2000 ஆம் ஆண்டுக்கு பின்னான தமிழ் சினிமாவில் ஒரு படம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது என்றால் அதில் “பருத்தி வீரன்” படம் மிகுந்த முக்கியத்துவம் பெறும். அந்தப்படம் வெளியாகி இன்றுடன் 16 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. அதுகுறித்த நினைவுகளை ரீவைண்ட் செய்து பார்க்கலாம். 


அக்னீப்பரீட்சையில் வென்ற அமீர் 


சூர்யாவின் மாறுபட்ட காதல் படமான ‘மௌனம் பேசியதே’,க்ரைம் த்ரில்லர் படமான ஜீவாவின் ‘ராம்’ என 2 படங்களில் ரசிகர்களை கவர்ந்தாலும், அமீரின் 3வது படமான பருத்திவீரன் படத்தின் ஆரம்பமே மிகுந்த சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. 


காரணம் அமெரிக்காவில் எம்.பி.ஏ முடித்து இயக்குநர் மணி ரத்னத்திடம் உதவி இயக்குநராக ஆய்த எழுத்து படத்தில் பணியாற்றிய “நடிகர்” கார்த்திக்கு இது முதல் படமாகும். அப்பா சிவகுமார், அண்ணன் சூர்யாவை போல இவர் நடிப்பில் மின்னுவாரா என்ற சந்தேகம் இருந்தது. இதேபோல் நடிப்புத்திறமை இருந்தும் அதிர்ஷ்டமில்லாதவர் என பெயரெடுத்த சரவணன், பாரதிராஜாவின் கண்டுபிடிப்பாக இருந்தாலும் பெரிய அளவில் சோபிக்காமல் இருந்த நடிகை ப்ரியாமணி என கேரக்டர்கள் செலக்‌ஷனே தாறுமாறாக இருந்தது. 


ஆனால் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு சொல்லவா வேண்டும். அச்சு அசல் கிராமத்து ஊதாரித்தனம் செய்யும் இளைஞராக கார்த்தி, மாமன் மகனை சுற்றிசுற்றி வந்து காதலிக்கும் பிரியாமணி, வயசுக்கேத்த பழக்கம் இல்லாமல் கார்த்தியுடன் ஊரை சுற்றும் சித்தப்பாவாக சரவணன் என அப்படியே அந்தந்த கேரக்டர்களாக வாழ்ந்திருந்தார்கள். 




அதிரவைத்த பருத்திவீரன் கிளைமேக்ஸ்


மதுரைக்கு அருகில்  இருக்கும் கிராமம் ஒன்றில் ஆதிக்க சாதியை சேர்ந்த தந்தைக்கும், ஒடுக்கப்பட்ட தாய்க்கும் பிறந்தவர் கார்த்தி. விபத்து ஒன்றில் பெற்றோர் இறக்க, சித்தப்பா சரவணன் அரவணைப்பில் ஊதாரித்தனமாக ஊரை சுற்றி சண்டித்தனம்  செய்யும் இளைஞராக வளர்க்கிறார். கார்த்தி அப்பாவின் தங்கை மகளாக வரும் பிரியாமணி அவரை விரட்டி விரட்டி காதலிக்கிறார். யாருக்குமே அஞ்சாதவன், ஆனால் காதலால் மதிக்கத்தக்க மனிதனாக வாழ நினைக்கும் கார்த்தியையும், பிரியாமணியையும் சாதி எப்படிப் பழிவாங்குகிறது என்பதே இப்படத்தின் கதை. 



குறிப்பாக கிளைமேக்ஸ் காட்சி பலராலும் ஏற்றுக்கொள்ளவே முடியாத அளவுக்கு இருந்தது.  பிரியாமணியை கார்த்தி மேல் இருந்த கோபத்தால் சிலர் பாலியல் துஷ்பிரயோகம் செய்கின்றனர். சாகும் நிலையில் அவர் உண்மையை சொல்லி, இதை யாரிடமும் சொல்லக்கூடாது என தெரிவிக்கிறார். அதனை ஏற்று பிரியாமணியை கொல்கிறார். ஆனால் பிரியாமணியின் அப்பா மேல் உள்ள  பழியை தீர்த்ததாக சொல்லி கார்த்தி கொல்லப்படுகிறார். இந்த காட்சி அறத்துடன் இருந்ததாக பலரும் பாராட்டினர். யதார்த்தமாக அமைந்த காட்சிகள் எவர்க்ரீன் படமாக பருத்திவீரனை மாற்றியது. இடையிடையே வரும் கஞ்சா கருப்பு காமெடியும் மீம் மெட்டிரியலாக மாறியது. 


சம்பவம் செய்த யுவன் ஷங்கர் ராஜா


பருத்திவீரனுக்கு இசையமைத்த யுவன் ஷங்கர் ராஜா அதற்கு முன்னால் 40 படங்களுக்கு இசையமைத்திருந்தார். ஆனால் அவரின் முதல் கிராமத்து கதைக்கள படமாக பருத்தி வீரன் அமைந்தது. சவால்களுக்கு மத்தியில் சாதித்து காட்டினார் யுவன். தொடக்கத்தில் வரும் திருவிழா பாட்டு, காதல் பாட்டு, கிராமத்து நாட்டுப்புற குத்துப்பாட்டு என வெரைட்டியாக கொடுத்து ரசிகர்களை கட்டிப்போட்டார். 




நிலைத்து நின்ற பெயர்கள் 


பருத்திவீரனாக கார்த்தி, முத்தழகாக பிரியாமணி, கழுவத்தேவனாக பொன்வண்ணன், செவ்வாழையாக சரவணன், டக்ளஸ் ஆக கஞ்சா கருப்பு என சினிமா ரசிகர்களை எப்போது  கேட்டாலும் அந்தந்த கேரக்டரின் பெயர்களை சொல்வார்கள். 


மறக்க முடியாத நினைவுகள் 


நடிகை பிரியாமணியிடம் அமீர்  கதை சொல்லும் போதே டப்பிங் பேசும் விருப்பத்தை தெரிவித்தார். அமீரும் இந்த படத்தில  அவார்டு வாங்கித்தர்றேன் என சொன்னார், அதனை செய்யவும் செய்தார். இதன்மூலம் தேசிய விருது பெற்ற 5வது தமிழ்ப்பட நடிகையாக மாறினார் பிரியாமணி. இதேபோல் படத்தொகுப்பாளர் ராஜாவுக்கு தேசிய விருது கிடைத்தது. 


பிடுங்கி எடுத்தக் கிழங்கு மாதிரி பண்ணியிருக்க என படம் பார்த்துவிட்டு அமீரை உச்சி முகர்ந்து இயக்குநர் இமயம் பாரதிராஜா பாராட்டினார். தமிழ்நாடு அரசின் சார்பிலான மாநில அரசு விருதுக்கு சிறந்த படமாக 2வது இடத்தை பிடித்தது. சிறந்த நடிகைக்கான விருது பிரியாமணிக்கும், சிறப்பு பரிசு நடிகர் கார்த்திக்கும் கிடைத்தது. 


படப்பிடிப்பின்போது மிகுந்த மன ரீதியாக நெருக்கடியை சந்தித்த தன்னைத் தவிர யாருமே இந்த படம் ஹிட்டாகும் என நினைக்கவில்லை என நேர்காணல் ஒன்றில் அமீர் சொன்னார். ஆனால் நடந்ததோ வேறு...!