நடிகர் விஜய் நடித்துள்ள கில்லி படம் வெளியாகி இன்றோடு 19 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், அந்த படத்திற்கு பின்னால் நடந்த நிகழ்வுகளை காணலாம். 


கடந்த 2004 ஆம் ஆண்டு ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில், தரணி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் “கில்லி”. இந்த படத்தில் த்ரிஷா, பிரகாஷ்ராஜ், தாமு, மயில்சாமி, ஆஷிஷ் வித்யார்த்தி உள்ளிட்ட பலரும் நடித்து இருந்தனர். வித்யாசாகர் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். கில்லி படம் விஜய்யின் கேரியரில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அவர் ஆக்‌ஷன் ஹீரோவாக பரிணாமம் அடைவதற்கு இந்த படம் மிக முக்கிய காரணமாக அமைந்தது. 


இந்தப் படம் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்கள் இங்கே:


* தில், தூள் என விக்ரமை வைத்து அடுத்தடுத்து ஹிட் கொடுத்த தரணி மூன்றாவது முறையாக அவருடன் தான் இணைவார் என நினைத்த நிலையில் சற்றே மாறுதலாக விஜய்யுடன் இணைந்த முதல் படம் கில்லி. இந்த படத்தின் வெற்றியால், 2008 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான குருவி படத்தையும் தரணி இயக்கியிருந்தார். * கில்லி படத்தின் வசனங்கள் ஆண்டுகள் பல கடந்தாலும் மறக்க முடியாதவை. இந்தப் படத்திற்கு வசனம் எழுதியவர் பரதன். இவர் விஜய் நடித்த அழகிய தமிழ் மகன், பைரவா ஆகிய படங்களை இயக்கியவர். அதே சமயம் அஜித் நடித்த வீரம் படத்திற்கும் வசனம் எழுதியிருந்தார். 


* இந்தப் படம் வெளியாகி இருந்தபோது நம்மில் பலரும் குழந்தைகளாக, இளம் வயதினராக இருந்திருப்போம். ஆனால் விருப்பு வெறுப்பின்றி பிற நடிகர்களின் ரசிகர்களும் கில்லி படத்தை கொண்டாடினார்கள் என்பதே உண்மை. 


*  கில்லி படத்தில் தான் முதல்முறையாக விஜய்யும் திரிஷாவும் ஜோடி சேர்ந்தார்கள். அந்த படத்தின் வெற்றியால் சிம்ரனுக்கு பிறகு த்ரிஷா தான் விஜய்க்கு பெஸ்ட் ஸ்கிரீன் பேர் என்னும் அளவுக்கு மாறி போனது. தொடர்ந்து இந்த ஜோடி திருப்பாச்சி, ஆதி, குருவி ஆகிய மூன்று படங்களில் இணைந்து நடித்தார்கள். தற்போது 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் லியோ படத்தின் மூலம் விஜய்யும் த்ரிஷாவும் ஜோடி சேர்ந்துள்ளார்கள். 


* இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு பேட்டியில் தன்னால் கில்லி படத்தின் தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸை மறக்க முடியாது என தெரிவித்துள்ளார். தன் வகுப்பில் கிட்டதட்ட பல பேர் தியேட்டரில் இருந்ததாகவும் கூறியுள்ளார். 


* கில்லி படத்தின் பெரும்பாலான சீன்களில் நடிகர் விஜய்க்கு மேக்கப் கிடையாது என ஒரு நேர்காணலில் படத்தின் ஒளிப்பதிவாளர் கோபிநாத் தெரிவித்துள்ளார். குறிப்பாக ஒரு காட்சியில் சட்டை இல்லாமல் வியர்வையோடு, அழுக்கான உடம்போடு நின்றது, கபடி காட்சியில் நிஜமான மணலை எடுத்து உடலிலும் முகத்திலும் பூசிக் கொண்டது, ஷூட்டிங் சமயத்தில் ஏற்பட்ட முகப்பருவை கூட மறைக்காமல் அப்படியே நடித்திருப்பது என விஜய் மிக இயல்பாக இருந்ததாக புகழ்ந்துள்ளார். 


* கில்லி படத்தை தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தயாரிக்க முடிவெடுத்தபோது வித்யாசாகர் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவரிடம் ஏ.எம்.ரத்னம் ஒக்கடு படத்திலிருந்து இரண்டு பாடல்களை அப்படியே பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் இதனை மறுத்த வித்யாசாகர் இதைவிட சூப்பர் ஹிட் ஆன பாடல்களை போட்டுத் தருகிறேன் என சொல்லி சென்றுள்ளார். இதனை ஏ.எம்.ரத்னம் நம்பவே இல்லை. கடைசியில் பார்த்தால் கில்லி படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியது. குறிப்பாக அப்படி போடு பாடல் இன்றளவும் பெஸ்ட் குத்துப் பாடல்களில் ஒன்றாக உள்ளது. 


* இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களில் ஒன்றான அர்ஜுனரு வில்லு பாடலை எழுத பாடலாசிரியர் கபிலன் கிட்டத்தட்ட மூன்று மாதங்களை எடுத்துக் கொண்டதாக சொல்லப்படுகிறது. இன்றளவும் சமூக வலைத்தளங்களில் இப்பாடலை கேட்டுக் கொண்டு வாகனங்களை இயக்கினால் அதிவேகத்தில் செல்லும் அளவுக்கு ஒரு உத்வேகத்தை கொடுக்கும் என்ற பதிவுகளை காணலாம். 


* இப்பாடலை பதிவு செய்த பின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று நேராக வித்யாசாகர் தரணியிடம் போட்டுக் காட்டியுள்ளார்.  பாடலை கேட்ட விஜய் இது யார் படத்தில் இடம் பெற்ற பாட்டு என கேட்க வித்யாசாகர் நம் படத்தில் தான் இடம் பெறுகிறது அதற்கு தான் மாண்டேஜ் காட்சிகள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என சொல்லி இருக்கிறார் இதனை கேட்டது மகிழ்ச்சியில் விஜய் ஆரவாரம் செய்துள்ளார். 


* தமிழ் சினிமாவில்  நடிகர் பிரகாஷ்ராஜ் எத்தனையோ படங்களில் நடித்தாலும், ரசிகர்களின் ஆல் டைம் பேவரைட் என்பது கில்லி முத்துப்பாண்டி கேரக்டர் தான். அந்த அளவுக்கு விஜய்க்கும் பிரகாஷ்ராஜுக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி ஒத்துப் போயிருந்தது. இருவரும் அதன்பின் சிவகாசி , போக்கிரி, வில்லு, வாரிசு என பல படங்களில் ஹீரோ வில்லனாக மோதினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.