விக்ரம் படத்தின் 100 ஆவது நாளை கொண்டாடும் விதமாக வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன்,விஜய் சேதுபதி, பஹத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்த விக்ரம் படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே கடந்த ஜூன் 3 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அனிருத் இசையமைத்திருந்த இந்த படத்தில் நடிகர் சூர்யா ரோலக்ஸ் என்ற கேரக்டரில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். இவரே விக்ரம் படத்தின் 3 ஆம் பாகத்திற்கு லீடாக இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் படம் வசூலில் உலகளவில் ரூ.400 கோடிக்கும் வசூலைப் பெற்று சாதனைப் படைத்தது.


 






நீண்ட நாட்களுக்குப் பின் எந்த வித சுய பரிசோதனையும் இல்லாமல், மக்களுக்கு எளிதில் புரியும் வண்ணம் கமல் நடிப்பில் வெளியான கமர்ஷியல் படம் என்பதால் மக்களும் ஆர்வமாக கூட்டம்  கூட்டமாக தியேட்டர்களுக்கு படையெடுத்தனர். இதனால் ஒருமாதம் ஆகியும் பல இடங்களில் ஹவுஸ்புல் காட்சிகளாக விக்ரம் படம் ஓடியது. மேலும் விக்ரம் படத்தின் வெற்றிக்காக இயக்குநர் லோகேஷ் கனகராஜூக்கு கார், உதவி இயக்குநர்களுக்கு பைக், நடிகர் சூர்யாவுக்கு தான் அணிந்திருந்த ரோலக்ஸ் வாட்ச் என பரிசு வழங்கி மகிழ்ச்சிக்குள்ளாக்கினார் கமல்ஹாசன். 


 






அண்மையில் விக்ரம் படம் வெளியாகி 100 நாட்கள் ஆன நிலையில், அதனைக்கொண்டாடும் விதமாக போஸ்டர்கள் வெளியானது. அதனைத்தொடர்ந்து கமல்ஹாசன் பேசும் ஆடியோவும் வெளியிடப்பட்டது. அதில் “வணக்கம். ரசிகர்களின் ஆதரவோடு விக்ரம் படம் 100வது நாளை எட்டியிருக்கிறது..  மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கிறேன்..தலைமுறைகளை தாண்டி என்னை ரசிக்கும் உங்கள் ஒவ்வொருவரையும் மானசீகமாக தழுவிக்கொள்கிறேன். விக்ரம் வெற்றிக்கு காரணமாக இருந்த உங்கள் ஒவ்வொருவருக்கு என் இதயம் கனிந்த நன்றிகள். தம்பி லோகேஷூக்கு என் அன்பும்..வாழ்த்தும்...” என கமல் தெரிவித்து இருந்தார். 






 






இந்த நிலையில் படத்தின் 100 ஆவது நாளை கொண்டாடும் விதமாக டீஸர் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. விக்ரம் படத்தில் முதலாவதாக வெளியிடப்பட்ட டீசரில் கமலின் குரல் மற்றும் சில காட்சிகளை மாற்றி, படம் பூஜை போட்டது தொடங்கி படத்தின் தற்போதைய வெற்றி வரை என ஒரு முழு பயணத்தை அதில் சொல்லிருக்கிறார்கள். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.