தன்னை கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மாவுடன் ஒப்பிட்டு பேச வேண்டாம் என ரசிகர்களுக்கு நடிகர் மிர்ச்சி சிவா வேண்டுகோள் விடுத்துள்ளார். 


அறிமுக இயக்குனர் விக்னேஷ் ஷா பி.என் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’. இந்தப் படத்தில் மிர்ச்சி சிவா ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் மற்றும் அஞ்சு குரியன் நடித்திருக்கிறார்கள். நீண்ட இடைவேளைக்குப் பிறகு பாடகர் மனோ முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.


இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் மிர்ச்சி சிவா, பாடகர் மனோ, தயாரிப்பாளர் பிரபு திலக், இசை அமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பேசிய பாடகர் மனோ, “நான் மிர்ச்சி சிவாவின் ரசிகன். எனது பாடல்களுக்கு அவர் ரசிகர். இப்படம்‌ மிகப் பெரிய வெற்றி பெறும்.  இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த சிவாவுக்கு நன்றி” என தெரிவித்தார். 


இதன்பின்னர் பேசிய சிவா, கொரோனா ஊரடங்கு முடிந்தபிறகு முதலில் தொடங்கிய படம் தான் சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும். இக்கதையை இயக்குநர் விக்னேஷ் ஷா போனில் தான் என்னிடம் சொன்னார். கதை மிகவும் நன்றாக இருந்தது. எனக்கு கதாநாயகியாக மேகா ஆகாஷ் நடிப்பதாக சொன்னார்கள். ஆனால் படப்பிடிப்பு சமயத்தில் ஒரு‌செல்போனை கையில் கொடுத்து இதுதான் மேகா ஆகாஷ் என்றனர். கடைசி வரை மேகா ஆகாஷை கண்ணில் காட்டவில்லை. ஆடியோ வெளியீட்டுக்கு வருவார் என்று வந்து பார்த்தால் இங்கேயும் இல்லை என கலாய்த்தார். 


இப்படத்தில் என்னுடைய டெலிவரி‌பாய் டிசர்ஸ்ட் பிளாட்பாரத்தில் வாங்கினோம். மனோவை படப்பிடிப்பு தளத்தில் பாட்டு பாடச் சொல்லி தொந்தரவு செய்தோம் என ஏகப்பட்ட படப்பிடிப்பு நினைவுகளை சிவா பகிர்ந்து கொண்டார். அப்போது சிவா கேட்டுக்கொண்டதற்காக மனோ பாட்டுப் பாடினார்.


தொடர்ந்து பேசிய சிவா, “தற்போது இயக்குனர் ராம் இயக்கத்தில் படம் நடித்து வருகிறேன். அது ஃபீல் குட் படமாக இருக்கும். அவருடைய கதைக்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்பதால் தான் அவர் என்னை நடிக்க அழைத்தார்” என கூறினார். அதேசமயம் நான் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இல்லை என கூறிய சிவா, பலரும் என்னிடம் கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா போல் இருப்பதாக கூறி நிறைய மீம்ஸ் வருவதாக சொல்கின்றனர்.


ஆனால், “ரோகித் சர்மா போல் என்னால் கிரிக்கெட் விளையாட முடியாது. அவரால் என்னைப் போல் நடனம் ஆட முடியாது” என்று நகைச்சுவையாக பதில் அளித்தார். சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் நாளை (பிப்ரவரி 24) தியேட்டர்களில் வெளியாகிறது.