மத்திய அரசின் 55வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நேற்று ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் நாட்டின் மாநில நிதியமைச்சர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் பங்கேற்றார். இந்த கூட்டத்தின் முடிவில் பல்வேறு வரிகள் மாற்றப்பட்டது.
பாப்கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.:
ஜீன் தெரபி சிகிச்சைக்கு முற்றிலும் வரி விலக்கு அளிக்கப்பட்டு, கருப்பு மிளகு மற்றும் உலர் திராட்சை ஆகியவற்றை விவசாயிகள் வழங்கும்போது விலக்கு அளிக்கப்படுவதாக முடிவு செய்யப்பட்டது. ஆனால், மக்களின் நொறுக்குத் தீனியான பாப்கார்னுக்கு ஜி.எஸ்.டி. வரி உயர்த்தப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாப்கார்ன் பெரும்பாலும் திரையரங்குகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த சூழலில், பாப் கார்னுக்கு 18 சதவீதமாக ஜி.எஸ்.டி. வரி உயர்த்தப்பட்டுள்ளது. கேரமல் செய்யப்பட்ட பாப்கார்னுக்கு 18 சதவீதமாக ஜி.எஸ்.டி. வரி உயர்த்தப்பட்டுள்ளது. பாக்கெட்டில் அடைக்கப்பட்ட மசாலா பாப்கார்னுக்கு 12 சதவீதமும், பாக்கெட் மற்றும் லேபிள் செய்யப்படாத பாப்கார்னுக்கு 5 சதவீதமும் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது.
ஷாக்கில் ரசிகர்கள்:
தமிழ்நாட்டில் உள்ள திரையரங்கில் ஏற்கனவே நொறுக்குத் தீனிகள் விலை வெளியில் விற்கப்படும் கடைகளில் விற்கப்படும் விலையைக் காட்டிலும் பன்மடங்கு அதிகளவு விற்கப்படுகிறது. இந்த நிலையில் மத்திய அரசு தற்போது பாப் கார்னுக்கு 18 சதவீதம் வரியை விதித்திருப்பது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாதாரணமான திரையரங்கிலே பாப்கார்ன் விலை ரூபாய் 50 முதல் ரூபாய் 100 வரை விற்கப்பட்டு வருகிறது. ஆனால், வணிக வளாகங்களில் உள்ள மல்டிப்ளக்ஸ் திரையரங்கில் பாப்கார்ன் விலை ரூபாய் 300 முதல் ரூபாய் 500 வரை விற்கப்படுகிறது. இந்த சூழலில் பாப்கார்ன் மீதான ஜி.எஸ்.டி. வரி உயர்வால் இனி திரையரங்கில் விற்கப்படும் பாப்கார்ன் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேதனையில் ரசிகர்கள்:
தனிப்பட்ட நபராக பெரிய திரையரங்குகளுக்கு படம் பார்க்கச் சென்றாலே ஏராளமான செலவு ஏற்படுவதாலே பலரும் படம் பார்க்க திரையரங்குகளுக்குச் செல்வதை தவிர்க்கின்றனர். குடும்பத்துடன் படம் பார்க்கச் செல்பவர்களுக்கு திரையரங்கில் குறைந்தது 1500 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை செலவு ஏற்படுகிறது. இந்த நிலையில் பாப் கார்ன் மீதான ஜி.எஸ்.டி. வரியில் தியேட்டர்களில் இனி அதிக விலைக்கு பாப்கார்ன் விற்கப்படும் என்று ரசிகர்கள் அச்சப்படுகின்றனர்.
மத்திய அரசு பாப்கார்ன் மீது ஜி.எஸ்.டி. வரியை உயர்த்தியிருப்பதற்கு திரைப்பட விமர்சகர்கள், திரை ஆர்வலர்கள், திரைத்துறையினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் ஏற்கனவே வசூலிக்கப்படுவதாக ரசிகர்கள் வேதனை தெரிவித்து வரும் நிலையில், தற்போது பாப்கார்ன் விலை ஏற்றப்பட்டிருப்பதால் இது திரையரங்கிற்கு வரும் ரசிகர்கள் கூட்டத்தை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.