கணக்கற்ற தொடர்களையும், எண்ணற்ற படங்களையும் அடக்கிய தளம் நெட்ஃப்ளிக்ஸ். இதில், ஆயிரம் தொடர்கள் இருந்தாலும் ரசிகர்களின் கவனத்தை சில சீரிஸ்கள் மட்டுமே ஈர்க்கும்; அந்த வகையில், சீரிஸ் பிரியர்களின் மனதில் நல்ல இடத்தை பிடித்த தொடர் 1899. இத்தொடரின் முதல் சீசன், கடந்த நவம்பர் மாதம் 18ஆம் வெளியானது.
1899 கதை:
லாக்டவுனில், நெட்ஃப்ளிக்ஸ் பயனாளிகள் அனைவரையும் விரும்பி பார்க்க வைத்த தொடர் டார்க். டைம் ட்ரேவல்/சஸ்பென்ஸ் த்ரில்லர் என ரசிகர்களின் கற்பனைக்கு எட்டாத அளவிற்காக கதையம்சத்தை இதில் வைத்திருந்தனர்; ஜெர்மன் மொழியில் உருவான இத்தொடரை, பாரன் போ ஓடர் என்ற நிறுவனம் தயார் செய்திருந்தது; இவர்களே, இந்த வருடத்தில் வெளியான 1899 தொடரையும் உருவாக்கியிருந்தனர். இதனால், இத்தொடருக்கு ரசிகர்களிடையே பயங்கரமான எதிர்பார்ப்பு இருந்தது; அதற்கேற்றார் போல், 1899 சீரிஸூம் தரமான கதையுடன், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
டார்க் சீரிஸைப் போலவே, 1899 தாெடரும் சயின்ஸ் ஃபிக்ஷன் கதையைத்தான் கொண்டிருந்தது. ஆரம்ப காட்சி முதல், இறுதி காட்சி வரை ரசிகர்களை கண் கொட்டாமல் பார்க்க வைத்த தொடர் இது. இதில் இடம் பெற்றிருந்த பல மொழி பேசும் கதாப்பாத்திரங்களும், அவர்களது நடிப்பும் கதைக்கு ஏற்றார்போல அனைவரையும் ஈர்த்தது.
இத்தொடரின் முதல் சீசனின் க்ளைமேக்ஸ் காட்சி யாருமே எதிர்பாராத வகையில், பார்ப்பவர்களை வாய் பிளக்க செய்தது. வழக்கமான நெட்ஃப்ளிக்ஸ் தொடர்களைப் போல இந்த தொடரும், பல விதமான கேள்விகளுடன்தான் முடிந்தது; இத்தொடரின் அடுத்தடுத்த சீசன்கள் கண்டிப்பாக வெளிவரும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், அவர்களுக்கு அதிர்ச்சி தருவது போன்ற செய்தியை பார்பன் போ ஓடர் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஷோ கேன்ஸல்!
1899 தொடரை உருவாக்கிய பார்பன் போ ஓடர், தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளனர். அதில், நெட்ஃப்ளிக்ஸ் தளம் 1899 தொடரின் அடுத்த சீசன்களை நிறுத்த முடிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
“1899 தொடர் புதுப்பிக்கப்படாது என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். டார்க் தொடரைப் போல இதையும் இரண்டு மற்றும் மூன்று சீசன்களாக எடுத்து முடிக்க வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டோம். ஆனால், நாங்கள் திட்டமிட்டதுபோல் சில விஷயங்கள் நடக்கவில்லை. அதுதான் வாழ்க்கை; இத்தொடரைப் பார்க்கும் மில்லியன் ரசிகர்களுக்கும் இது ஒரு ஏமாற்றமளிக்கக்கூடிய செய்தி என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. எங்களுடன் இவ்வளவு தூரம் பயணித்த அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றிகள்” என்று பாரன் போ ஓடர் நிறுவனம் குறிப்பிட்டுள்ளனர்.
ஆத்திரத்தில் ரசிகர்கள்:
நெட்ஃப்ளிக்ஸ் தளம் நல்ல நல்ல தொடர்களை முதல் அல்லது இரண்டாவது சீசனிலேயே கேன்சல் செய்வதை வேலையாகக்கொண்டுள்ளது. மைண்ட் ஹண்டர், ஐஆம் நாட் ஓகே வித் திஸ், சென்ஸ் 8 போன்ற பல நல்ல கதைகளையுடய தொடர்களை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் முன்னர் கேன்சல் செய்தது;
அந்த வரிசையில் 1899 தொடரையும் நெட்ஃப்ளிக்ஸ் தளம் கேன்ஸல் செய்துள்ளது ரசிகர்களை கோபமடைய செய்துள்ளது. இதனால், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதள் பக்கங்களில் பலரும் நெட்ஃப்ளிக்ஸை டேக் செய்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.