ள தேக்கு மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக குற்றாலம் வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில், குற்றாலம் வனத்துறையினர் அரசு காப்புகாட்டில் உள்ள தேக்கு மரத்தை வெட்டி கடத்திய நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், பழைய குற்றாலம் அருகே உள்ள ஆயிரப்பேரி பகுதியை சேர்ந்த கண்ணதாசன் (வயது 36) என்ற நபர் தேக்கு மரத்தை வெட்டியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கண்ணதாசனை கைது செய்து விசாரணை செய்தனர்.
அப்போது விசாரணையில் அவரும், அவருடன் சேர்ந்து அதே பகுதியை சேர்ந்த காட்டுராசா (வயது 35) என்ற நபரும் தேக்கு மரத்தை வெட்டி சட்டவிரோதமாக கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. அதனை தொடர்ந்து, அவர்கள் இருவரையும் கைது செய்த வனத்துறையினர் அவர்களை செங்கோட்டை குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர். பல லட்சம் மதிப்புள்ள தேக்குமரத்தை சட்டவிரோதமாக கடத்திய இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல கடந்த டிசம்பர் மாதம் குற்றாலம் வனச்சரகத்திற்குட்பட்ட மோட்டை நீர்த்தேக்க பகுதியில் சிலர் சட்டவிரோதமாக தேக்குமரம் கடத்துவதாக வந்த தகவலையடுத்து வன அலுவலர் சீதாராமன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது சட்டத்திற்கு புறம்பாக தேக்கு மரங்களை வெட்டி கடத்துவதற்கு தயார் நிலையில் வைத்திருப்பதை கண்ட அதிகாரிகள் அது தொடர்பாக விசாரணை நடத்தினர், விசாரணையில் முகமது கனி, பொன்னுத்துரை ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். மேலும் சில நபர்களுக்கும், முக்கிய பிரமுகர்களுக்கும் தொடர்பிருப்பது தெரிய வந்தது, அவர்களை பிடிக்கும் பணியிலும் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். அப்போது தேக்குமரம் கடத்த உடந்தையாக இருந்த புளியரை வனவர் செல்லத்துரை வனக்காப்பாளர் சார்லஸ் ஆகிய இருவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட வன அலுவலர் முருகன் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது மீண்டும் தேக்குமரத்தை வெட்டி கடத்திய கும்பல் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.