ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட சில படங்கள் இந்தியா சார்பாக ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப் படுகின்றன. பெரும்பாலான படங்கள் இறுதி பட்டியல்வரை சென்று வெளியேறுகின்றன. சமீபத்தில் இந்தியா சார்பாக மலையாளத்தில் கடந்த ஆண்டு வெளியான 2018 படம் தேர்வாகி வெளியேறியது. டொவினோ தாம்ஸ் முக்கிய கதாபாத்திரமாக நடித்திருந்த இப்படம் 2018 ஆம் ஆண்டு கேரள மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.


இதனைத் தொடர்ந்து பல்வேறு சர்வதேச விழாக்களில் அங்கீகாரம் பெற்ற இந்தப் படம் இறுதியாக ஆஸ்கருக்கும் தேர்வாகியது. ஒரு படம் ஆஸ்கருக்கு தேர்வானதைத் தொடர்ந்து அந்த படத்தை விளம்பரம் செய்ய பல்வேறு வழிமுறைகள் கடைபிடிக்கப் படுகின்றன. இது தொடர்பாக 2018 படத்தின் இயக்குநர் ஜூட் ஆண்டனி  சமீபத்தில் பேசியுள்ளார்.






ஒரு விளம்பரத்துக்கு 12 லட்சம்


”ஒரு படம் ஆஸ்கருக்கு தேர்வாகிறது என்றால் அந்தப் படத்தை முதலில் நாம் அந்தப் படத்தை விளம்பரம் செய்யவேண்டும். இதற்கென்று தனியாக ஒருவர் இருப்பார். திரைப்படத் துறையைச் சேர்ந்த பல்வேறு நபர்களுக்கு ஒரு பார்ட்டி ஒருங்கிணைத்து அவர்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் . இந்த பார்ட்டியின் யார் யாரை அழைக்க வேண்டும் , எந்த நாட்களில் எங்கு படத்தை திரையிட வேண்டும் என்பதை அந்த ஏஜெண்ட் நமக்கு தெரிவிப்பார். ஒரு படம் நன்றாக இருந்து அது மக்களுக்கு பிடித்தால் மட்டும் போதாது அந்தப் படத்தின் இயக்குநரையும் அவர்களுக்கு பிடிக்க வேண்டும். அதே நேரத்தில் பிரபல பத்திரிகைகளில் நம் படத்தைப் பற்றிய ஒரு பக்க விளம்பரம் கொடுக்க வேண்டும். இந்த விளம்பரத்திற்கு மட்டுமே சுமார் 12 லட்சம் செலவாகும்.’ என்று அவர் தெரிவித்துள்ளார்.


இந்தப் படத்தை இவ்வளவு குறைவான செலவில் எடுக்க முடியும் என்பதே பெரும்பாலானவர்களுக்கு ஆச்சரியமாக இருந்ததாக ஜூட் ஆண்டனி தெரிவித்திருந்தார். 


தமிழில் இருந்து ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப் பட்ட படங்கள்


சிவாஜி கணேசன் நடித்த தெய்வமகன் , கமல்ஹாசன்  நடித்த தேவர் மகன் , நாயகன், குருதி புனல், ஹே ராம், வெற்றிமாறன் இயக்கிய விசாரணை, பி.எஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் வெளியான கூழாங்கல் உள்ளிட்டப் படங்கள் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.